Logo

மினி தொடர்: ஸ்ரீ ரெட்டி அதிர்வலைகள் 1 - பூனைக்கு கட்டிய மணி

ஸ்ரீ ரெட்டி அதிர்வலைகள் 1 - பூனைக்கு கட்டிய மணி
 | 

மினி தொடர்: ஸ்ரீ ரெட்டி அதிர்வலைகள் 1 - பூனைக்கு கட்டிய மணி

'பாலியல் வன்முறை, 'பாலியல் தொல்லை', 'பாலியல் சீண்டல்'... - சமீப காலமாக அனைத்து தரப்பு ஊடகங்களிலும் வெவ்வேறு விதமாக நையப் புடைக்கப்பட்ட சொற்கள் இவை. அன்றாடச் செய்திகளில் தவிர்க்க முடியாததொரு அங்கமாகிவிட்ட சொற்களும் கூட. இவ்வார்த்தைகள் சகஜமான ஒன்றாகி விட்டாலும் அவை சார்ந்த சம்பவங்களும், அவை நடக்கும் சூழல்களும், அவை சந்திக்கும் எதிர்வினைகளும் வெவ்வேறு பரிமாணங்களில் நம்மை நம் சமூகம் மீது சந்தேகமற்ற தீரா பயத்தையே உண்டு செய்து கொண்டிருக்கின்றன. அந்த பயம் நாம் இயல்பாக முன்னெடுக்கும் காரியங்களுக்கே பலநேரங்களில் முட்டுக்கட்டையாக அமைந்துவிடுவதுதான் இங்கு சாலக் கொடுமை. மேலும் மற்றத் துறைகளில் பாலியல்சார் சீண்டல்கள் இருந்தாலும் அவை நான்கு சுவர்கள் தாண்டி வெளிவருதல் அரிது. ஆனால் 'லைம்லைட்' வெளிச்சம் நீக்கமற நிறைந்திருக்கும் சினிமா துறையிலோ அதே விஷயம் நான்கு சுவர்களுக்குள் இருத்தலே அரிது.

"தொடர்ந்து 'செக்ஸ் டார்ச்சர்' தருவதாக "பிரபல தயாரிப்பாளர் / இயக்குனர் / நடிகர் மீது மேல் நடிகை குற்றச்சாட்டு". - எனக்கு விபரம் தெரிந்ததிலிருந்து செய்தித்தாள்களில் தொன்றுதொட்டு வரும் இச்செய்தியில் பெயர்கள் மாறுபட்டாலும் இந்த 'டெம்ப்ளேட்' மட்டும் மாறியதில்லை. நானும் பத்தோடு பதின்னொன்றாக இச்செய்தியைக் கடந்து வந்து பன்னிரெண்டாவதாக இக்கட்டுரையை எழுதுகிறேன்.

*

மினி தொடர்: ஸ்ரீ ரெட்டி அதிர்வலைகள் 1 - பூனைக்கு கட்டிய மணி

நடனத்தின் மேல் தீராக் காதல் கொண்ட, மிக நேர்த்தியாக ஆடக்கூடிய தோழி ஒருத்திக்கு பிரபல நடன இயக்குனரிடமிருந்து சினிமாவில் உதவி நடன இயக்குனராக சேர வாய்ப்பு கிடைத்தது. 'சினிமாவுக்குலாம் போனா பொண்ணுங்களுக்கு சேஃப்டி கிடையாது. அப்பறம் கல்யாணத்துக்கு மாப்பிள்ளக் கெடைக்காது. 'மீடியா'னாலே மாப்ள வீட்டுல ஒத்துக்க மாட்டாங்க' போன்ற நான்கு உறவினர்களின் நாலு விதமானப் 'சினிமா வேண்டாம்' பிரச்சாரத்தைத் தொடர்ந்து அவள் பெற்றோரே 'சினிமாலாம் நமக்கு வேண்டாம் கண்ணு என்று ஆறுதல் கூறி சமாதானப்படுத்தி அவளை மேற்படிப்பு படிக்க வைத்தனர். 

 

கல்லூரிக் காலத் தொடக்கத்தில் சாதாரண நடனப் போட்டிக்கே நிறைய திரைப்பட பாடல் காணொளிகளைப் பார்த்து பயிற்சி செய்து கலந்துகொண்டு பரிசையும் பாராட்டையும் குவித்த அவள், ஒரு கட்டத்தில் நடனக்காட்சித் திரையில் வந்த மறு நொடியே அரக்கப்பறக்க டீ.வி ரிமோட்டைத் தேடி சேனலை மாற்றுபவளாக மாறிப்போயிருந்தாள். நான் சற்றும் எதிர்பாராத இந்த வினோத மாற்றத்தைப் பற்றி அவளிடம் விசாரித்த பொழுது, அவள் கூறியது: 

"நான் நின்னு ஆடவேண்டிய இடத்துல என்னை மாதிரி பலர் ஆடிட்டு இருக்கப்போ மனசுக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு. சந்தோஷத்தையே இழந்த மாதிரி இருக்கு. எனக்கு மனசுக்கு ரொம்ப புடிச்ச, அதே சமயம் உருப்படியா வர்ற விஷயம் 'டான்ஸ்' ஒண்ணுதான். அத விட்டா வேற எனக்கு எதுவும் தெரியாது. 'சினிமால பொண்ணுங்களுக்கு சேஃப்டி இல்ல'ங்கிற ஒரு மொக்க காரணத்துக்காக அப்பா - அம்மாக்காக என்னை நானே சமாதானப் படுத்திகிட்டு இப்போ என்னோட ஆசையையும் கனவையும் என் வாழ்க்கையயுமே தொலைச்சிட்டு நிக்கிறேன்" என்ற பதில் என்னை அந்த நொடி ஆறுதல் வார்த்தைகளற்றவளாய் ஆக்கிவிட்டிருந்தது.

இத்தோழியின் கண்ணீர் நிரம்பிய கண்களைப் போல் பல ஜோடிக் கண்களையும் எனக்குத் தெரியும். இந்த காரணத்தையும் பெற்றோரையும் எதிர்த்து சினிமாவில் கால் பதித்துப் போராடிக்கொண்டிருக்கும் பெண்களையும் எனக்குத் தெரியும். போராட ஆரம்பித்துவிட்டார்கள் என்பதனால் அந்தக் காரணம் பொய்யும் இல்லை. காரணம் உண்மையென்பதனால் பெண்கள் போராடாமல் இருப்பதுமில்லை. 

மேற்கண்ட போராடும் குணங்கள் கொண்ட சக பெண்களைப் பெற்றோரிடம் மேற்கோள் காட்டி அவர்களைப் போல சாமானியப் பெண்கள் போராட சற்று எத்தனித்தாலும், திரைத்துறையில் சமீப காலமாக வெகுவாக வெளியே தெரிய வரும் பாலியல் தொல்லை சார்ந்த விஷயங்களும் பெருகி வரும் கவனக் குவிப்பும் பெற்றோர் கூறும் காரணத்தையே மெய்ப்பித்துக் கொண்டு அப்பெண்களின் பொட்டில் அறைந்து கொண்டிருக்கின்றன. 

விளைவு, 'இதெல்லாம் நமக்கு வேணாம் மா. நம்ம குடும்பத்துக்கு செட் ஆகாது. டிகிரீ முடிச்சிட்டு பேங்க் இல்லேனா டி.என்.பி.எஸ்.சி எக்ஸாம் கோச்சிங் கிளாஸ் போ. ஒரு கவர்மெண்ட் வேலைல உக்காரு. அதான் எங்க ஆச' என்று பெற்றோர்களின் கண்கலங்கிய பாசப் பேச்சுக்கு வித்திடுகிறது. மேலும் நம் பெண்களைப் போல 'எமோஷனல் இடியட்ஸை' இப்பூவுலகில் காண்பது மிக அரிதென்பதனால் கவர்ன்மெண்ட் வேலைக்கு கோச்சிங் தரும் செண்டர்களில் இப்பெண்கள் கூட்டங்களினாலே கல்லா கட்டுகிறது.

'நீ என் கூட இன்னிக்கி ராத்திரி படுத்தா நாளைக்கு நான் உனக்கு சான்ஸ் வாங்கித் தர்றேன்' என்ற வாக்கியத்தின் ஒற்றைச் சொல் வடிவமே 'அட்ஜஸ்மெண்ட்' என்பது. ஊடகத்துறையில் பலருக்கு மிகப் பரிச்சயமான வார்த்தையும் கூட.

'அப்படி படுத்துதான் சான்ஸ் கெடைச்சு நான் சம்பாதிக்கணும்னா அப்படி ஒரு சான்ஸே எனக்குத் தேவையில்ல' என்று ஓரளவுக்கு பண பின்புலம் உள்ளவர்களால் தைரியமாகக் கூறிவிட்டு மாற்றுவழியை நோக்கிப் பயணிக்க முடியும். பண பின்புலமும் இல்லாமல், ஆள் பின்புலமும் இல்லாமல் வீட்டையும் எதிர்த்து வெளியே வந்து கனவு, ஆசை என லட்சியத்தை மட்டும் மனதில் நிறுத்தி, போக வேறு போக்கிடம் இல்லாதவர்களுக்கு 'சந்தோஷ் சுப்ரமணியம்' படத்தில் ஒரு விரலைக் காட்டி இதுல ஏதாவது ஒண்ணு தொடு' என்று சந்தானம் கூறுவதைப் போன்றதொரு சந்தர்ப்பமாய் அமைந்துவிடுகிறது. 

'நம்ம ஆசப்பட்டது கிடைக்கணும்னா அதுக்காக சில விஷயங்கள இழந்துதான் ஆகணும்'னு எங்கேயோ யாரோ கூறி வைத்த கூற்றொன்று சட்டென்று தலையில் தட்டவே, தன் சூழலை அதனுடன் சம்பந்தப்படுத்திப் பார்த்து, தயக்கத்துடனும் சங்கடத்துடனும் அவளும் அதற்கு சம்மதிக்கும் நிலை ஏற்படுகிறது.

என்றோ நான் கேள்விப்பட்ட தியரி ஒன்றுண்டு - நமக்கு காரியம் ஆகவேண்டுமென்றால் ஒன்று, நம் சுயமரியாதையை விடுத்து அனைவருக்கும் அடிமையாகி அவர்கள் பேச்சைக் கேட்டு நடக்க வேண்டும், ('அமைதிப்படை' படத்தில் அமாவாசை முதலில் செய்வது) அல்லது பணம் / பொருள் இருக்கும் பட்சத்தில் நாம் அனைவரையும் அடிமையாக்கி நம் பேச்சை அவர்களைக் கேட்கவைக்க வேண்டும். 

இந்த இரண்டு எல்லைக்கும் நடுவில் சிக்கிக்கொண்ட ரெண்டுங்கெட்டான் நிலைதான் நம் கட்டுரையில் வரும் பெண்களின் நிலை. 

சுயத்தையும் விட்டுக்கொடுக்க முடியாமல் பண / அதிகார பலமும் இல்லாமல் தவித்து, பின் அந்த பண/அதிகார நிலையை அடைந்து நம் பேச்சை பிறர் கேட்க வைக்க வேண்டுமென்றாலும் பணம் அல்லாத நமக்கு, சுயத்தை விட்டுக்கொடுத்து அவர்கள் பேச்சுக்கு இசைந்துபோவதுதான் மார்க்கம் என்றவாறு ஒருவழியாக சுயசமாதானம் செய்து 'அட்ஜஸ்மெண்ட்'டிற்கு ஒத்துக்கொள்கிறார்கள்.

மினி தொடர்: ஸ்ரீ ரெட்டி அதிர்வலைகள் 1 - பூனைக்கு கட்டிய மணி

*

சமீபத்தில் நம் மக்களாலேயே அவ்வாறு பத்தோடு பதினொன்றாக கடக்க முடியாமல் தமிழகத்தின் பேசுபொருளாக மாறியதுதான் தெலுங்கு நடிகை ஸ்ரீ  ரெட்டியின் பாலியல் குற்றச்சாட்டு. அவர் குற்றம்சாட்டத் தொடங்கியது என்னவோ தெலுங்கு படவுலகினரைத்தான் என்றாலும், சீரிய கவனம் குவித்தது என்னவோ தமிழ் சினிமாவின் 'குட் புக்'கில் இருக்கும் நடிகர்கள், இயக்குனர்களை அவர் பட்டியலிட்ட பிறகுதான். இதில் குற்றச்சாட்டைத் தாண்டி அந்நடிகையின் சம்மதத்தோடுதானே இத்தனையும் நடந்திருக்கிறது என்கிற கருத்து வேறொரு பரிமாணத்தை நோக்கி இச்சர்ச்சையை நகர்த்திச் செல்கிறது.

"இவரா இப்படி!" என நம் நடிகர்கள் / இயக்குனர்களை நோக்கி ஆச்சர்யக்குறியுடனும் ''இவளுக்கு எங்க போச்சாம் புத்தி?" என நடிகையை நோக்கி கேள்விக்குறியுடனும் நம் மக்கள் கொதித்தெழுந்து கொண்டிருக்கின்றனர். அதிலும் முக்கியமாக நம் நெட்டிசன்கள், கடன் வாங்கி நெட் பூஸ்டர் போட்டு நிதமும் ஸ்ரீ ரெட்டியின் முகநூல் பக்கத்திலேயே அவர் பதிவிற்கு முதலில் கமெண்ட் போடுவதற்காக கை கடுக்க தவமிருக்கின்றனர்.

இந்த விவகாரத்தில் சினிமாவிலுள்ள பாலியல் குற்றச்சாட்டுகள் தவிர்த்து நாம் உற்று நோக்க வேண்டிய விஷயங்கள் ஏராளம் உள்ளன. இவ்விவகாரம் நம்மையும் நம் சமுதாயத்தையும் அதன் நிலைப்பாட்டையும் அதன் ஆரோக்கியத்தன்மையையும் இப்பிரச்னைக்கு எதிர்வினையாற்றுபவர்களின் மனப்போக்கையும் உளவியல் ரீதியாக மதிப்பீடு செய்து புரிந்துகொள்ள நமக்கு அமைந்த ஓர் அருமையான வாய்ப்பாகும்.

"அவளுக்கென்ன, அவ ஒடம்ப காட்டி சம்பாதிக்கிறா!" என்று கிட்டத்தட்ட ஒரு பாலியல் தொழிலாளியுடன் சமன்படுத்தியே நம் சமுதாயம் ஒரு நடிகையை முத்திரை குத்தி வைத்துள்ளது. இந்த பொதுபுத்தியே, இப்பொழுதும் கூட 100% ஸ்ரீ ரெட்டியின் மேலேயே குற்றம் சுமத்த நம் சமூகத்து ஆண்களுக்கு ஒரு முக்கிய காரணியாக இருக்கிறது. 

நாம் அன்றாடம் சந்திக்கும், நம்முடன் அனுதினமும் பயணிக்கும் பகுத்தறிவு பேசுபவர்களும் பெண்ணியம் பேசுபவர்களுமே ஸ்ரீ ரெட்டியின் இந்த குற்றச்சாட்டை எள்ளி நகையாடுவதும் மிகக் கீழ்த்தரமான விமர்சனங்களை முன்வைப்பதுமாய் இருக்கிறார்கள். சமுதாயத்தில் நிலவும் இந்த மனப்பிறழ்வு நிலை மிகவும் வருத்தத்திற்குரியது.

கவிஞர் மனுஷ்யபுத்திரன் சினிமாவிலுள்ள வியாபாரத்தைப் பற்றி இவ்வாறு குறிப்பிடுகிறார் - "அது ஒரு பிரம்மாண்டமான வலை. உங்கள் வெற்றியின் ஒவ்வொரு படிக்கட்டிற்கும் விலை நிர்ணயிக்கப்படுகிறது. அந்த விலையை நீங்கள் கொடுத்தாலும் வெற்றி பெறுவீர்களா என்று சொல்ல முடியாது. விலை கொடுக்க மறுத்தால் உங்கள் இருப்பே கேள்விக்குரியதாகிவிடும்". எவ்வளவு உண்மையான வார்த்தைகள்!

இந்த வார்த்தைகள்தான் ஸ்ரீ ரெட்டி விஷயத்தில் நிதர்சனமாகியுள்ளன. இந்த விலை என்பது இடத்தைப் பொறுத்து மாறுபடும். சில இடங்களில் பணமும், சில இடங்களில் மதுவும், பல இடங்களில் மாதுவும் விலையாக நிர்ணயிக்கப்படுகின்றன. வாய்ப்புத் தேடுவதே பெண்ணாக இருப்பின் ஒரு யோசனையும் இல்லாமல் அவள் உடலே இங்கு அவளுக்குக் கொடுக்கப்படும் வாய்ப்புக்காக வியாபாரம் பேசப்படுகிறது. அவ்வாறு தன் வாய்ப்புக்காக ஸ்ரீ ரெட்டி கொடுத்த விலைதான் அவர் உடல். 

எங்கே அந்த விலையைத் தான் கொடுக்க மறுத்தால் சினிமாவில் தன் இருப்பே கேள்விக்குரியதாகிவிடுமோ என்ற அச்சத்தில் ஸ்ரீ ரெட்டி அதன் விலையைக் கொடுக்கிறார். ஆனால், அந்த விலையைக் கொடுத்தாலும் வெற்றி பெற இயலா நிலையை அவருக்கு உருவாக்கிவிட்டுச் சென்றிருக்கின்றனர், அவரை நன்கு உபயோகப்படுத்திக் கொண்டவர்கள். எப்படியாவது வாய்ப்புக் கிடைத்துவிடும் என்ற (மூட) நம்பிக்கையாலேயே அவரும் இத்தனை நாள் காத்திருந்திருக்கிறார்.

ஸ்ரீ ரெட்டியை நோக்கி கேட்கப்படும் 'இவ ரொம்ப ஒழுங்கா?' வகை கேள்விகள் அத்தனைக்குமே அவரிடம் நேர்மையான பதில்கள் உள்ளன. தன் காதலனைத் தேர்வு செய்தது முதல், வாழ்க்கையில் தான் நிறைய தவறான முடிவுகள் செய்து ஏமாற்றப்பட்டிருப்பதாகவும் அந்தத் தவற்றினால் தனக்கு குற்றவுணர்ச்சியும் மேலோங்கி இருப்பதாகவும் அவரே ஒரு நேர்காணலில் நெறியாளரிடம் குறிப்பிடுகிறார். எனினும் அதற்காக தன் இலக்கான சினிமாவில் எந்த மாற்றமும் அதைத் தேர்ந்தெடுத்ததில் தவறும் வருத்தமும் இல்லை என்ற கருத்தையும் அவர் முன்வைக்கிறார். தான் முற்றிலுமாக ஏய்க்கப்பட்டதையும் இனிமேல் இழப்பு ஏதுமில்லை என்ற நிலையையும் அடைந்த பின்னருமேதான், இதை இப்படியே விட்டு விட்டால் பின் பூனைக்கு யார்தான் மணி கட்டுவது என்ற முடிவில் இதற்கு ஒரு வழி கட்டவும் இந்நிலை இனி வாய்ப்பு தேடும் எந்த பெண்ணுக்கும் ஏற்படக்கூடாதெனவும்தான் பொதுவெளியில் குற்றச்சாட்டுகளை பகிரங்கமாக தற்பொழுது முன்வைக்கிறார்.

இதை ஒரு பொது நல செயல்பாடாகவே நாம் அணுக வேண்டும். அவர் செய்த இந்த 'அட்ஜஸ்மெண்ட்' சரியா? தவறா? என்ற தர்க்கத்துக்குள் போகாமல், ஏன் இந்த நிலை? இதற்கு யார் காரணமாக இருக்க முடியும்? இதை மக்கள் எப்படிப் பார்க்கின்றனர்? இது இல்லாமல் சினிமாவே இல்லையா? இதை எப்படிக் கையாள்வது? மற்ற மொழி சினிமா துறைகளில் இதை எப்படி முன்னிறுத்துகின்றனர்? என்பன கேள்விகளுக்கு விடை தேடுவதன் மூலம் இந்நிலைக்கு ஆக்கபூர்வமானதொரு தீர்வைக் காணலாம். விரிவாக நோக்குவோம் இனி வரும் அத்தியாயங்களில்..!

...விடை தேடுவோம்...

- இந்து லோகநாதன்

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP