Logo

பேனர் கலாசாரத்தை ஒழித்து உயிர் பலிகளை தடுக்க தலைவர்கள் மனது வைப்பரா?  

திமுக தலைவர் ஸ்டாலின்,முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் பன்னீர்செல்வம், உள்ளிட்ட தலைவர்கள் பேனர், அலங்கார வளைவுகள் வைக்க கூடாது என்று எச்சரிக்கை விடுத்துள்ளனர். அதை அவர்கள் நிரந்தரமாக கடைபிடித்தால் போதும் இந்த கலாச்சாரமும் முடிவுக்கு வரும்.
 | 

பேனர் கலாசாரத்தை ஒழித்து உயிர் பலிகளை தடுக்க தலைவர்கள் மனது வைப்பரா?  

மக்களை தொல்லைப் படுத்தினால் தான் அரசியல்வாதிகள் இருப்பது அனைவருக்கும் தெரியும் என்பது தமிழகத்தில் எழுதப்படாத இலக்கணமாக மாறிவிட்டது.

1980களில், தரையை கூட்டும் அளவிற்கு துண்டு போட்டு தங்களை அரசியல்வாதி என்று அடையாளம் காட்டினர்.

பின்னர் தெருவை அடைத்து மேடை அமைத்து கூட்டம் நடத்துவார்கள். இதனால் பல கிலோ மீட்டர் துாரத்திற்கு முன்பே பஸ்களை நிறுத்தி பயணிகளை இறக்கிவிட்டு விடுவார்கள். அப்புறம் என்ன புலம்பியபடி கையில் மூட்டை, பைகளை சுமந்தபடி நடந்து செல்ல வேண்டும். அப்படி நடந்து செல்வர்களுக்கு கூட்டத்திற்கு வராமலேயே யார் ஊருக்கு வந்து இருக்கிறார் என்று தெரிந்துவிடும்.

தேர்தல் ஆணையர் டிஎன் சேஷன் தலையெடுத்து, தேர்தலை ஒழுங்கு செய்த பின்னர் இது போன்ற தொந்தரவுகள் குறைந்தன.

அதன் பிறகு  சினிமாத்துறையில் கட்டவுட் கலாச்சாரம் தொடங்கியது. கதாநாயகர்கள் கட்டவுட்கள் தியேட்டர் வளாகம்,அதன் அருகே உள்ள சாலைகளில் வைக்கப்பட்டன. ரசிகர்கள் அவற்றிக்கு பால் அபிஷேகம் செய்து தங்கள் அபிமானத்தை வெளிப்படுத்தினார்கள். 

சினிமாவை தொடர்ந்து விளம்பர கட்டவுட் வைக்கப்பட்டது. இவற்றையெல்லாம் பார்த்து அரசியல்வாதிகள் தங்கள் கைளில் எடுத்துக் கொண்டனர். 1980–90களின் இறுதி வரை வீதிகள் தோறும் கட்டவுட் வைக்கப்பட்டன. காற்றில் அவை கீழே விழுந்து காயம் உயிர் பலி போன்றவை ஏற்பட்டன.பின்னர் கட்டவுட் வைக்க கூடாது என்று ஜெயலலிதா, கருணாநிதி கண்டித்த பினனர் கட்டவுட் கலச்சாரம் அரசியலில் குறைந்தது. ஆனாலும் இன்றும் கூட திரைப்படங்களில் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது.

சூர்யா நடித்த என்ஜிகே திரைப்படத்திற்கு 210 அடி கட்டவுட் வைக்கப்பட்டது. அஜித் படத்திற்கு 190 அடி கட்டவுட் என்றும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது.  தெலுங்கானாவில் பிரபாஸ் நடித்த சாஹோ படத்திற்கு பேனர் கட்டும் போது மின்சாரம் தாக்கி ரசிகர் இறந்தார். இதே போல பல சம்பவங்கள் நடந்தும் கூட ஹீரோக்கள் இது தேவையில்லாத கலச்சாரம் என்று சொல்ல முன்வரவில்லை

2017ம் ஆண்டு கோவையில் எம்ஜிஆர் நுாற்றாண்டு விழா, சாலையின் குறுக்கே அலங்கார வளைவு. செயற்கையான போக்குவரத்து நெரிசல் அப்போது டூவீலரில் வந்த சாப்ட்வேர்  இன்ஜினியர் ரகுபதி  சாலையை மறித்து வைக்கப்பட்ட அலங்கார வளைவில் மோதி சாலையில் விழுகிறார். பின்னால் வந்த வாகனம் அவர் மீது ஏறியது. ரகுபதி சம்பவ இடத்திலேயே பலியானார்.

அப்போது சிங்காநல்லுார் தொகுதி எம்எல்ஏ கார்த்திக் ஐகோர்ட்டில் இது தொடர்பாக வழக்கு தொடர்ந்தார்.

இதனை விசாரித்த தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி,நீதிபதி சுந்தர் ஆகியோர் பேனர் வைக்க அனுமதி அளித்தது யார், எவ்வளவு பேனர் வைக்கப்பட்டது என்று சரமாரியாக கேள்வி எழுப்பினர். அதிகாரிகள் கண்ணை மூடிக் கொண்டு அனுமதி கொடுத்துள்ளனர் என்று கண்டித்தனர். 

கடைசியாக அவர்கள் மருத்துவமனைகள், சாலை வளைவுகள், சாலைமையப்பகுதிகளில், பேனர் அலங்கார வளைவுகள், கட்–அவுட் வைக்க கூடாது என்று உத்தரவிட்டனர்.

ஆனால் இதில் ஏதாவது கடைபிடிக்கப்பட்டிருக்கிறதா? தாங்களின் உத்தரவு கடைபிடிக்கப்படவில்லை என்று அறிந்தாலும் ஐகோர்ட் என்ன நடவடிக்கை எடுத்துள்ளது. இந்த கேள்விகளுக்கு இல்லை என்பது தான் பதில்.

இதன் காரணமாகத்தான் செப். 11ம் தேதி சென்னையில் பேனர் விழுந்து பெண் இன்ஜினியர் சுபஸ்ரீ சாலையில் விழ தண்ணீர் லாரி மோதி சம்பவ இடத்திலேயே பலியானார்.

கோவை ரகுபதிக்கும், சென்னை  சுபஸ்ரீக்கும் பல ஒற்றுமைகள். அவர் அமெரிக்காவில் இன்ஜினியராக இருந்தவர். சுபஸ்ரீ அடுத்த மாதம் கனடா செல்லப் போகிறார். இருவரும் சாப்ட் வேர் இன்ஜினியர். 2 பேரும் வாகனங்கள் மோதி இறக்கிறார்கள்.

சுபஸ்ரீ சம்பவத்திற்கு பிறகு ஐகோர்ட் மீண்டும் தனக்கு தானே வழக்கு தொடங்கி உள்ளது. இது தொடர்பாக பல கேள்விகளை எழுப்பி வழக்கை ஒத்தி வைத்துள்ளது.

அதே நேரத்தில் திமுக தலைவர் ஸ்டாலின்,முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் பன்னீர்செல்வம், உள்ளிட்ட தலைவர்கள் பேனர், அலங்கார வளைவுகள் வைக்க கூடாது என்று எச்சரிக்கை விடுத்துள்ளனர். அதை அவர்கள் நிரந்தரமாக கடைபிடித்தால் போதும் இந்த கலாச்சாரமும் முடிவுக்கு வரும்.

இந்த சம்பவங்கள் பின்னணியில் பேசும் போது அனுமதியில்லாமல் பேனர் வைக்க கூடாது  என்று தான் குறிப்பிடப்படுகிறது. அதாவது காற்றில் அனுமதியில்லாத பேனர் மட்டும் தான் விழுமா?

பிளாஸ்டிக்கிற்கு தடைவிதிக்கப்பட்டது. பேனர் தொழில் முடங்கும் நிலை ஏற்பட்டது. உடனே அனைத்து அச்சக உரிமையாளர்கள் ஒன்று இணைந்து அரசுக்கு கோரிக்கை வைத்து மீண்டும் பேனர்கள் தயாரிக்க அனுமதி பெற்றனர்.

அதே போலதான் அனுமதி பெற்றாலும் சரி,அனுமதி பெறாவிட்டாலும் சரி சாலையில் பேனர்கள் வைக்க விதிமுறைகளை கடுமையாக்க வேண்டும்.  மேலும் இரும்பு, மரம் போன்ற சட்டங்கள் பயன்படுத்துவற்கு பதிலாக மெலிதான பொருளை பயன்படுத்த வேண்டும். இது குறித்த ஆய்வுகள் மேற்கொள்ளப்படவேண்டும்.

வடமாநிலங்களில், பிரதமர் வந்தால் கூட நம்ம ஊரில் மஞ்சள் கலரில் மூல வைத்திய மருத்துவமனை பற்றி கழிப்பறைகளில் ஒட்டப்பட்ட சுவரொட்டி அளவிற்கு தான் போஸ்டர் ஓட்டுகிறார்கள். இது போன்ற கலாச்சாரத்தை தமிழத்திலும் கடைபிடிக்க வேண்டும். அதற்கு நம் தலைவர்கள் தான் பிள்ளையார் சுழி போட வேண்டும்.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP