யானையின் தந்தத்தை திருடி விற்க முயன்ற கும்பல் கைது!

கோவை வனப்பகுதிக்குள் இறந்து கிடந்த ஆண் யானையின் தந்தத்தை திருடி விற்க முயன்ற கும்பலை வனத்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
 | 

யானையின் தந்தத்தை திருடி விற்க முயன்ற கும்பல் கைது!

கோவை வனப்பகுதிக்குள் இறந்து கிடந்த ஆண் யானையின் தந்தத்தை திருடி விற்க முயன்ற கும்பலை வனத்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர். 

கோவை மாவட்டம்,  பெரியநாயக்கன்பாளையம் வனச்சரகத்திற்குட்பட்ட  குஞ்சூர்பதி மலைவாழ் மக்கள்  கிராமம் அருகே கடந்த 2017 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் வனப்பகுதியில் ஆண் யானை ஒன்று இறந்து கிடந்தது. இதனை அப்பகுதியை சேர்ந்த கார்த்திக் குமார் என்பவர் பார்த்து தனது நண்பரான பெருக்குபதி ஊரை  சேர்ந்த ஈஸ்வரன் என்பவரிடம் தகவல் தெரிவித்துள்ளார். இருவரும் இணைந்து சம்பவ இடத்துக்கு சென்று இறந்த யானையின் உடலில் இருந்து தந்தத்தை எடுத்துள்ளனர். பின்னர்  குஞ்சூர்பதியை  சேர்ந்த வீரபத்திரன் என்பவரிடம் இதைப்பற்றி தெரிவித்து தந்தங்களை விற்க கோவனூரை  சேர்ந்த தாமோதரன் என்பவரை அணுகியுள்ளனர். மேலும், வனப்பகுதியில் மறைத்து வைத்திருந்த தந்தங்களை தாமோதரனுக்கு  காட்டி விற்க ஏற்பாடு செய்யுமாறு கூறியுள்ளனர்.

இதனிடையே தந்தங்களை  கேரளாவில் விற்பதற்காக பில்லூர் அணை பகுதியில் ஆதிவாசிகள் கிராமத்தைச் சேர்ந்த தங்கராஜ் மற்றும் மங்கலக்கரைபுதூர் பகுதியைச் சேர்ந்த மோகன்ராஜ் என்பவரிடம் அணுகி தந்தத்தை விற்க முயற்சி செய்துள்ளனர். பின்னர் தந்தங்களை  சீலியூர் கிராம வன எல்லையில்  மறைத்து வைத்துள்ளனர். அப்போது தங்கராஜ் அந்த தந்தத்தை மற்றவருக்கு தெரியாமல் எடுத்துச் சென்று கேரளாவில் உள்ள ஒரு இடத்தில் மறைத்து வைத்துள்ளார்.

இதுதொடர்பாக வனத்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்ததன் பேரில் கடந்த வாரம் இருவரை பிடித்து விசாரணை மேற்கொண்ட வனத்துறையினர் அவர்கள் இருவரையும் சிறையில் அடைத்தனர். இதனிடையே வனத் துறையினரால் தேடப்பட்டு வந்த ஈஸ்வரன் கோவை நீதிமன்றத்தில் சரணடைந்தார். இதனைத் தொடர்ந்து மோகன்ராஜை  பிடித்த வனத்துறையினர் அவரிடம் விசாரணை மேற்கொண்டனர். அதில் வனப்பகுதியில் திருடிய யானை தந்தங்களை கேரளாவில் விற்க முயற்சி செய்து அந்த முயற்சி தோல்வியடைந்ததால் கேரள மாநிலம் கொச்சியில் தந்தங்கள் மறைத்து வைக்கப்பட்டு உள்ளதாக தெரிவித்துள்ளார். இதனையடுத்து பெரியநாயக்கன்பாளையம் வனத்துறையினர் கேரள மாநிலம் கொச்சி சென்று கிணற்றுக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த 5 கிலோ எடையுள்ள இரண்டு அடி நீளம் கொண்ட  தந்தங்களை கைப்பற்றினர். இதனையடுத்து  தங்கராஜ் மற்றும் மோகன்ராஜ் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்து மேட்டுப்பாளையம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கோவை  மத்திய சிறையில் அடைத்தனர்.

Newstm.in 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP