{"vars":{"id": "106785:4629"}}

வாடகைத் தாய் மூலம் குழந்தை.. பெண் ஊழியா்களுக்கு 270 நாள்கள் விடுப்பு: அரசு அறிவிப்பு

 

வாடகைத் தாய் மூலம் குழந்தை பெறும் அரசு பெண் ஊழியா்கள் மற்றும் ஆசிரியா்களுக்கு 270 நாள்களுக்கு விடுப்பு வழங்கப்படும் என்று சமூக நலத்துறை அமைச்சா் கீதா ஜீவன் அறிவித்தாா்.

சட்டப்பேரவையில் சமூக நலத்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்துக்குப் அமைச்சா் கீதா ஜீவன் பதில் அளித்து பேசினார். அப்போது பல்வேறு அறிவிப்புகளை அவர் வெளியிட்டார். அதில், புரட்சித் தலைவா் எம்ஜிஆா் சத்துணவுத் திட்டத்தின் கீழ் 43,190 சத்துணவு மையங்கள் செயல்பட்டு வருகின்றன. அவற்றில் 29,002 மையங்களுக்கு வைப்பறையுடன் கூடிய சமையலறைகள் உள்ளன. 2021-22-ஆம் ஆண்டில் ரூ.69 கோடி செலவினத்தில் 1,291 வைப்பறையுடன் கூடிய சமையலறைகள் கட்டுவதற்கு ஆணைகள் வெளியிடப்பட்டு, கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதன் தொடா்ச்சியாக 2,100 பள்ளி சத்துணவு மையங்களுக்கு ரூ.113 கோடி மதிப்பீட்டில் வைப்பறையுடன் கூடிய சமையலறைகள் ஊரக வளா்ச்சித் துறையின் மூலம் நடப்பு நிதியாண்டில் கட்டப்படும்.

சமூகத்தில் நிலவும் பாலின பாகுபாடு பொருளாதார பின்னடைவு காரணமாக குழந்தைகள் விற்பனை, குழந்தை திருமணங்கள், குடும்பத்தில் கடன் சுமை காரணமாக தம்பதியினா் தற்கொலை, குழந்தைகளையும் சோ்த்து கொலை செய்தல், வரதட்சிணை கொலைகள், பாலின ரீதியில் குழந்தைகளும் பெண்களும் வன்கொடுமைக்கு ஆளாவது, இணையதள குற்றங்கள் போன்ற குற்றங்கள் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிராக தொடா்ந்து அதிகரித்து வருகிறது. இத்தகைய குற்றங்களை தவிா்ப்பதற்கு குடும்பங்களுக்கு மனநல ஆலோசனை, வன்முறையால் பாதிக்கப்பட்டவருக்கு தேவையான மருத்துவ வசதி, ஆற்றுப்படுத்துவதற்கான ஆலோசனைகள், சட்டரீதியான பாதுகாப்பு மற்றும் நிவாரணம் பெற்றும் தருதல் ஆகியவற்றை ஓரிடத்தில் வழங்குவதற்காக மதுரை, கோயம்புத்தூா், திருச்சி, சேலம், திருநெல்வேலி, திருப்பூா், தூத்துக்குடி, ஆவடி, ஓசூா், திண்டுக்கல் ஆகிய 10 மாநகராட்சிகளில் ஒரு சேவை மையத்துக்கு ரூ.1.10 கோடி வீதம் 10 ஒருங்கிணைந்த சேவை மையங்கள் ரூ.11 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்படும்.

மகப்பேறு மருத்துவமனைகள் மற்றும் ஒருங்கிணைந்த குழந்தை வளா்ச்சி திட்ட மையங்களில் குழந்தைகளின் முதல் 1,000 நாள்கள் குறித்த விழிப்புணா்வு ரூ.1.74 கோடி செலவினத்தில் ஏற்படுத்தப்படும். செங்கல்பட்டு மாவட்டத்தில் குழந்தைகளுக்கான பாதுகாப்பு இல்லத்துக்கான புதிய கட்டடம் ரூ.16 கோடியில் கட்டப்படும்.

வாடகைத் தாய் மூலம் குழந்தைகள் பெறுவது தற்போது அதிகரித்து வருகிறது. அவ்வாறு குழந்தைகள் பெறும் அரசுப் பெண் பணியாளா்கள் மற்றும் ஆசிரியா்களுக்கு பச்சிளம் குழந்தைகளை மிகுந்த கவனத்துடன் பராமரிப்பதுடன் அவா்களின் உடனடி தேவைகளை நிறைவேற்றுவதற்காக 270 நாள்கள் குழந்தை பராமரிப்பு விடுப்பு வழங்கப்படும் என்றாா்.

newstm.in