மத்தியபடை பாதுகாப்பு நீடிக்கும்: சென்னை உயர்நீதிமன்றம்

சென்னை உயர்நீதிமன்றம், உயர்நீதிமன்ற மதுரை கிளைக்கு வழங்கப்பட்டு வரும் மத்திய படை பாதுகாப்பு மறு உத்தரவு வரும் வரை நீடிக்கும் என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
 | 

மத்தியபடை பாதுகாப்பு நீடிக்கும்: சென்னை உயர்நீதிமன்றம்

சென்னை உயர்நீதிமன்றம், உயர்நீதிமன்ற மதுரை கிளைக்கு வழங்கப்பட்டு வரும் மத்திய படை பாதுகாப்பு மறு உத்தரவு வரும் வரை நீடிக்கும் என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

கடந்த 2015ஆம் ஆண்டும் சென்னை உயர்நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி அறையின் முன்பு தமிழை வழக்காடு மொழியாக்க வேண்டும் என வலியுறுத்தி வழக்கறிஞர்கள், சட்டக்கல்லூரி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து உயர்நீதிமன்றத்திற்கு மத்திய தொழில் பாதுகாப்பு படையின் பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வு உத்தரவிட்டது.

உத்தரவின் பேரில் கடந்த 2015 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் முதல் சென்னை உயர்நீதிமன்றத்தின் பாதுகாப்பு பணியை மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் மேற்கொண்டுள்ளனர். உயர் நீதிமன்ற மதுரை கிளைக்கும் மத்திய படை பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்த பாதுகாப்பு ஒவ்வொரு ஆண்டாக நீட்டிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், மத்திய படை பாதுகாப்பை நீட்டிப்பது தொடர்பான வழக்கு, சென்னை உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதி வினீத் கோத்தாரி, நீதிபதி சரவணன் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது மத்திய அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர் மத்திய படை பாதுகாப்பை நீட்டிக்க வேண்டும் என்றும் மத்திய படை பாதுகாப்பு இல்லாத நீதிமன்ற வளாகத்தில் கொலை முயற்சி, போராட்டங்கள் நடைபெற்று வருவதாகவும் கூறினார். மேலும் ஒவ்வொரு ஆண்டாக நீட்டிப்பதற்கு பதிலாக நிரந்தரமாக நீட்டிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

இதை தொடர்ந்து தமிழக அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர், மத்திய படை பாதுகாப்பு கொண்டு வந்தால் வழக்கறிஞர்கள் அறைக்கு வரும் வழக்கு தொடர்பவர்கள் பாதிக்கப்படுவார்கள் என்றும், நிரந்தரமாக மத்திய படை பாதுகாப்பு கொண்டு வருவதற்கு முன்பு அந்த இடங்களை பயன்படுத்துபவர்களின் கருத்துக்களையும் கேட்க வேண்டும் என வலியுறுத்தினார். 

இதையடுத்து, மறு உத்தரவு வரும் வரை சென்னை உயர்நீதிமன்றத்திற்கும், உயர்நீதிமன்ற மதுரை கிளைக்கும் மத்திய படை (சிஐஎஸ்எப்) பாதுகாப்பு நீடிக்கும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும்,  சென்னையில் உள்ள மற்ற நீதிமன்றங்களுக்கும் மத்திய படை பாதுகாப்பு வழங்குவது குறித்து ஆராய்ந்து மூன்று மாதத்தில் அறிக்கை அளிக்க உயர்நீதிமன்ற பாதுகாப்பு குழுவுக்கு உத்தரவிட்டு வழக்கை ஒத்தி வைத்தது. 

Newstm.in 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP