{"vars":{"id": "106785:4629"}}

பிரசவத்துக்குப் பிறகு உடல் எடை அதிகரிக்காமல் இருக்க என்ன செய்ய வேண்டும்?

 

கர்ப்பக்காலத்தில் பெண்கள் தங்களது உடல் நலனில் அதிக அக்கறை எடுத் துக்கொள்வார்கள். கருத்தரித்த நாள் முதல் பிரசவிக்கும் காலம் வரை உணவு முறைகள் அனைத்திலும் மிகுந்த கவனத்தோடு இருப்பார்கள். உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் தங்களை ஆரோக்யமாக வைத்திருப்பார்கள். முழுமையான சீரான வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருக்கும் கர்ப்பிணிகள் செய்ய கூடிய தவறு பிரசவகாலத்துக்குப் பிறகான வாழ்வியல் முறை.

உடல் எடை சீராக இருப்பவர்களும் சற்று அதிக எடை கொண்டிருப்பவர்களும் பிரசவக்காலத்துக்குப் பிறகு உரிய பராமரிப்பின்றி அதிக உடல் எடையை பெற்றுவிடுவார்கள். இதற்கு பொதுவான காரணம் கர்ப்பக்காலத்தில் தாய் சராசரியாக 10 முதல் 12 கிலோ வரை அதிக எடைகொண்டிருப்பார்கள். இது ஒவ்வொருவருக்கும் மாறுபடும். மருத்துவரீதியாக உடல்எடை குறைந்த பெண் கருத்தரித்த காலம் முதல் பிரசவக்காலம் வரை 14 கிலோ வரை உடல் எடையைக் கூட்டலாம். அதிக எடை கொண்டிருக்கும் பெண்கள் 9 கிலோவுக்கும் அதிகமாக உடல் எடையை அதிகரிக்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்துகிறார்கள்.

பிரசவத்துக்குப் பிறகு தாய்மார்கள் பாலூட்டும் காரணத்தால் அதிகளவு உணவு எடுத்துக்கொள்ள பரிந்துரைக்கப்படுகிறார்கள். அதிக வேலையின்றி ஓய்வில் இருப்பதாலும் உடல் எடையின் மீது கவனம் சிதறுவதாலும் உடல் எடை அதிகரித்துவிடுகிறது. அதேநேரம் குழந்தைக்கு வளமான தாய்ப்பாலை கொடுக்கும் தாய்மார்கள் தொடர்ந்து ஒரு வருடம் வரை தாய்ப்பால் கொடுக்கும் போது அன்றாடம் செலவழிக்கும் கலோரிகளால் பிரசவத்துக்கு முன்பிருந்த உடல் எடையைப் பெற்றுவிடுகிறார்கள். எனினும் உடல் எடை அதிகமுள்ள பெண்கள் பிரசவத்துக்குப் பிறகு மேலும் அதிக எடை கொண்டிருக்கிறார்கள் என்கிறது ஆய்வு ஒன்று.

சுகப்பிரசவம் ஆன பெண்கள் கருத்தரித்த காலத்தில் இருந்தது போலவே பிரசவத்துக்கு பிறகும் உடல்நலனைக் காக்கவேண்டும். மருத்துவரின் அறிவுரைபடி குறிப்பிட்ட நாட்கள் வரை ஓய்வு, சத்தான ஆகாரங்கள், உடற் பயிற்சிகளை மேற்கொள்ள வேண்டும். சிசேரியன் மூலம் குழந்தை பெற்றவர்கள் கண்டிப்பாக மருத்துவரது கண்காணிப்பில் அவர்கள் கூறும் காலம் வரை ஓய்வில் இருப்பது அவசியம். அதன்பிறகு மருத்துவர்களது ஆலோசனையின் படி மிதமான உடல்பயிற்சிகளை செய்து பழகலாம்.

நடைபயிற்சி மேற்கொள்ளலாம். மாறாக உடலை அலட்டிக் கொண்டால் தையல் பிரிந்து மேலும் ஓய்வுக்காலத்தை நீட்டிக்க செய்வதோடு உடல் பருமனுக்கும் வழி வகுத்துவிடும். பிரசவத்துக்குப் பிறகு சத்தான உணவுகளோடு பிடித்த உணவுகளை நொறுக்குவதை செய்யகூடாது. குறிப்பாக கொழுப்பு அதிகமுள்ள உணவுகள், ஐஸ்க்ரீம் வகைகள், எண்ணெயில் பொறித்த உணவு பண்டங்கள் போன்றவை தாய்ப் பால் கொடுக்கும் உங்களுக்கும் குழந்தைக்கும் கேடுதருவதோடு உங்கள் உடல்பருமனையும் அதிகரித்துவிடும்.

தாய்ப்பால் கொடுப்பதை நிறுத்திய பிறகு மீண்டும் உணவுகளில் கவனம் செலுத்தவேண்டும். நார்ச்சத்து நிறைந்த காய்கறிகள், பழங்கள், சிறுதானியங்கள், கொழுப்புச்சத்து குறைந்த மீன்வகைகள், புரதம் நிறைந்த கோழி இறைச்சிகள், பருப்புகள் போன்றவை எடுத்துக்கொள்ளலாம்.
முன்னோர்கள் வீட்டில் பிரசவம் பார்த்தாலும் பிரசவமான இளம் தாய் மார்களை பிரத்யேகமாக கவனிப்பார்கள். வெந்நீர் குளியல், பிரசவ இலேகியம், பத்திய உணவு என்று குறிப்பிட்ட நாட்கள் வரை தாய்மார்களை கண்காணிப்பிலேயே வைத்திருப்பார்கள்.

newstm.in

newstm.in