{"vars":{"id": "106785:4629"}}

இதனால் உடல் எடை அதிகரிப்பு; ஆய்வில் கண்டுபிடிப்பு..!

 

பிரிட்டனைச் சேர்ந்த ஓபினியம் என்ற நிறுவனம் கடந்த 2ம் தேதி முதல் 8ம் தேதி வரையிலான காலக்கட்டத்தில் நாடு தழுவிய அளவில் சுகாதாரம், உடல்நிலை குறித்து கணக்கெடுப்பு நடத்தியது. இதில், 5,000 பேரிடம் கருத்து கேட்கப்பட்டது. அதில் 41 சதவீதத்தினர் தங்கள் எடை அதிகரித்துள்ளதாக குறிப்பிட்டுள்ளனர்.

இது குறித்து, இங்கிலாந்து பொது சுகாதார துறையின் தலைமை ஊட்டச்சத்து நிபுணர் அலிசன் டெட்ஸ்டோன் கூறுகையில், “கடந்த 15 மாதங்களாக நீட்டிக்கப்பட்ட ஊரடங்கால் மக்கள் மேற்கொண்ட பழக்க வழக்கங்களை மாற்றி கொள்ள வேண்டும். பலரின் உடல் எடை அதிகரித்திருப்பதைக் கண்டு ஆச்சரியம் ஏற்படவில்லை.

சிற்றுண்டிகளை உண்டதும் வேண்டிய நேரத்தில் சாப்பிடாததும் உடல் எடை அதிகரிப்பதற்கு காரணமாக அமைந்தது என கணக்கெடுப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.



சராசரியாக ஒருவருக்கு 4 கிலோ எடை அதிகரித்துள்ளதை இந்த கணக்கெடுப்பு உறுதிப்படுத்தியுள்ளது. இது குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி, உடல் எடையைக் குறைக்க உதவும் வகையில் தொலைக்காட்சிகளில் விளம்பரங்கள் ஒளிபரப்பப்படும்” என அவர் தெரிவித்துள்ளார்.

இது குறித்து சுகாதாரத்துறை அமைச்சர் ஜோ சர்ச்சில் கூறுகையில், “பெருந்தொற்று அனைவருக்கும் பெரிய சவால்களை விடுத்துள்ளது. அவரவருக்கு ஏற்ற சுகாதாரமான வாழ்க்கை முறையை பின்பற்ற மக்களுக்கு உதவி செய்வோம். உடல் எடையைக் குறைப்பது தொடர்பான ஆலோசனைகளை வழங்கும் செயலிகளை மக்கள் பயன்படுத்த வேண்டும். தொடர்ந்து உடற்பயிற்சி செய்ய வேண்டும்” என்றார்.