சுந்தரமூர்த்தி நாயனார் தொடர்ச்சி -2

உதட்டில் புன்னகையுடன் நீர் யாரென்றே அறியாத நிலையில் நான் எப்படி உனக்கு அடிமையாக இருக்க முடியும். உமக்கு என்ன பித்து பிடித்திருக்கிறதா? அல்லது நீர் உண்மையிலேயே பித்தன் தானா.. எனக்கு தெரியவில்லை

சுந்தரமூர்த்தி நாயனார்  தொடர்ச்சி -2
X

சுந்தமூர்த்தி நாயனார் சடையனாருக்கும் இசைஞானியாருக்கும் மகனாக பிறந்து அரசர் நரசிங்க முனையாரிடம் வளர்ந்தார். இளம்பருவம் வந்த தும் அவருக்கு மணம் முடிக்க எண்ணி, புத்தூர் சடங்கவி சிவாச்சாரியாரின் மகளை திருமணம் செய்துவிக்க ஏற்பாடு செய்து திருமண நாளில் திருமண நேரம் நெருங்கிய போது சிவபெருமான் முதிய வேதியராக வடிவெடுத்து திருமணம் நடக்கும் இடத்துக்கு வந்தார் என்பதை நேற்றைய கட்டுரையில் பார்த்தோம்.

முதிய தோற்றத்துடன் ஒளி பொருந்திய முகத்துடன் இருக்கும் வேதியர் வழக்கு முடிந்தபிறகு திருமணம் நடத்த வேண்டும் என்றதும் அங்கிருந் தவர்கள் அதிர்ந்தார்கள். ஆனால் ஆரூரார் மட்டும் அமைதியாக அப்படி உங்களுக்கும் எங்களுக்கும் வழக்கு இருக்குமானால் நான் அதை முடித்த பிறகே திருமணம் செய்துகொள்கிறேன், அதனால் என்ன வழக்கு என்பதை கூறுங்கள் என்றார்.

அதைத்தானே கூற வந்திருக்கிறேன். அவையில் இருக்கும் பெரியோர்களே மணக்கோலத்தில் இருக்கும் அந்தணன் எனக்கு அடிமை என்றார். ஆரூராரால் எந்த பதிலையும் கூறமுடியவில்லை. அவரை நோக்கி அமைதியாக இருந்தார். யாருக்குமே முதியவரது பேச்சில் பதில் சொல்ல தோன்றவில்லை. அதனால் சினம் கொண்ட முதியவர் தன் கையில் இருக்கும் நீட்டோலையை சபையினர் முன்னிலையில் எடுத்து கோபமாக பேசினார்.

இங்கு நின்றிருக்கும் நாவலூராரின் பாட்டனார் தன்னுடைய பேரனை எனக்கு அடிமை என்று எழுதிக்கொடுத்த ஓலை இது. இதற்கு சாட்சி கையெ ழுத்தையும் போட்டிருக்கிறார்கள். அதனால் இந்த வழக்கு பொய்யும் அல்ல. என்னை பார்த்து யாருக்கும் குறை கூறவும் தகுதியுமல்ல என்றார்.
ஆரூரார் உதட்டில் புன்னகையுடன் நீர் யாரென்றே அறியாத நிலையில் நான் எப்படி உனக்கு அடிமையாக இருக்க முடியும். உமக்கு என்ன பித்து பிடித்திருக்கிறதா? அல்லது நீர் உண்மையிலேயே பித்தன் தானா.. எனக்கு தெரியவில்லை என்றார்.

தம்மை பித்தன் என்றதும் கோபம் கொண்ட முதியவர் நான் பித்தனுமல்லன். பேயனுமல்லன். நீ என்னை எவ்வளவு இழிவாகக் கூறினாலும் நான் அதற்காக வேதனைப்பட்டு, வெட்கப்பட்டு இந்த வழக்குக்கு முடிவு தெரியாமல் போக மாட்டேன். என்னை உனக்குத் தெரியாது. அதை அறிந்து கொள்ளும் மன நிலையிலும் நீ இல்லை. அதனால் மணவறையில் இருந்து எழுந்திரு. உன் கடன் எனக்கு பணி செய்வதே என்றார்.

அதுவரையில் முதியவரின் ஒவ்வொரு பேச்சுக்கும் எதிர்வாதம் புரிந்து வந்த ஆரூரார் மனம் அமைதியடைந்தது போல் இருந்தது. அவர் பால் அன்பை அதிகரித்தது. ஆனால் அவரது பிதற்றலும் உளறலும் அவர் அடிமை என்று சொன்ன வார்த்தைகளும் அவர் பால் சினத்தையும் சேர்த்தே கொண்டிருந்தது. அதனால் மனம் குழம்பிய ஆரூரார் முதியவரின் கையில் வழக்குக்கு ஆதாரமாக இருக்கும் நீட்டோலையைப் பார்த்து விடுவது என்னும் முடிவுக்கு வந்தார்.

நான் உங்கள் வழக்கை ஏற்றுக்கொள்கிறேன். நான் உங்கள் அடிமைதான் என்பதற்கு ஆதாரமான நீட்டோலையை காண்பியுங்கள் என்றார்.உடனே முதியவர் மேலும் சுந்தராரை சீண்டும் விதமாக ஓலையைப் படித்து உணரும் அளவுக்கு உனக்கு அறிவு மிகுதியோ. அப்படியே நீ இருந்தாலும் உன்னிடம் தனிப்பட்ட முறையில் இந்த ஓலையை நான் கொடுக்க மாட்டேன். உனக்கு துணிவு இருந்தால் அவைக்களம் வா அங்கு நம் வாதத்தை வைத்துக்கொள்ளலாம் என்றார்.

ஆரூரார் ஏற்கனவே சினமிகுதியால் இருந்ததால் முதியவரின் கையில் இருந்த ஓலையை எட்டிப் பறிக்க முயன்றார். ஆனால் முதியவராக இருந்த எம்பெருமான் சுலபமாக அதைப் பறிக்க முடியாதவாறு மணப்பந்தலைச் சுற்றி ஓடினார். அவரை விரட்டிப்பிடிக்க ஆரூராரும் ஓடினார். இருவரும் ஓடி ஓடி சுற்றி வர ஒருவழியாக சுந்தரர் முதியவரை பிடித்துவிட்டார்.

வேதியரான உனக்கு அந்தணர் அடிமை என்று எழுதி கொடுத்தார்களா? என்ன காரணத்தினால் உங்களுக்கு அப்படி ஒரு வழங்கப்பட்டிருக்கிறது என்பதைப் பார்த்துவிடுவோம் என்று அவர் கையிலிருந்த ஓலையைப் பிடுங்கி அதைப் படிக்காமல் கிழித்தெறிந்தார்.ஏற்கனவே ஓடிய களைப்பில் சோர்ந்துப்போன முதியவர் மேலும் சோர்ந்தவராய் சுந்தரராரின் செயலைக் கண்டித்தார்.

எவ்வளவு பெரிய அநியாயத்தை சபையின் முன்னிலையில் செய்கிறார். ஆனால் ஒருவரும் எனக்காக வரவில்லையே. இப்படி ஒரு அநியாயம் செய்யலாமா? அதிலும் முதியவரான எனக்கு செய்யலாமா? இதைக் கேட்க யாருமே இல்லையா? என்று பொங்கினார்.

அப்போதுதான் தன்னுடைய தவறை உணர்ந்த ஆரூரார் செய்வதறியாமல் திகைத்து நின்றர். குற்றம்புரிந்துவிட்டோமோ என்று தலைகுனிந்தார். அவையோர்கள் முதிய வேதியரை அணுகி நீங்கள் வழக்கு தொடுத்து வந்திருக்கும் இந்நாள் திருமண நாள். நீங்கள் எங்கிருந்து வருகிறீர்கள்? உங் களைப் பற்றி சொல்லுங்கள். உங்கள் வழக்கு மிகவும் விசித்ரமாக இருக்கிறது. நம்பும்படியாக இல்லையே என்று கேள்வி மேல் கேள்வி கேட்டார் கள்.

வேதியர் பொறுமையாக பதில் உரைத்தார். நான் பக்கத்திலிருக்கும் திருவெண்ணெய்நல்லூரைச் சார்ந்தவன். இவனுடைய பாட்டன் எனக்கு இவனை அடிமை என்று எழுதிக்கொடுக்காவிட்டால் இவன் ஏன் என் கையிலிருந்த ஓலையைப் பறித்து கிழித்தெறிந்தான். அறநெறியைத் தவறி அவன் நடந்துகொண்ட விதம் குற்றமுள்ளவன் போல் தானே காண்பிக்கிறது. இவன் என் அடிமையே என்பதை நிரூபிக்க வேறு ஆதாரம் ஏதே னும் தேவையா என்றார். அடுத்து என்ன செய்தார் சுந்தரரார் நாளை பார்க்கலாம்.

newstm.in

newstm.in

Next Story
Share it