1. Home
  2. வர்த்தகம்

புதிய உச்சத்தை தொட காத்திருக்கும் இந்திய பங்குச் சந்தை!

புதிய உச்சத்தை தொட காத்திருக்கும் இந்திய பங்குச் சந்தை!

ஒரு நாட்டின் பங்குச் சந்தை நிலவரத்தை வைத்தே, அந்நாட்டின் பொருளாதார நிலைமையை நாடி பிடித்து சொல்லிவிடலாம். இந்த அளவுக்கு நாட்டின் பொருளாதாரத்தில் பங்குச் சந்தை முக்கிய பங்கு வகிக்கிறது. இந்த வரையறையின்படி, இந்திய பங்குச் சந்தை நிலவரம் தற்போது திருப்திகரமாகவே உள்ளது என நிச்சயமாக சொல்லலாம்.

இன்றைய நிலவரப்படி, மும்பை பங்குச் சந்தையில் (BSE) சென்செக்ஸ் குறியீட்டு எண் 38,383 புள்ளிகள், தேசிய பங்குச்சந்தை (Nifty) குறியீட்டு எண் 11,522 புள்ளிகளுடன் வர்த்தகம் நடைபெற்றது. பங்குச் சந்தை வரலாற்றில் இதுவரை இல்லாத அளவுக்கு, பிஎஸ்இ குறியீட்டு எண் 40,000 புள்ளிகளை விரைவில் தொட உள்ளது முதலீட்டாளர்களின் காதில் தேன் பாய்வது போன்ற, இனிப்பான செய்தி தான்.

ஆனால் அதற்கு முன்பாக மும்பை பங்குச் சந்தை, கடந்த ஆண்டு ஆகஸ்டில் தொட்ட புதிய உச்சமான 38,989 புள்ளிகளை தொட வேண்டியுள்ளது. அதாவது, மும்பை பங்குச் சந்தை தமது பழைய சாதனை இலக்கை மீண்டும் அடைய இன்னும் கிட்டத்தட்ட 600 புள்ளிகள் ஏற்றம் பெற வேண்டியுள்ளது. ஒட்டுமொத்த பங்குச் சந்தை நிலவரம் திருப்திகரமாக இருந்தாலும், பிஎஸ்இ தனது முந்தைய சாதனை குறியீட்டு எண்ணை, கடந்த 6 மாதங்களாக எட்ட முடியாமல் உள்ளது.

இதற்கு வங்கித் துறை, தகவல்தொழில்நுட்ப நிறுவனங்களின் பங்குகளை தவிர ஆட்டோமொபைல்ஸ், உலோகங்கள் மற்றும் கனிமங்கள் துறை சம்பந்தமான பங்குகள் கடந்த மாதம் வரை தொடர்ந்து இறங்குமுகத்தில் இருந்து வந்ததே முக்கிய காரணமாக கருதப்படுகிறது.

அதாவது ஐசிஐசிஐ, ஹெச்டிஎஃப்சி, ஆக்சஸ் வங்கி, ரிலையன்ஸ் குழுமம், இன்போசிஸ், டிசிஎஸ், ஹெச்சிஎல் டெக்னாலஜிஸ் ஆகியவற்றின் பங்குகள் பெரும்பாலான நாட்களில் ஏறுமுகமாகவே இருந்து வருகின்றன. அதேசமயம், டாடா மோட்டர்ஸ், மகேந்திரா அண்ட் மகேந்திரா, மாருதி சுசூக்கி, ஹீரோ மோட்டோ கார்ப்ஸ் ஆகிய நிறுவனங்களின் பங்கு மதிப்புகள் கடந்த ஆகஸ்ட் மாதத்தை ஒப்பிடும்போது முறையே 31, 29, 24 மற்றும் 15 சதவீதம் அளவுக்கு வீழ்ச்சியடைந்தன.

இதன் காரணமாக, கடந்த மாதம் மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் 35,300 புள்ளிகளுக்கு சட்டென்று இறங்கியது. ஓஎன்ஜிசி, கோல் இந்தியா, என்டிபிஎல் உள்ளிட்ட பொதுத் துறை நிறுவனங்களின் பங்குகள் கணிசமாக உயர்ந்ததையடுத்து, பங்குச் சந்தை வீழ்ச்சியிலிருந்து மீண்டு, தற்போது எழுச்சி பெற்று வருகிறது. கடந்த ஒரு மாதத்தில் மட்டும் மும்பை பங்குச் சந்தை மற்றும் தேசிய பங்குச் சந்தை புள்ளிகள் அபரிமிதமாக அதிகரித்துள்ளன.

தற்போது மக்களவைத் தேர்தல் காலம் என்பதால், பங்குச் சந்தை நிலவரம் தினமும் ஏற்றமும், இறக்கமுமாக இருந்து வருகிறது. மத்தியில் தற்போதைய ஆட்சி தொடருமா? அல்லது புதிய ஆட்சி அமையுமா? அந்த ஆட்சியில் என்னென்ன புதிய திட்டங்கள் அறிவிக்கப்படவுள்ளன? என்பன போன்ற கேள்விகளுக்கு விடை கிடைத்த பிறகே முதலீட்டாளர்கள் முழுமூச்சில் பங்குச் சந்தையில் கவனம் செலுத்துவர். எனவே,தேர்தல் முடிவுகள் வெளியான பிறகு வரும் மாதங்களில் இந்திய பங்குச் சந்தை புதிய உச்சத்தை தொடுவது நிச்சயம் என சந்தை நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

newstm.in

newstm.in

Trending News

Latest News

You May Like