Logo

உதவி செய்ய வேண்டாம்? தீங்கு செய்யாமல் இருந்தால் போதும்…

நம்மை நம்பி இருப்பவர்களுக்கு உதவி செய்யவில்லை என்றாலும் பரவாயில்லை ஆனால் கெடுதல் செய்யாமல் தீங்கு நினைக்காமல் இருந்தாலே வாழ்க்கையை நிம்மதியாக கடந்துவிடலாம். ஏனெனில் யாருக்கு என்ன தீங்கு செய்தாலும் அதனுடைய பலன்கள் இரட்டிப்பாகி மீண்டும் செய்தவருக்கே கிடைத்துவிடும் என்பது பெரியோர்களின் வாக்கு. அது அனைத்து உயிரினங்க ளுக்கும் பொருந்தும்.
 | 

உதவி செய்ய வேண்டாம்? தீங்கு செய்யாமல் இருந்தால் போதும்…

நம்மை நம்பி இருப்பவர்களுக்கு உதவி செய்யவில்லை என்றாலும் பரவாயில்லை ஆனால் கெடுதல் செய்யாமல் தீங்கு நினைக்காமல் இருந்தாலே வாழ்க்கையை நிம்மதியாக கடந்துவிடலாம்.  ஏனெனில் யாருக்கு என்ன தீங்கு செய்தாலும் அதனுடைய பலன்கள் இரட்டிப்பாகி மீண்டும்  செய்தவருக்கே கிடைத்துவிடும் என்பது பெரியோர்களின் வாக்கு. அது அனைத்து உயிரினங்க ளுக்கும் பொருந்தும். 

ஒரு ஊரில் உப்பு வியாபாரி ஒருவன் இருந்தான். அவன் எங்கு சென்றாலும் அவனுடைய ஊரில் உள்ள ஆற்றங்கரையைத் தாண்டி தான் செல்ல வேண்டும். தினமும் கழுதையின் மீது உப்பு மூட்டைகளை ஏற்றி பக்கத்து ஊர்களுக்கு சென்று விற்றுவருவான். அவனுடன் செல்லும் கழுதையின் மேல் அவனுக்கு அதிக பாசம் உண்டு.

வாயில்லா பிராணி சிறிதும் துன்பப்படாமல் நமக்காக சுமைகளை ஏற்றியபடி செல்கிறதே என்று அதன் மீது அளவு கடந்த பாசம் வைத்திருந்தான். செல்வந்தனாக இல்லையென்றாலும் அன்றாடம் வறுமையை விரட்டும் அளவு பொருள் ஈட்டி குடும்பத்தையும், கழுதையையும் குறையில்லாமல் வைத்திருந்தான். 

 ஒருமுறை உப்பு மூட்டைகளை ஏற்றியபடி உப்பு வியாபாரியும் கழுதையும் ஆற்றுக்குள் சென்றார்கள். அப்போது கால் இடறி கழுதை நீரில் அமர்ந்துவிட்டது. நீண்ட முயற்சிக்கு பிறகு கழுதையைத் தூக்கிவிட்டான். மூட்டையில் இருந்த உப்பு  நீரில் கரைந்துவிட்டது. கழுதைக்கு சுமையே இருக்கவில்லை. கழுதை மிக சந்தோஷமாக இருந்தது. ஆனால் உப்பு வியாபாரி தன்னுடைய நஷ்டத்தை நினைத்து வருந்தியபடி கழுதையை வீட்டுக்கு கூட்டி வந்தான்.    

அடுத்த நாளும் வியாபாரத்துக்கு சென்றார்கள் கழுதைக்கு ஆற்று பகுதி வந்ததும் நேற்று நடந்தது நினைவுக்கு வந்தது. சுமையைக் குறைக்க இதுதான் வழி என்று தவறி விழுவது போன்று நீருக்குள் விழுந்தது. இன்றும் உப்பு நீரில் கரைந்து நஷ்டமாயின. அப்போதும் உப்பு வியாபாரி   நொந்தபடி வீடு திரும்பினான். இப்படியே ஒரு வாரம் தொடர்ந்து நடந்தது. 

உப்பு வியாபாரி மனைவிக்கு கழுதை மீது சந்தேகம். தன் கணவனிடம் ”சுமை தூக்க கஷ்டப்பட்டுதான் இவை உங்களை ஏமாற்றுகிறது. முதல் முறை தெரியா மல் நடந்திருக்கலாம். ஆனால் அப்போது குறைந்த சுமையின் சுகத்தை தினமும் அனுபவிக்க தந்திரம் செய்கிறது. அதனால் வேறு கழுதை வாங்கிக்கொள்ளுங்கள்” என்றாள்.

உப்பு வியாபாரிக்கு மனைவியின் மீது கோபம் வந்துவிட்டது. ”நமக்காக கஷ்டப்படும் கழுதையைக் கண்டு என்ன வார்த்தை சொல்லி விட்டாய். மீண்டும் ஒருமுறை இப்படிப் பேசினால் அவ்வளவுதான் என்று கோபத்தோடு சொல்லியபடி வெளியேறினான். நடந்ததையெல்லாம் கேட்டுகொண்டிருந்த கழுதைக்கு ஒரே சந்தோஷம். எஜமானன் நம் மீது நம்பிக்கை வைத்திருக்கும் வரை நம்முடைய வேலையைக் காண்பிக்க வேண்டியதுதான் என்று நினைத்தது.

மறுநாள்  உப்பு வியாபாரி கழுதையின் முதுகில் உப்பு மூட்டை ஏற்றும் போது கனம் குறைவாக இருந்தது. அவன் மூட்டையைப் பிரித்து பார்க்க முயன்ற போது அவன்  மனைவி ஓடிவந்தாள். ”வேண்டாம் வேண்டாம் பிரிக்காதீர்கள். நான் தான் உப்பைக் குறைத்து  மூட்டை கட்டியிருக்கிறேன். பாவம் அதனால் சுமை தாங்க முடியவில்லை. உடலில் ஏதோ குறைபாடு போல. ஒரு வாரம் குறைந்த  அளவு எடுத்து செல்லுங்கள்” என்றாள்.

”அதுவும் சரிதான்” என்றபடி கிளம்பினான். வழக்கம் போல் ஆற்றுப்பகுதிக்கு வந்ததும் கழுதை நீரில் விழுந்து மூழ்கி எழுந்தது. மூட்டையில் பஞ்சு இருந்ததால் பஞ்சி நீரில் மூழ்கி எடையைக் கூட்டி யது. உப்பு மூட்டையின் கனத்தை விட பலமடங்கு பெருத்திருந்தது. அவற்றால் நடக்க முடியவில்லை. என்ன முயற்சி செய்தும் அவற்றால் முடிய வில்லை. எஜமானியம்மாவின் வேலை இது என்று புரிந்து கொண்டது. திருடனுக்கு தேள் கொட்டியது போல் மெல்லவும் முடியாமல் விழுங்கவும் முடியாமல் வீடு வந்து சேர்ந்தது. உப்பு வியாபாரி “இன்றும் இப்படி செய்துவிட்டது. நீ சொல்வது சரிதானோ என்று சந்தேகமாக இருக்கிறது. நாளை ஒரு நாள் பார்க்கலாம்.

இல்லையென்றால் வேறு கழுதைக்கு ஏற்பாடு செய்ய வேண்டியதுதான்” என்றான் உப்பு வியாபாரி. விலங்கு என்றும் பாராமல் அன்பு காட்டி வளர்த்துவரும் எஜமானனுக்கு இனி தீங்கு நினைக்க கூடாது என்று வருந்திய கழுதை இவ்வளவு நல்ல உள்ளம் படைத்த எஜமானனுக்கு தீங்கு செய்துவிட்டோமே இனி உண்மையாக நடந்து கொள்ள வேண்டும் என்று முடிவு செய்தது. மீண்டும் எஜமானனுக்கு உழைக்க தொடங்கி தன்னுடைய இறுதி நாள் வரை மகிழ்ச்சியாக கழித்தது. 

எல்லா தவறுகளையும் ஆரம்பத்திலேயே உணர்ந்து திருந்திவிட்டால் மன்னிப்பு உண்டு. ஆனால் ஒவ்வொரு தவறுக்கும் ஒரு முறை மட்டுமே மன்னிப்பு உண்டு. 
 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP