Logo

பத்திரிகையாளர் கொலைக்கு ராஜபக்சே காரணம்? அமைச்சர் அறிவிப்பு

பத்திரிகையாளர் லசந்த கொலைக்கு மகிந்த அரசே காரணம்- அமைச்சர் ராஜித சோனரத்ன
 | 

பத்திரிகையாளர் கொலைக்கு ராஜபக்சே காரணம்? அமைச்சர் அறிவிப்பு


மகிந்த ராஜபக்சேவின் மோசடித் திட்டங்களை அறிந்திருந்ததன் காரணமாகவே சண்டே லீடர் பத்திரிகையின் ஆசிரியர் லசந்த விக்ரமதுங்க கொலை செய்யப்பட்டார் என, சுகாதாரத்துறை அமைச்சர் ராஜித சோனரத்ன தெரிவித்துள்ளார்.

இலங்கை தலைநகர் கொழும்புவில் இயங்கி வரும் சண்டே லீடர் பத்திரிகை வெளியிடும் செய்திகள் அரசுக்கு வெறுப்பை ஏற்படுத்துவதாக இருந்தது.  அதிலும் முன்னாள் ராஜபக்சே ஆட்சி பொறுப்பேற்றது முதல் அது மிகுந்த அச்சுறுத்தல்களை எதிர்கொண்டது. முக்கியமாக அவரது ஆட்சியின் போது, பாதுகாப்பு செயலாளராக இருந்த கோத்தபாய ராஜபக்சே குறித்த செய்திகள் எவையும் வெளியிடக்கூடாதென நீதிமன்ற ஆணை மூலம் தடை செய்யப்பட்டது.

மேலும் கடந்த 2008ம் ஆண்டு இரு முறை சண்டே லீடர் பத்திரிகை அலுவலகம் தாக்குதலுக்கு உள்ளானது. அதன் உச்சக்கட்டமாக 2009ம் ஆண்டு சண்டே லீடர் பத்திரிகையின் ஆசிரியர் லசந்த விக்ரமதுங்க மர்ம நபர்களினால் சுட்டுக்கொல்லப்பட்டார். இந்த கொலை குறித்து விசாரணை நடந்து வருகின்றது. முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்சேவிடமும் விசாரணைகள் நடத்தப்பட்டது.

ஐக்கிய தேசிய கட்சியின் 71ஆவது மாநாட்டில் கலந்துக்கொண்டு உரையாற்றிய சுகாதாரத்துறை அமைச்சர் ராஜித சோனரத்ன, சண்டே லீடர் ஆசிரியர் லசந்த விக்ரமதுங்க கொலை செய்யப்பட்டதுக்கு மகிந்த அரசே காரணம் என தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், “உக்ரைன் நாட்டுடன் மஹிந்த அரசாங்கம் நடத்த இருந்த முறைகேடான ஒப்பந்தம் குறித்து பத்திரிகையாளர் லசந்த அறிந்திருந்தார். இதையடுத்தே, குறித்த ஒப்பந்தம் கையெழுத்திடுவதற்கு முன்னர் அவர் கொலை செய்யப்பட்டார்" என்றார். அமைச்சரின் பேச்சு பத்திரிகையாளர்கள், பொது மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

சண்டே லீடர் பத்திரிகையின் ஆசிரியர் லசந்த விக்கரமதுங்கவின் 9 ஆவது ஆண்டு நினைவு தினம் இன்று நினைவு கூரப்படும் நிலையில், பொரளை கனத்தையிலுள்ள அவரது நினைவு தூபிக்கு முன்னால் அஞ்சலி செலுத்தப்பட்டது.

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP