Logo

சுந்தரமூர்த்தி நாயனார் -1

மார்பை நவரத்தினங்கள் அலங்கரிக்க, இடுப்பில் அரை நாண் கயிறு மின்ன,கால்களில் சலங்கை கள் கொஞ்ச வீதியில் சிறு தேர் உருட்டி தளிர் நடைபோட்டு விளையாடிக் கொண்டிருந்தார்.
 | 

சுந்தரமூர்த்தி நாயனார் -1

சுந்தர மூர்த்தி நாயனார் சைவ சமயத்தில் போற்றப்படும் சமயக்குரவர்கள் நால்வரில் ஒருவர். 63 நாயன்மார்களில் ஒருவர். இவர் திருநாவலூர் என்னும் திருத்தலத்தில் சடையனார் என்பவருக்கும் இசைஞானியாருக்கும் மகனாக பிறந்தார். பெற்றோர்கள் இவருக்கு நம்பியாரூரார் என்னும் பெயரை சூட்டி மகிழ்ந்தார்கள்.

குழந்தைப் பருவம் கடந்த நிலையில் நம்பியாரூராரின் முகத்தில் தெய்வ ஒளி தோன்றியது. இவரது மார்பை நவரத்தினங்கள் அலங்கரிக்க, இடுப் பில் அரை நாண் கயிறு மின்ன,கால்களில் சலங்கைகள் கொஞ்ச வீதியில் சிறு தேர் உருட்டி தளிர் நடைபோட்டு விளையாடிக்கொண்டிருந்தார்.
திருநாவலூர் பெருமானைத் தரிசித்து திரும்பிய அரசர் நரசிங்கமுனையாருக்கு நம்பியாரூராரின் அழகு முகத்தைக் கண்டதும் மனம் குளிர்ந்தது.  மனதில் அளவில்லா ஆனந்தத்தை உண்டாக்கியது.

தேரை நிறுத்தி இறங்கி வந்த அரசர் குழந்தையை அணைத்து உச்சி மோர்ந்தார். குழந்தையின் பேரழகும் தெய்வ ஒளி பொருந்திய முகம் அவர் மனதை விட்டு மறையாது போல் தோன்றவே என்ன செய்தேனும் இந்தக் குழந்தையை உடன் அழைத்துச் செல்ல வேண்டும் என்னும் ஆவலைக் கொண்டார்.

குழந்தையை அணைத்தவாறே குழந்தையின் பெற்றோர்களிடம் சென்றார். அரசர் குழந்தையைத் தூக்கி கொண்டு வருவதைக் கண்டு சடையனா ரும், இசைஞானியார் அம்மையும்  பதறி ஓடி வந்தார்கள். அரசனை வரவேற்ற போதுதான் சடையனாரும், அரசரும் பால்ய வயது முதலே சிநேகி தர்கள் என்பதை அடையாளம் கண்டு கொண்டார்கள். அரசர் பெருமகிழ்ச்சி பூண்டார்.

அரசர் சடையனாரிடம் நண்பா உன் குழந்தையின் பேரழகில் நான் சொக்கி நிற்கிறேன். அவனை வளர்க்கும் பேறை மறுக்காமல் எனக்கு நீ தர வேண்டும் என்று கூறினார். அரசனின் அன்பால் நெகிழ்ந்த சடையனாரும், இசைஞானியாரும் மறுமொழி பேசாமல் இறைவனின் அவா அதுதான் என்றால் அதுவும் மகிழ்ச்சியே என்று குழந்தையை அரசனிடம் தந்தார்கள். அரசன் ஆனந்தத்துடன் குழந்தையை அழைத்துக்கொண்டு அரண் மனை சென்றார்.

ஆரூரார் அரண்மனையில் இளவரசர் போல் வாழ்ந்தார். அனைத்து கலைகளும் அவருக்கு கற்றுத்தரப்பட்டது. மத நூல்கள், ஆகம நூல்கள் எல்லா வற்றிலும் தேர்ச்சி பெற்று சிறப்பாக வளர்ந்தார். அவருக்கு பருவ வயது வந்ததும் அரசர் அவருக்கு திருமணம் செய்விக்க விரும்பி ஆரூராரிடம் சம்மதம் கேட்டார். தங்கள் விருப்பப்படி ஆகட்டும் என்று  சொல்லவே மகிழ்ந்த அரசர் பெண் தேடுதலில் தீவிரமாக இறங்கினார்.

புத்தூர்  சடங்கவி சிவாச்சாரியாரின் புதல்வி மணமகளாக தேர்வு செய்யப்பட்டு திருமண ஓலையை உற்றார் உறவினர்களுக்கு அனுப்பினார்கள் திருமண நாளும் வந்தது. திருநாவலூர் தாண்டி புத்தூரில் திருமணம் நடைபெறுவதால் திருமண ஏற்பாடுகள் கோலாகலமாக ஏற்பாடு செய்யப் பட்டது.

திருமணத்துக்கு முதல் நாள் ஆரூரார் உற்றார் உறவினர் புடைசூழ மேள தாளங்கள் முழங்க இளவரசராய் வலம் வந்தார். அலங்காரம் மன்னனுக் குரியதாக இருந்தாலும் அந்தணர் கோலத்துக்குரிய அலங்காரத்தையும் செய்து கொண்டிருந்தார்.சரிகை வேட்டியும், வைர கடுக்கண் அணிந்து சந் தனம் பூசிய திருமார்பில் நவரத்ன மாலைகள், மாணிக்கங்கள் இழைந்த  அணிகலன் அணிந்து அழகு திருமகனாக காட்சியளித்தார்.

திருமணப் பெண்ணுக்கு பொன் தட்டுகளில் சீர்வரிசை ஏந்தி அனைவரும் சூழ ஆரூரார் புத்தூரை நெருங்கினார். மணமகள் வீட்டில் ஊர் எல்லை யில் இருந்தே வரவேற்புகள் அமர்க்களப்படுத்தப்பட்டது. வீதிகள் முழுக்க மாலைகளும், தோரணங்களும், வாழை மரங்களும் மாவிலைகள் கட்டி அலங்கரிக்கப்பட்டிருந்தன. சந்தனம், பன்னீர் தெளித்து பல்வேறு வாத்தியங்கள் முழங்க வரவேற்புகள் இருந்தது.

ஒளிமயத்தோடு உலா வந்த ஆரூராருக்கு நறுமணம் கமழும் பொடிகள், நறுமலரையும் வீசினார்கள். திருமண காலத்தில் அழகே உருவாய் அமர்ந்திருந்தஆரூராரின் அழகில் வந்திருந்த அனைவரும் மயங்கினார்கள். சடங்கவி சிவாச்சாரியாரைப் புகழ்ந்தார்கள்.ஆரூரார் இல்லற வாழ் வில் நுழையக் கூடாதே. அவரை தடுக்க வேண்டுமே என்று அந்தணர் வேடத்தில் தள்ளாடி வந்தார் எம்பெருமான்.

முதிய அந்தணர் வேடத்துக்கேற்ப நரைமுடியும், கையில் தாழங்குடி, கையில் மூங்கில் தடி என்று தன்னுடைய திருக்கோலத்தை மாற்றியிருந் தார். திருமண சடங்குகள் நடைபெறும் காலம். எம்பெருமான் முதிய அந்தணராக உள்ளே நுழைந்தார். ஆதவனுக்கு இணையான ஒளியுடன் உள் நுழையும் புதிய முதியவரை எல்லோரும் பார்த்தார்கள். உள் நுழையும்போதே நான் கூறப்போவதை அனைவரும் கேளுங்கள் என்றார். அவரது முகத்தைக் கண்ட ஆரூரார் மனதில் இனம்புரியாத அன்பு உண்டானது.

ஆரூரார் எழுந்து நின்று தங்கள் வரவால் நாங்கள் மனமகிழ்ந்தோம்.  எங்கள் மண நாளில் எழுந்தருளியிருக்கிறீர்கள். என்ன தவம் செய்தோமோ என்று வரவேற்றார். ஆரூராரை கவனியாமல் பேசிய அந்தணரின் பேச்சு அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. அப்படி என்ன கூறினார்... நாளை பார்க்கலாம்…
       

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP