எத்தனை கோடி துன்பம் வந்தால் என்ன

துன்பத்திலும் இன்பத்திலும் ஆண்டவனை நினைத்துக்கொண்டே இருந்தால் அவனது அருள் தடை யில்லாமல் கிடைத்துக்கொண்டே இருக்கும் என்று சொல்வார்கள்.

எத்தனை கோடி துன்பம் வந்தால் என்ன
X

துன்பத்திலும் இன்பத்திலும் ஆண்டவனை நினைத்துக்கொண்டே இருந்தால் அவனது அருள் தடையில்லாமல் கிடைத்துக்கொண்டே இருக்கும் என்று சொல்வார்கள்.அதிலும் தர்மநெறியில் வாழ்பவர்களின் பக்கம் தான் இறைவன் துணை நிற்பார்.

மகாபாரதத்தில் கண்ணன், பாண்டவர்களின் பக்கம் நின்றதற்கு காரணம் அவர்கள் பக்கம் இருக்கும் நியாயம்தான்.எத்தனையோ சோதனைக் கட் டத்திலும் அவர்களுக்கு துணையாய் நின்றார் கண்ணன்.ஒருமுறை துர்வாசமுனிவர் தன்னுடைய 16 ஆயிரம் சீடர்களோடு துரியோதனனைக் காண சென்றார். துர்வாசமுனிவருக்கு கோபம் அதிகமாக வரும். கையோடு சாபமும் கொடுத்துவிடுவார் என்பதால் அஞ்சிய துரியோதனன் அவரை வாயிலில் வரவழைத்து உபசரித்து அவனது கைகளாலேயே விருந்து பரிமாறி அவரை மகிழ்வித்தான்.

அவனது உபசரிப்பில் மகிழ்ந்த துர்வாசமுனிவர் உனக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்று நினைக்கிறேன் துரியோதனா. என்ன வேண்டும் என்று கேளேன் என்றார். துரியோதனன் பாண்டவர்களை எப்படியாவது இவரது கோபத்துக்கு ஆளாக்க செய்ய வேண்டும் என்று நினைத்தான். அதனால் துர்வாசரிடம் ஐயா எங்களை மகிழ்வித்தது போல் நீங்கள் காம்யவனத்துக்கு சென்று பாண்டவர்களின் இல்லத்தில் தங்கி திரெளபதி கையால் உணவருந்த வேண்டும் என்று கேட்டுகொண்டான்.

ஏனெனில் திரெளபதியிடம் இருக்கும் அட்சயபாத்திரம் அள்ள அள்ள குறையாத உணவை கொடுத்தாலும் அதை எல்லோருக்கும் கொடுத்து பாஞ்சாலி சாப்பிட்டு முடித்தால் அதன் சக்தியை இழந்துவிடும். அப்போது துர்வாசருக்கும் அவரது சீடர்களுக்கும் பாஞ்சாலி உணவு கொடுக்காமல் தவிப்பாள். துர்வாசர் கோபம் கொண்டு சாபமிடுவார் என்று மனக்கணக்கில் மகிழ்ந்தான் துரியோதனன். துர்வாசரும் இலேசுப்பட்டவரல்ல. பிறரை துன்புறுத்தி பார்த்து மகிழ்பவரே.

துர்வாசரைக் கண்ட பாண்டவர்கள் அவரை இன்முகத்தோடு வரவேற்றார்கள்.உபசரிப்பு முடிந்ததும் துர்வாசர் பாஞ்சாலியிடம் நாங்கள் நீராடி விட்டு வருகிறோம் மகளே. நீ உணவை தயார் செய்து வை என்று சென்றார்.செய்வதறியாமல் தவித்த பாஞ்சாலி கண்ணனை வேண்டினாள். கண்ணன் வந்து திரெளபதி எனக்கு பசியாக இருக்கிறது. சீக்கிரம் உணவைக் கொண்டு வா என்றார். திரெளபதிக்கு அழுகை வந்துவிட்டது.

கண்ணனிடம் நான் சாப்பிட்டு முடித்து அட்சய பாத்திரத்தையும் கழுவி வைத்து விட்டேன் கண்ணா என்றாள்.கண்ணன் புன்னகைத்தப்படி பரவாயில்லை திரெளபதி அதை எடுத்து வாயேன் என்றார். திரெளபதி கொண்டு வந்த பாத்திரத்தில் ஒரு பருக்கை சோறு ஒட்டியிருந்தது. அதை எடுத்து கண்ணன் வாயில் போட்டு என்னை போல இந்த உலகில் இருக்கும் அனைத்து ஜீவ ராசிகளுக்கும் பசியும் அடங்கட்டும் என்றான்.

நீராடிய பிறகு துர்வாசர் தன் சீடர்களோடு திரும்பிவந்தார். திரெளபதிக்கு அடுத்து என்ன நடக்குமோ என்னும் அச்சம் உண்டானது. ஆனால் துர்வாசர் நாங்கள் அனைவரும் சாப்பிட்டுவிட்டோம். இதற்காக நாங்கள் வருந்துகிறோம். இறைவனது துணை உங்களுக்கு இருக்கும் வரை உங்களை யாராலும் வெல்லமுடியாது. உங்களுக்கு கிடைக்க வேண்டிய அனைத்தும் கிட்டும். நடக்க வேண்டிய நன்மைகள் விரைவிலேயே நடக்கும் என்று வாழ்த்திவிட்டு சென்றார்.

துரியோதனின் கெடுதல் மிக்க எண்ணம் இங்கு ஈடேறவில்லை. துர்வாசரிடம் சாபம் வாங்காமல் வாழ்த்துக்களைப் பெற்றார்கள் பாண்டவர்கள்.
எத்தனை கோடி துன்பம் வந்தால் என்ன. இறைவனின் துணை இருக்கும் போது அவையெல்லாம் விலகி போகாதா என்ன...

newstm.in

newstm.in

Next Story
Share it