டாக்டர் ஃபெரோஸ் கானின் நியமனத்திற்கு எதிராக பனாரஸ் பல்கலைகழக மாணவர்கள் போராடுவது நியாயமா?

இந்திய கலாச்சாரத்தையும், பண்பாட்டையும் நன்கு அறிந்த ஒருவர் பேராசிரியராக அமைவதற்கு நன்றி கூறாமல், அவருக்கு எதிராக பனாரஸ் பல்கலைகழக மாணவர்கள் போராட்டம் நடத்திக் கொண்டிருக்கின்றனர்.
 | 

டாக்டர் ஃபெரோஸ் கானின் நியமனத்திற்கு எதிராக பனாரஸ் பல்கலைகழக மாணவர்கள் போராடுவது நியாயமா?

இந்திய கலாச்சாரத்தையும், பண்பாட்டையும் நன்கு அறிந்த ஒருவர் பேராசிரியராக அமைவதற்கு நன்றி கூறாமல், அவருக்கு எதிராக பனாரஸ் பல்கலைகழக மாணவர்கள் போராட்டம் நடத்திக் கொண்டிருக்கின்றனர். இதற்கான காரணம் தான் என்ன?? சமஸ்கிருத பாடத்தில் கைதேர்ந்த ஒருவரை மாணவர்கள் வேண்டாம் என்று பிடிவாதமாக இருப்பதற்கான காரணம் என்னவாக இருக்கும்?? 

மிகப்பெரிய காரணம் ஒன்றும் இல்லை, இந்திய கலாச்சாரத்தையும் பண்பாட்டையும் உணர்த்தும் சமஸ்கிருத பாடத்தை ஹிந்து மதத்தை சேர்ந்து ஒருவர் எடுக்க வேண்டுமென்று மாணவர்கள் விரும்புகின்றனர். டாக்டர் ஃபெரோஸ் கான் ஓர் இஸ்லாமியராக இருப்பதே இவர்களின் தற்போதைய போராட்டத்திற்கு காரணம். 

டாக்டர் ஃபெரோஸ் கான், பனாரஸ் பல்கலைகழகத்தில், சமஸ்கிருத பாட வகுப்பில் இருந்த ஒரே முஸ்லிம் மாணவர். கடந்த ஆண்டு சமஸ்கிருத பாடத்தில் பி.ஹெச்.டி பட்டமும் பெற்றுள்ள இவர், ராஜஸ்தானின் ஜெய்பூர் நகரில் உள்ள, கைவினைஞர்களுக்கு பெயர் போன பக்ரூ கிராமத்தில் பிறந்தவர். இவரது பிறப்பிடமே இந்தியாவின் கலை நயத்தை பரைசாற்றும் பகுதி தான்.

இவர் மட்டுமல்லாது, இவரது தந்தை, சகோதரர் என குடும்பமே சமஸ்கிருத பாடத்தில் கைதேர்ந்தவர்கள். இப்படிப்பட்ட இவரை தான் சமஸ்கிருதம் மற்றும் இந்திய கலாச்சார பாடத்திற்கான பேராசிரியராக நியமித்தது பனாரஸ் பல்கலைகழக நிர்வாகம். இவரின் நியமனத்தை எதிர்த்து தான் கடந்த நவம்பர் 5ஆம் தேதி முதல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர் மாணவர்கள். 

இந்த போராட்டத்தை வழிநடத்தும் சக்ரமணி ஓஜ்ஹா கூறுகையில், இந்தியாவின் கலாச்சாரத்தையும் பண்பாட்டையும் உணர்த்தும் ஓர் பாடத்தை எடுப்பது எளிதான காரியமில்லை. அதன் மகத்துவத்தை உணர்ந்த ஒருவர் தான் அதை எடுக்க வேண்டும். அது ஹிந்துக்களால் தான் முடியும்" என்று குறிப்பிட்டுள்ளார்.

இது புதுவிதமான கருத்தாகவே தென்படுகிறது. இந்திய கலாச்சாரத்தை முழுவதுமாக உணர்ந்தவர் எந்த மதத்தை பின்பற்றுபவராக இருந்தால் என்ன. பாடம் நன்றாக எடுக்கப்பட வேண்டும் அதுதானே முக்கியம். ஃபெரோஸ் கானிற்கு அதன் மீது ஈடுபாடும் நம்பிக்கையும் இல்லாமலா அவர் இதில் பி.ஹெச்.டி பட்டம் பெற்றிருப்பார். இவர்களின் கருத்தை வைத்து நாம் நமது வரலாற்றில் சிறிது பின்னோக்கி சென்று பார்க்கும் போது தான் புரிகிறது இவர்களின் கூற்றுக்கள் அர்த்தமற்றவை என்பது. 

இந்தியாவின் ஆட்சிகள்,கலைகள், வர்த்தகம் போன்றவற்றை குறித்து மேற்கத்திய எழுத்தாளர்கள் பலரும் தங்களது புத்தகங்களில் குறிப்பிட்டுள்ளனர். இன்னும் சிலர் ஒருபடி மேலே சென்று, இந்திய கலாச்சாரத்தை பற்றிய தனி புத்தகங்களே வெளியிட்டுள்ளனர். இவ்வளவு ஏன், இந்த ஆண்டின் இலக்கியத்திற்கான பத்மஸ்ரீ விருது யாருக்கு வழங்கப்பட்டது. முஹமது அனிஃப் கான். கடந்த 2014ஆம் ஆண்டிற்கான விருது நஹீத் அபிதி என்கிற இஸ்லாமிய பெண்மணிக்கு வழங்கப்பட்டது. ஹிந்துக்களால் மட்டும் தான் இந்திய கலாச்சாரத்தையும் இலக்கியத்தையும் உணர முடியும் என்றால், இவர்கள் யார் ? எப்படி உணர்ந்தார்கள் ? ராம்ஜன்ம பூமி வழக்கில், தொல்லியல் ஆய்வாளரான கே.கே.முகமது ஹிந்துக்களுக்கு ஆதரவளித்து உண்மையை நிலை நாட்டவில்லையா ?

இது போன்று பலவேறு எடுத்துக்காட்டுகளை கூற முடியும், பல உவமைகளை கூறிக்கொண்டே போக முடியும். ஆனால், இதை உணர வேண்டியது அந்த பல்கலைகழக மாணவர்கள் தான். இந்துக்களால் தான் இந்திய கலாச்சாரத்தை, கலைநயங்களை, இலக்கியங்களை, பண்பாடுகளை உணர முடியும் என்ற எண்ணத்தை முதலில் எடுத்தெரிய வேண்டும். இந்தியா வேற்றுமைகளில் ஒற்றுமை காணும் அழகிய நாடு. இதை கவனத்தில் வைத்து கொண்டு, சின்ன சின்ன விஷயங்களுக்குள் மத வேறுபாட்டை கொண்டு வருவது சரியல்ல. 

இவர்களின் போராட்டத்தில் சிறிதளவேனும் நியாயம் உள்ளதா ?? நிச்சயமாக இல்லை. இவர்கள் ஃபெரோஸ் கானை நிராகரிப்பதற்கு ஒரே காரணம் அவர் ஹிந்து மதத்தை சேர்ந்தவர் இல்லை என்பது மட்டுமே. குறிப்பிடும் வகையில் எந்த ஒரு காரணமும் இல்லாமல், படித்து பட்டம் பெற்ற ஒருவருக்கு எதிராக இத்தகைய போராட்டத்தில் ஈடுபடுவது பாராட்டத்தக்க செயலும் இல்லை, இதற்கு ஆதரவு அளிக்க வேண்டிய அவசியமும் இல்லை. 

நன்றி : அரிஹந்த், ஸ்வராஜ்யா சஞ்சிகை.

Newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP