Logo

ஷீரடி அற்புதங்கள் - வேலைக்காரச் சிறுமி மூலம் பாபா கொடுத்த விளக்கம்

பாபாவின் சொல், ஆண்டவன் கட்டளை என்று முழுமையாக நம்பிய அவர் ஷீர்டியை விட்டு கிளம்பினார்.
 | 

ஷீரடி அற்புதங்கள் - வேலைக்காரச் சிறுமி மூலம் பாபா கொடுத்த விளக்கம்

மராட்டியில் புலமை பெற்ற அறிஞர் தாஸ்கணு. ஏராளமான நூல்களையும் எழுதியிருக்கிறார். பாபாவின் சிறந்த பக்தரான தாஸ்கணு, ஈசோபனிஷத்துக்கு மராட்டிய மொழியில் உரை எழுத ஆரம்பித்த நேரம் அது.ஈசோ உபநிஷதம் என்பது, உபநிடதங்களின் தாய் போன்றது. அத்தனை சிறப்பு வாய்ந்த ஈசோ உபநிஷதத்தினை அறிஞர் தாஸ்கணு, மராத்திய யாப்பு வகையில் மொழி பெயர்த்தார். ஆனால் அந்த உரை அவருக்கு திருப்தியாக வரவில்லை. எத்தனை முறை எழுதிப் பார்த்தும் சரியாக வரவில்லை.

சில அறிஞர்களிடம் கலந்து பேசினார். அவர்களது அபிப்பிராயங்களைக் கேட்டு, மாறுதல் செய்தும் பார்த்தார். ம்ஹூம். அதுவும் நன்றாக வரவில்லை. யோசித்தார் தாஸ்கணு.ஈசோ உபநிஷதம் என்பது வேதங்களின் சாராம்சம். அதை, தன்னைப் போன்ற ஒரு வெறும் புலவரால் மட்டும் மொழி பெயர்க்க முடியாது என்ற முடிவுக்கு வந்தார். பற்றுதல் எதுவும் இல்லாத ஒரு மகா ஞானி மனது வைத்தால் மட்டுமே தன்னால் உரை எழுத முடியும் என்று புரிந்தது அவருக்கு.அடுத்த ரயிலிலேயே ஷீர்டிக்குக் கிளம்பினார் தாஸ்கணு.

பாபாவின் பாதங்களில் விழுந்தார். “நான் அறிஞன்தான். நிறைய படித்தவன்தான். ஆனால் என்னால் உரை எழுத முடியவில்லை. அந்த ஈசோ உபநிஷதத்தின் சரியான பொருளைப் புரிந்து கொள்ளக் கூட என்னால் இயலவில்லை. அதில் எனக்கு நிறைய சந்தேகங்கள் எழுகின்றன. ஐயங்களை எல்லாம் போக்கி எனக்க சரியான தீர்வை தாங்கள்தான் தர வேண்டும்’ என்று வேண்டினார்.

பாபா புன்னகைத்தார். “அந்த சந்தேகங்களைச் சொல்ல நான் எதற்கு? நீ உன் ஊருக்குத் திரும்பிச் செல்லும் வழியில் மும்பையின் புறநகர்ப் பகுதியில் ஒரு பக்தர் வீட்டு வேலைக்காரச் சிறுமியே உன் சந்தேகங்களைத் தீர்த்து வைப்பாள்’ என்று பதில் சொன்னார் பாபா. கூடியிருந்தவர்கள்  மெல்லச் சிரித்தார்கள். “பாபா வேடிக்கை செய்கிறாரா என்ன? எல்லாம் படித்த தனக்கே ஈசோ உபநிஷத் புரியவில்லை என்று தாஸ்கணு சொல்லும்போது, படிப்பறிவில்லாத யாரோ வேலைக்காரி பதில் சொல்வாள் என்கிறாரே?’ என்று தங்களுக்குள் பேசிக் கொண்டார்கள்.

ஆனால் பக்தர் தாஸ்கணு அப்படி நினைக்கவே இல்லை. பாபா என்ன சொன்னாலும் அது சரியாகத்தான் இருக்கும். பாபாவின் சொல், ஆண்டவன் கட்டளை என்று முழுமையாக நம்பிய அவர் ஷீர்டியை விட்டு கிளம்பினார்.வீட்டுக்குச் செல்லும் முன்பு, மும்பையின் கடைப் பகுதியான விலேபார்லேயில் உள்ள நண்பர் சாஹேத் தீட்சித்தைக் காணச் சென்றார். அன்றைக்கு அவர் வீட்டிலேயே தங்கினார்.பொழுது விடிந்தது. எழுந்து குளித்து முடித்து விட்டு, கண் மூடி பாபாவை நினைத்துப் பிரார்த்தனை செய்து முடித்தார்.அப்போதுதான் அந்த வீட்டில் வேலைக்காரச் சிறுமி வாசலில் அமர்ந்து பாத்திரங்களைக் கழுவியபடி இனிமையாகப் பாடிக் கொண்டிருப்பது அவர் காதில் விழுந்தது.உற்று கவனித்தார்.

“சிவப்பு கலர் பாவாடை எத்தனை அழகு!

அதன் பார்டர் கூட எத்தனை அருமை!

எம்ப்ராய்டரி கூட எத்தனை அற்புதம்!’

இப்படித்தான் தன்னை மறந்து பாடிக் கொண்டிருந்தாள் அந்த வேலைக்காரச் சிறுமி. பாவாடை பற்றிப் பாடிய அவள் அணிந்திருந்த பாவாடையோ கிழிந்து போய் அழுக்கடைந்து காணப்பட்டது. அவளது முகமோ ஏக்கத்துடனும் வருத்தத்துடனும் இருந்தது.நெகிழ்ந்து போய்விட்டார் தாஸ்கணு. உடனே அவளுக்கு ஒரு புத்தாடை வாங்கிக் கொடுத்தார். மகிழ்ந்து போய்விட்டாள் அந்தச் சிறுமி. உடனே அதை அணிந்து கொண்டாள் சுற்றிச் சுற்றி ஓடினாள். நடனமாடினாள். உற்சாகம் பொங்கி வழிந்தது அவளுக்குள்.

ஆனால் மறுநாள், வழக்கம் போல் பழைய கிழிந்த உடையிலேயே வலம் வந்தாள். அவள் வேலைக்காரச் சிறுமி. அப்படித்தான் இருக்க வேண்டிய நிலை.ஆனால் இதுநாள் வரை அவள் முகத்தில் இருந்த ஒரு சோகம் இப்போது காணவில்லை. அவளுக்குச் சொந்தமாக ஒரு புத்தாடை இருப்பதால், அவள் அன்று முதல் மகிழ்வுடனேயே காணப்பட்டாள்.அதைக் கண்ட தாஸ்கணு துள்ளிக் குதித்தார். இதுநாள்வரை அவருக்கு குழப்பத்தை ஏற்படுத்தி வந்த ஈசோ உபநிஷதப் பாடலுக்கு அவருக்கு விளக்கம் கிடைத்துவிட்டது.

ஆமாம். நமது இன்ப துன்ப உணர்ச்சிகள் எல்லாம் நம் மனத்தில் பாங்கைப் பொருத்தே அமைகின்றன. கடவுள் எல்லாவற்றையும் கவனித்துக் கொண்டுதான் இருக்கிறார். கடவுளால் நமக்கு கிடைக்கும் எல்லாவற்றையும் மகிழ்ந்து ஏற்றுக் கொள்ள வேண்டும். எல்லாமே கடவுளின் பரிசு தான் என்று நினைப்பவனுக்குக் கவலை என்பதே தோன்றாது.இதுதான் ஈசோ உபநிஷத்தின் அடிப்படைத் தத்துவம். இதுநாள் வரை அறிஞர் தாஸ்கணுவைக் குழப்பி ஆட்டம் காட்டிய விளக்கம் ஓர் ஏழைச் சிறுமியைக் கண்டதால் சுலபமாகத் தீர்ந்தது.எல்லாம் பாபாவின் அருள். பாபாவின் கருணை. பாபாவின் ஆசி.

சரி, இந்த விளக்கத்தை பாபாவே நேரடியாகச் சொல்லியிருக்கலாமே, எதற்காக ஓர் ஏழைச் சிறுமியின் மூலம் இதைச் சொல்ல வேண்டும் என்று உங்களுக்குத் தோன்றியிருக்கலாம்.அந்த அபலைச் சிறுமிக்கு ஒரு புத்தாடை தர வேண்டும் என்று கடவுள் நினைத்திருக்கிறார். அதை இப்படி நிறைவேற்றியிருக்கிறார். அவ்வளவுதான்.தாஸ்கணு, பாபாவை நம்பினார். கொஞ்சம் கூடச் சந்தேகம் கொள்ளவில்லை. எங்கோ பம்பாய் அருகே ஒரு வேலைக்காரச் சிறுமி மூலம் விடை கிடைக்குமா என்றெல்லாம் அவர் சந்தேகப்படவேயில்லை.அவர் நினைத்தது நடந்தது. இந்த பொறுமையையும், நம்பிக்கையையுமே பாபா தன் பக்தர்களிடம் எதிர்பார்ப்பது.

ஓம் சாய்ராம்

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP