Logo

மோஜோ 19 | கதைகளுக்கு அருகே செல்லும் வாய்ப்பு!

பெரிய கேமராக்கள் இல்லாமல், ஸ்மார்ட்போனை வைத்துக்கொண்டு செயல்படுவது இன்னும் சிறப்பாக கதை சொல்ல இதழாளர்களுக்கு உதவுவதாக கீர்ஜே அல்கேரா சொல்கிறார்.
 | 

மோஜோ 19 | கதைகளுக்கு அருகே செல்லும் வாய்ப்பு!

செய்தியாளர்களுக்கு செல்பேசி இதழியல் பல்வேறு சாதகங்களை அளிக்கிறது. படக்குழுவோ, உபகரணங்களோ இல்லாமல் எந்த நேரத்திலும், எந்த இடத்திலும் செய்தி சேகரிக்க வழி செய்கிறது. இவைத் தவிர இதழாளர்கள் மிகவும் முக்கியமாக கருதும் அம்சம், கதைகளுக்கு மிகவும் அருகே செல்லும் வாய்ப்பை செல்பேசி இதழியல் ஏற்படுத்தி தருவதுதான்.

நெதர்லாந்தைச் சேர்ந்த செல்பேசி இதழாளரான கீர்ஜே அல்கேரா (Geertje Algera) இதைக் களத்தில் உணர்ந்திருக்கிறார். அதானால் தான், "இதற்கு முன்னர் நான் சென்றிராத இடங்கள் மற்றும் பேட்டி கண்டிறாதவர்களை நோக்கி செல்வதற்கான புதிய கதவுகளை செல்பேசி இதழியல் திறந்திருக்கிறது" என்கிறார்.

நெதர்லாந்தின் அரசு தொலைக்காட்சியான KRO-NCRV-ல் வீடியோ இதழாளராக பணியாற்றிக் கொண்டிருந்தவர், இப்போது செல்பேசி இதழியல் மூலம் கதை சொல்பவராகவும், பயிற்சி அளிப்பராகவும் இருக்கிறார். பெரிய கேமராக்கள் இல்லாமல், ஸ்மார்ட்போனை வைத்துக்கொண்டு செயல்படுவது இன்னும் சிறப்பாக கதை சொல்ல இதழாளர்களுக்கு உதவுவதாக அவர் சொல்கிறார்.

இதற்கு முன்னர் கேமரா குழுவை ஒப்பந்தம் செய்துகொண்டு களத்திற்கு செல்ல வேண்டியிருந்தது. பட்ஜெட் பற்றிய கவலையும் இருக்கும். ஆனால் இப்போது அந்தக் கவலை இல்லாமல் சுதந்திரமாக செயல்படும் உற்சாகம் அவருக்கு இருக்கிறது. பெரும்பாலும் அவர் ஐபோன் மற்றும் மைக் பயன்படுத்துகிறார். தேவை எனில் கேமராவை நிறுத்த டிரைபாடு பயன்படுத்துகிறார். ஆனால் பல நேரங்களில் கையில் போனை மட்டுமே பிடித்திருப்பது கதைகளை நோக்கி வேகமாக செல்வதை சாத்தியமாக்குகிறது என்கிறார்.

தங்கள் வீடுகளில் கேமரா குழுவை அனுமதிக்க தயக்கம் காட்டும் மனிதர்களை எளிதாக அணுக செல்போன் வழி செய்கிறது. ஏனெனில் அது மிகவும் இணக்கமானதாக இருக்கிறது என்கிறார் அவர். பெரும்பாலும் மனித முகம் கொண்ட கதைகளை நாடிச்செல்லும் அல்கேரா, செல்பேசி இதழியல் உணர்வுபூர்வமான அல்லது தனிப்பட்ட கதைகளை சொல்ல மிகவும் ஏற்றது என்கிறார். கேமரா குழுவுடன் நான் பலமுறை செய்தி சேகரித்திருக்கிறேன். ஆனால் தெருக்களில் பேட்டி எடுப்பதாக இருந்தால், அதிலும் குறிப்பாக பர்தா அணிந்தவர்களுடன் பேசுவது என்றால், அவர்களை பேச வைப்பது மிகவும் கடினமானது என்கிறார் அவர் மேலும்.

பெரிய கேமராக்களை கண்டாலே பயமும், தயக்கமும் வந்துவிடுகிறது, ஆனால் இப்போது அப்படி இல்லை என்றும் அவர் உற்சாகம் கொள்கிறார். பேட்டி காண்பவர்களுடன் தொடர்பு கொண்டு, நெருக்கம் கொள்ள முடிவதாகவும், கேமரா குழுவுடன் இயங்கும்போது இது சாத்தியமில்லை என்று சொல்பவர், செல்பேன் இதழியல் அனுபவத்தில் இதுவரை படமெடுக்க அனுமதிக்கப்படாத பல இடங்களில் நுழைய முடிந்திருக்கிறது என்கிறார். இதற்கு உதாரணமாக இஸ்லாமியர்கள் மீதான் அச்சம் பற்றி, பல்கலைக்கழகம் ஒன்றில் செய்தி சேகரிக்க அனுமதி பெற்றதை குறிப்பிடுகிறார். அந்தப் பல்கலைக்கழகம் கேமரா குழுக்களை திரும்பி அனுப்பிவிட்ட நிலையில், தன்னை அனுமதிக்க செல்பேசியே காரணம் என்கிறார். அங்குள்ள இஸ்லாமிய மாணவிகளிடம் அவர் பேசி வெளியிட்ட காணொலி செய்தி பின்னர் இணையத்தில் வைரலானது.

எல்லோரையும் எளிதாக அணுக உதவுவதோடு, பெரும்பாலும் வெகுஜன ஊடகங்கள் கவனம் செலுத்தாத கதைகளை செல்பேசி மூலம் சொல்ல முடியும் என அவர் நம்புகிறார். தொலைக்காட்சிகளில் தீவிரவாதிகளும், வல்லுனர்களும் தான் வந்து கொண்டிருக்க வேண்டும் என்றில்லை, சாதாரண மனிதர்களும் வர வேண்டும் என்கிறார். பொதுமக்களுடன் இதழாளர்களுக்கு தொடர்பை ஏற்படுத்து தரும் வாகனமாக செல்பேசி இதழியல் இருக்கும் என்பது அவரது நம்பிக்கையாக இருக்கிறது.

இவரைப் போலவே ஸ்பெயின் தொலைக்காட்சி இதழாளரான லியோனார் சவுரேஸும் செல்பேசி இதழியல் மீது நம்பிக்கை கொண்டுள்ளார். ஸ்பெய்னின் பிராந்திய தொலைக்காட்சியான Radiotelevisión del Principado de Asturias நிறுவனத்தின் இதழாளரான சவுரேஸ், ஐம்பது நிமிட செய்திப்படம் ஒன்றை ஐபோனில் எடுத்திருக்கிறார். பொலிவியா சுரங்கங்களில் தொழிலாளர்கள் நிலை தொடர்பாக ஐபோனில் எடுத்த செய்திப்படத்திற்காக இவர் 2016-ம் ஆண்டின் சிறந்த செல்பேசி இதழாளர் விருது பெற்றுள்ளார். 

இந்த செய்திப்படம் அவர் திட்டமிட்டு எடுத்தது அல்ல. பொலிவியா நாட்டிற்கு விடுமுறைக்காக சென்றிந்தார். அங்கு சில்வர் மைன்ஸ் சுரங்கத்தின் நிலையை பார்த்து திகைத்துப்போனார். அந்தக் காட்சி அவருக்குள் இருந்த செய்தியாளரை விழித்துக்கொள்ளச் செய்ததால், ஐபோனிலேயே படம் பிடித்து தொழிலாளர்களை பேட்டி காணத் துவங்கினார். "என்னைப் பொருத்தவரை ஓர் இதழாளராக மிகவும் கடினமான சூழல்களில் கூட எங்கிருந்தாலும், எந்த நேரத்திலும் ஐபோன் மூலம் கதை (செய்தி) சொல்ல முடிவதுதான் மிகவும் முக்கியமானது" என இந்த அனுபவம் பற்றி அவர் குறிப்பிடுகிறார்.

சவுரேஸ் தொலைக்காட்சி இதழாளராக பணியாற்றிக் கொண்டிருந்த காலத்தில் ஐபோனில் படம் எடுக்க வேண்டும் என்று நினைத்ததில்லை. அவருக்கு தொழில்நுட்ப விஷயத்தில் ஆர்வம் இருந்ததில்லை. ஆனால் மோஜோ மாநாட்டில் பங்கேற்று செல்பேசி இதழியல் பற்றி அறிந்துகொண்டபோது அவர் இந்த கருத்தாக்கத்தால் ஈர்க்கப்பட்டார்.

இதன் பயனாக உள்ளூர் கலை திட்டம் தொடர்பான 11 நிமிட செய்தி படத்தை ஐபோனில் உருவாக்கினார். அதன் பிறகு அவர் செல்பேசி இதழியலில் மிகவும் ஆர்வம் காட்டி வருகிறார். இந்த அனுபவத்தின் பயனாக, ஸ்பெயின் உள்நாட்டு போரில் உயிர் தப்பிய 97 வயது போராளி பற்றிய 50 நிமிட செய்தி படத்தை உருவாக்கியுள்ளார். தான் விரும்பிய வகையில் செய்திப் படத்தை உருவாக்கலாம் எனும் நம்பிக்கையில் இதழியலில் கற்ற நுணகங்களை எல்லாம் பயன்படுத்தி இந்தப் படத்தை உருவாக்கியதாக குறிப்பிடுகிறார்.

ஐபோன், டிரைபாடு, மைக் ஆகியவற்றை வைத்துக்கொண்டு போராளியுடன் பேசுவது, அவரது உறவினர்களை பேட்டி காண்பது என எல்லாவற்றையும் அவர் ஒருவரே செய்திருக்கிறார். சிறந்த கோணங்களை தேர்வு செய்யவும், காட்சிகளை சரி பார்க்கவும் அல்லாட வேண்டியிருந்தது. ஒவ்வொரு நாளும் காட்சிகளை எடுத்த பிறகு அவற்றை செல்போனில் இருந்து கிளவுட் சேவைக்கு மாற்றிக்கொண்டார். அதிகம் கஷ்டப்பட்டாலும் ஆறு நாட்களில் படத்தை எடுத்து முடித்துவிட்டார்.

இதழாளர்கள் உட்பட அனைவரும், குறைந்த பட்ஜெட்டில் சிறந்த காணொலி கதைகளை உருவாக்க செல்பேசி இதழியல் உதவுதாக அவர் உற்சாகமாக சொல்கிறார். இந்தச் செய்திப் படம் அவர் பணியாற்றும் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிறகு இணையத்தில் வெளியிட திட்டமிட்டிருக்கிறார். ஆங்கிலத்தில் துணை தலைப்புகள் சேர்க்கவும் எண்ணியுள்ளார்.

பொலிவிய சுரங்கம் பற்றி செய்திப் படம் எடுத்தபோது மிகவும் குறைந்த வெளிச்சத்தில் காட்சிகளை படம் பிடித்தார். பொதுவாக பிலிமிக்புரோ கேமரா செயலியை அவர் பயன்படுத்துவது வழக்கம் என்றாலும், இந்தச் சூழலில் அது சிக்கலானது என்று ஐபோன் கேமராவை பயன்படுத்தினார். சவுரேஸ் அனுபவத்தில் உணர்ந்த பிற குறிப்புகள்:

• செய்திப் படம் எடுக்கும் போது செல்பேசியின் நினைவுத்திறன் ஒரு பிரச்சனையாக இருக்கலாம். எனவே எப்போதும் கைவசம் கூடுதல் மெமரி கார்டு வைத்திருக்கவும்.

• எல்லா காட்சிகளையும் இரண்டு முறை பேக் அப் எடுக்கவும். ஹார்டு டிஸ்கில் ஒரு முறை, கிளவுட் சேவையில் இன்னொரு முறை.

• ஐமூவி செயலியில் எடிட் செய்யவும்.

• ஐபோனை பயன்படுத்துவதால் தொழில்முறை தன்மையை கைவிட வேண்டாம்.

• சூழலின் கட்டுப்பாடுகளுக்கு ஏற்ப செயல்படவும். உங்கள் அருகே உள்ள ஒளிச் சூழலை பயன்படுத்திக்கொள்ளவும்.

... மோஜோவில் இன்னும் மூழ்குவோம் ...

- சைபர்சிம்மன், பத்திரிகையாளர் - எழுத்தாளர், தொடர்புக்கு enarasimhan@gmail.com

முந்தைய அத்தியாயம்: மோஜோ 18 | மோஜோ மகாராஜாவும் 10 கட்டளைகளும்

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP