ஒரு சிப்பிக்குள் பிறந்த ஐந்து முத்துக்கள் : கேரளாவின் அதிசயம்!!!

ஒரே சிப்பிக்குள் ஐந்து முத்துக்களாக பிறந்த கேரளா அதிசயங்களின் கதை.
 | 

ஒரு சிப்பிக்குள் பிறந்த ஐந்து முத்துக்கள் : கேரளாவின் அதிசயம்!!!

கேரள மாநிலம் : பெயரை கேட்டதுமே நம் மனதில் ஜில்லென்ற தென்றலை வீசச் செய்யும் இயற்கை அழகை அள்ளி தெளிக்கின்ற இடம். மா, பலா, வாழை என்று எங்கு பார்த்தாலும் பச்சை பசேலென்று கண்ணுக்கு குளிர்ச்சியாக இருக்கும் கேரளத்தின் அழகிற்கு அழகு சேர்க்கும் விதமாக, கடந்த 1995 ஆம் ஆண்டு நவம்பர் 18ஆம் தேதி, திருவனந்தபுரத்தில் ஓரே பிரசவத்தில் 4 பெண்கள், 1 ஆண் என 5 குழந்தைகளை பெற்றெடுத்தார் ஒரு தாய். அவர்கள் ஐவரும் உத்திர நட்சத்திரத்தில் பிறந்ததால் உத்ரஜா, உதாரா, உத்தாமா, உத்ரா மற்றும் உத்ரஜன் என பெயரிட்டு மகிழ்ந்தனர் அந்த தம்பதியினர். இந்த சந்தோஷத்தை தெரிவிக்கும் வகையில் தனது வீட்டுக்கு "பஞ்ச ரத்தினம்" என்று பெயர் மாற்றினார் தந்தை. 

சாதாரண வணிகரது குழந்தைகளான இந்த ஐவரும் அப்பகுதியின் செல்ல பிள்ளைகளாக வளர்ந்தனர். அவர்களது முதல் பிறந்தநாள், முதல் பள்ளி நாள், முதல் கல்லூரி நாள் என அனைத்தையும் வெகு சிறப்பாக கொண்டாடியது கேரள பத்திரிகைகள். 

நடுத்தர வர்க்கத்தை சேர்ந்த இவர்களது தந்தை இந்த ஐவருக்கும் வறுமையின் நிறம் தெரியாமலும், பாரபட்சம் பார்க்காமலும் அன்புடன் வளர்த்து வந்தார். பண கஷ்டம் இருந்த போதிலும், சீராக மகிழ்ச்சியுடன் சென்று கொண்டிருந்த இவர்களது வாழ்க்கையை புரட்டி போடும் சம்பவமாக கடந்த 2004ஆம் ஆண்டு இவர்களது தந்தை தற்கொலை செய்து கொண்டார். என்ன ஏது என்ற புரியாத நிலையில், குடும்ப பாரத்தை ஒரே ஆளாக தனது தோளில் சுமக்க தயாரானார் பல ஆண்டுகளாக இதய நோயால் அவதிக்குள்ளாகி வந்த இவர்களது தாயார். 

பல ஆண்டுகளின் போராட்டத்தை தொடர்ந்து, சில நல்ல உள்ளங்களின் உதவியுடன் இதய அறுவை சிகிச்சை செய்து கொண்ட தாயார் அதன்பின் ஓர் அரசு வேலையில் அமர்ந்தார். இவர்களின் நிலையை உணர்ந்த சில பத்திரிகைகளும் இவர்களுக்கு உதவ முன்வந்தனர். அதன் பின்னர், அந்த குடும்பத்தின் நிலை கொஞ்சம் கொஞ்சமாக முன்னேற்றமடைய தொடங்கியது. 

"எனது கணவரின் இழப்பு எனது தலையில் ஓர் இடியை விட பலமாக விழுந்தது. அடுத்த என்ன செய்வது என்பதறியாமல், இதய நோயுடன் இந்த 5 குழந்தைகளையும் எப்படி கறை சேர்க்க போகிறோம் என்கிற பயம் என எல்லாம் சேர்ந்து என்னை வாட்டி வதைத்தது. ஆனால், என் குழந்தைகளுக்காக வாழ வேண்டும் என்ற எண்ணம் தான் இப்போது என்னை இங்கே நிற்க வைத்திருக்கிறது" என்று கண்களில் கண்ணீருடன் தனது கடந்த கால நினைவுகளுக்குள் பின்னோக்கி ஓடியபடி கூறினார் கேரளாவின் அதிசயங்களான இந்த ஐவரின் தாய். 

வறுமை, தந்தை இல்லாத துன்பம், தாயின் கண்ணீர் என அனைத்தும் இருந்த போதிலும், படிப்பு என்ற ஏணியில் ஏற தொடங்கிய இந்த ஐவரும், தற்போது நல்ல வேலைகளில் அமர்ந்து நல்ல நிலையில் உள்ளனர். 

இந்நிலையில், 24 வயதை எட்டியிருக்கும் இந்த ஐவரில், நான்கு பெண்களுக்கும் வரும் 2020ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 26ஆம் தேதி குருவாயூர் கோவிலில் வைத்து திருமணம் நடைபெறவுள்ளது. தனது சகோதரிகளின் கல்யாண வேலைகளில் தற்போது பரபரப்பாக ஈடுபட்டுள்ளார் அவர்களது சகோதரர் உத்ரஜன். 

"எத்தனை கஷ்டங்கள் வந்தாலும் குழந்தைகளிடம் அதை காட்டாமல், எந்த வகையிலும் பாரபட்சம் பார்க்காத இவர்களது தந்தையின் கனவை நிறைவேற்றுவதற்காகவே நால்வருக்கும் ஒரே மேடையில் திருமணம் செய்து வைக்க முடிவு செய்துள்ளோம்" என்று மகிழ்ச்சியுடன் கூறிகின்றார் திருவனந்தபுர மாவட்ட கூட்டுறவு வங்கியில் பணிபுரியும் இவர்களின் தாயார்.

Newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP