Logo

ரஜினி கைகாட்டும் அ.தி.மு.க தலைமை... மோடியின் சகோதரர் நாட்டாமை!

பதவியை விட்டு விலகி மற்றவர்களுக்கு வாய்ப்பு கொடுக்குமாறு பிரகலாத் எடப்பாடியிடம் கேட்டுள்ளார். ஆனால், எடப்பாடி பழனிசாமி அதெல்லாம் முடியாது எனக்கறாராகக் கூறியிருக்கிறார். ஆகையால், எடப்பாடி தரப்பினர் மீண்டும் ரெய்டில் சிக்கும் வாய்ப்புகள் கூட இருக்கிறது’’ என்கிறார்கள்.
 | 

ரஜினி கைகாட்டும் அ.தி.மு.க தலைமை... மோடியின் சகோதரர் நாட்டாமை!

ஜெயலலிதா என்கிற ஒற்றை மனுஷியால் கட்டுக்கோப்பாக மாபெரும் இயக்கமாக வளர்ந்து வந்த அ.தி.மு.க தற்போது தாயில்லாத மகள் போல, தலைமையில்லாத கப்பல் போலத் தட்டுத்தடுமாறி வருகிறது. 

ஓ.பி.எஸ்- ஈ.பி.எஸ் அணிகள் இணைந்தாலும் அவர்களுக்குள் எழுந்து வரும் ஈகோ கட்சிக்குப் பின்னடைவையே ஏற்படுத்தி வருகின்றன. இருவர் மீதும் சொத்துக்குவிப்பு வழக்குகள், உறவினர் நிறுவனங்களில் ரெய்டுகள், அமைச்சர்கள் மீது ஊழல் வழக்குகள் என அ.தி.மு.கவின் வீழ்ச்சி அக்கட்சித் தொண்டர்களை கதற வைக்கிறது.  இந்த ஆட்சி நீடிக்குமா..? என்கிற அச்சம் எடப்பாடி- ஓ.பி.எஸ் இருவருக்குமே அவ்வப்போது நடுக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. 18 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்க வழக்கில் தீர்ப்பு வந்தால் ஒரு முடிவுக்கு வரும் சூழல். ஆனால் இத்தனை காலம் இரட்டை இலை ஆட்சியை தாமரை சுமந்து கொண்டிருக்கிறது என்கிற விமர்சனம் எங்கும் வியாபித்திருக்கிறது. 

ரஜினி கைகாட்டும் அ.தி.மு.க தலைமை... மோடியின் சகோதரர் நாட்டாமை!

பணிவான ஓ.பி.எஸ் தான் பாஜகவின் முதல் விருப்பமாக இருந்தது. ஓ.பிஎஸ் நான்கடி குனிந்து பணிவு காட்டினால் ஈ.பி.எஸ் எட்டடி குனிந்து விசுவாசத்தைக் கட்டவே அவர் முதல்வராக தொடர்கிறார். பா.ஜ.க.-வுக்கு பணிந்தால் மட்டும் போதுமா? மக்களிடம் யாருக்கு இருவரில் செல்வாக்கு என ஆராய்ந்து பார்த்ததில் இருவருமே செல்லாக்காசுகளாகி வருவதை பாஜக உணர்ந்து கொண்டது. அதனால், பாஜக தி.மு.கவுடன் நாடாளுமன்ற கூட்டணிக்கு குறுக்குசால் ஓட்டிப்பார்த்தும் வழியை அடைத்துவிட்டார் மு.க.ஸ்டாலின். பாஜக மீண்டும் ஆட்சியைப் பிடிக்க வேண்டுமானால் தமிழகத்தில் அதிக இடங்களில் வெற்றிபெற்றாக வேண்டிய சூழல். 

ரஜினி கைகாட்டும் அ.தி.மு.க தலைமை... மோடியின் சகோதரர் நாட்டாமை!

இந்த நிலையில், ஓ.பி.எஸ்-ஈ.பி.எஸ் வழிநடத்தி வரும் அ.தி.மு.க மக்களிடையே அவப்பெயரை சம்பாதித்து வருகிறது. அதற்கு ரெய்டும் ஒரு காரணம். இந்நிலையில்தான் தற்போது அ.தி.மு.க தலைமையில் இருப்பவர்களுக்கு கெட்டபெயரை உருவாக்கி விட்டு அ.தி.மு.க-விற்கு புதிய தலைமையை உருவாக்க பாஜக முயன்று வருவதாகக் கூறப்படுகிறது. இதுவும் பாஜகவுக்கு ரஜினி கொடுத்த ஐடியா எனக் கூறப்படுகிறது. இன்னும் கட்சியை அறிவிப்பதற்கே தயங்கி வரும் ரஜினி அ.தி.மு.க உதவியுடன் தேர்தலைச் சந்திக்க விருப்பம் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்தே பிரதமர் மோடியின் சகோதரர் பிரகலாத் மோடி சென்னை வந்தார். 

ரஜினி கைகாட்டும் அ.தி.மு.க தலைமை... மோடியின் சகோதரர் நாட்டாமை!

ஓ.பிஎ.ஸ்- ஈ.பி.எஸ் ஆகியோரை தனித்தனியாகச் சந்தித்து கருத்துக்களை கேட்டறிந்ததோடு சில ஆலோசனைகளையும் வழங்கியதாகக் கூறப்படுகிறது. இதில் திவாகரன் மகனும் அண்ணா திராவிடர் கழகத்தின் இளைஞர் அணிச் செயலாளர் ஜெய் ஆனந்தையும் சந்தித்துப் பேசியது பல்வேறு வியூகங்களுக்கு அடிக்கோள்கிறது. அப்போது பெரும்பான்மையான சமூகத்தினரைப்பற்றியும் ஆலோசித்ததாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து, அ.தி.மு.க தரப்பினர், ’’விரைவில் அ.தி.மு.க தலைமையில் மாற்றம் வரும். இப்போது அ.தி.மு.க-வில் கவுண்டர் மற்றும் முக்குலத்தோர் சமுதாய வாக்குகள்தான் அதிகம். அவர்களை தக்க வைத்தால் மட்டுமே கட்சியை பிழைக்க வைக்க முடியும். எனவே கட்சியின் சீனியரும், அனைவரும் ஏற்றுக்கொள்ளக் கூடியவருமான அமைச்சர் செங்கோட்டையனை தலைமைக்கு கொண்டுவர முயற்சிகள் நடைபெற்று வருகிறது. 

செங்கோட்டையன் கவுண்டர் சமூகத்தை சேர்ந்தவர் என்பதால், முக்குலத்தோர் வாக்குகளும் அவசியம். அதற்காகத்தான் திவாகரன் தரப்பையும் பிரகலாத் சந்தித்துப்பேசினார். விரைவில் திவாகரனின் அண்ணா திராவிடர் கழகம் அ.தி.முக.வில் இணையும். மற்ற சாதியினருக்கும் முக்கியத்துவம் கிடைக்கும் அளவில் பொறுப்புகள் வழங்கப்பட உள்ளது. பதவியை விட்டு விலகி மற்றவர்களுக்கு வாய்ப்பு கொடுக்குமாறு பிரகலாத் எடப்பாடியிடம் கேட்டுள்ளார். ஆனால், எடப்பாடி பழனிசாமி அதெல்லாம் முடியாது எனக்கறாராகக் கூறியிருக்கிறார். ஆகையால், எடப்பாடி தரப்பினர் மீண்டும் ரெய்டில் சிக்கும் வாய்ப்புகள் கூட இருக்கிறது. 

இன்னும் சில மாதங்களில் அ.தி.மு.க தலைமையில் மாற்றம் ஏற்பட்டு, அக்கட்சியுடன் ரஜினி கட்சி- பாஜக கூட்டணி அமையும்’’ என்கிறார்கள் அவர்கள்.     

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP