Logo

காணும் பொங்கல்: சென்னையில் பலத்த பாதுகாப்பு...!

சென்னையில் காணும் பொங்கலையொட்டி பல்வேறு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக சென்னை மாநகர காவல்துறை தெரிவித்துள்ளது.
 | 

காணும் பொங்கல்! சென்னையில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்!

சென்னையில் காணும் பொங்கலையொட்டி பல்வேறு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக சென்னை மாநகர காவல்துறை தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக சென்னை மாநகர காவல்துறை வெளியிட்டுள்ள அறிக்கை:- 

சென்னை முழுவதும் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் காணும் பொங்கலையொட்டி ஆயிரக்கணக்கில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள்.

 

கிண்டி சிறுவர் பூங்கா, காந்தி மண்டபம், புத்தக கண்காட்சி, தீவுத்திடல் உள்ளிட்ட இடங்களிலும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். 

மெரினா கடற்கரையில் மட்டும் 12 கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்கப்பட்டு தொலைநோக்கி மூலம் கடற்கரை முழுவதும் கண்காணிக்கப்படும். 

குதிரைப் படையை சேர்ந்த 10 குதிரையில் காவலர்கள்  தொடர் கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள். 

கடலுக்குள் மக்கள் இறங்கி விடாமல் தடுக்க மெரினா கடற்கரையில், கலங்கரை விளக்கம் முதல் எம்ஜிஆர் சமாதி வரை 3 கி.மீ தொலைவிற்கு கட்டைகளை கொண்டு தடுப்பு வேலிகள் அமைக்கப்பட்டுள்ளன.

மெரினா கடற்கரையில் மட்டும் நாளைய தினம் ஆயிரக்கணக்கான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படவுள்ளனர். 

காவல் துறையின் சார்பில் மணல் பரப்பில் செல்வதற்காக 4 வாகனங்கள் பயன்படுத்தப்பட உள்ளது.

மெரினாவில் உழைப்பாளர் சிலை, காந்தி சிலை ஆகிய இடங்களில் கட்டுப்பாட்டு அறைகள் அமைக்கப்பட்டு கடற்கரை உள் வட்டச் சாலை, காமராஜர் சாலை, மணற்பரப்பு என அனைத்து இடங்களும் கண்காணிக்கப்படும். 

காவல்துறையின் சார்பில்  காந்தி சிலை , கண்ணகி சிலை , உழைப்பாளர் சிலை அருகே மூன்று காவல் உதவி மையங்கள் அமைக்கப்படவுள்ளன.  

மெரினா கடற்கரையில் ஆளில்லா விமானம் பறக்க விடப்பட உள்ளது. எவ்வளவு பேர் கூடியுள்ளனர் என்ற எண்ணிக்கையை கணக்கிடும் வகையில் சிறப்பு கேமரா அதில் பொருத்தப்பட உள்ளது. 

8 மெகா கேமராக்கள் ஏற்கனவே பொருத்தப்பட்டுள்ளன. கூடுதலாக கேமராக்கள் பொருத்தும் பணி நடைபெறுகிறது. குற்றவாளிகளை அடையாளம் காணும் பேஸ் டிடெக்‌ஷன் கேமராவும் பயன்படுத்தப்பட உள்ளது. 

தீயணைப்பு சார்பில் 6 தீயணைப்பு வாகனங்களில் 72 வீரர்கள் தயார் நிலையில் இருப்பார்கள். 

கடலுக்குள் மக்கள் தவறி விழுந்தால் அவர்களை  காப்பாற்றுவதற்கு, தீயணைப்புத் துறை சார்பில் 10 நீச்சல் வீரர்கள் விவேகானந்தர் இல்லம் பகுதியில் மீட்பு உபகரணங்களுடன் தயாராக இருப்பார்கள். கூடுதலாக நொச்சிக்குப்பம் உள்ளிட்ட கடற்கரை பகுதியை சேர்ந்த தன்னார்வலர்களும் மீட்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். 

கடற்கரைக்கு வரும் குழந்தைகள் பாதுகாப்பிற்காக குழந்தைகளின் கைகளில் காவல் துறையின் சார்பில் விசேஷ பாண்ட் பொருத்தி விடப்படும். அந்த பாண்டில் காவல்துறை சார்பில் விசேஷ எண் கொடுக்கப்படும்

குழந்தைகள் கடத்தலை தடுக்க 15 குழுக்கள் அமைக்கப்பட்டு கண்காணிக்கப்பட உள்ளது. 

கடலோர பாதுகாப்பு குழுமத்தின் சார்பில் மணலில் செல்லக்கூடிய மூன்று  ATV வாகனமும் மெரினாவில் பயன்படுத்தப்படும்.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP