மோஜோ 13 | செல்பேசி இதழாளருக்குத் தேவையான திறன்கள்

சிறந்த காட்சிக் கதைகளை உருவாக்கும்போது தொலைக்காட்சி இலக்கணத்தை அறிந்திருப்பது அவசியம்.
 | 

மோஜோ 13 | செல்பேசி இதழாளருக்குத் தேவையான திறன்கள்

செல்பேசி இதழியலுக்கு தேவையான திறன்களை இத்துறை முன்னோடிகளில் ஒருவரான கிளன் முல்கஹி தகவல் வரைபடமாக அளித்திருக்கிறார். 

வெற்றிகரமான டிஜிட்டல் இதழாளராக திகழ்வதற்கான குறிப்புகள் எனும் தலைப்பில் இந்தத் தகவல் வரைபடம் அமைந்திருப்பதும் பொருத்தமானதே. ஏனெனில், செல்பேசி இதழாளராக திகழ்வது என்பது டிஜிட்டல் இதழாளராக திகழ்வதுதான். டிஜிட்டல் இதழியலின் தனிச்சிறப்பாக அமையும் பல் ஊடக தன்மையின் தேவையே செல்பேசி இதழியலாக பரிணமத்திருக்கிறது.

புகைப்படக் கலைத் திறன்:

புகைப்படம் இணையக்கப்பட்ட ட்விட்டர் குறும்பதிவு இருமடங்கு அதிகம் பகிரப்படும் வாய்ப்பு இருக்கிறது. ஆயிரம் வார்த்தைகள் சொல்வதை ஒரு படம் சொல்லிவிடும். இப்படி சொல்லிக்கொண்டே போகலாம். விஷயம் என்னவெனில், புகைப்படக் கலையில் தேர்ச்சி பெற்றிருப்பதே செல்பேசி இதழியலில் சிறந்து விளங்க முதலில் தேவையான திறன். கண்ணாடி இல்லா கேமரா அல்லது டி.எஸ்.எல்.ஆர் கேமராவை உடன் வைத்திருப்பதை மோஜோ என்று கருதலாம். காட்சிரீதியாக கதை சொல்வதில், உங்கள் புகைப்படக் கலை முக்கிய பங்கு வகிக்கிறது. இதில் தேர்ச்சி கொள்ளுங்கள்.

வானொலி அனுபவம்:

செல்பேசி இதழியலில் சிறந்து விளங்குவது என்பது ஒலியின் முக்கியத்துவத்தை புரிந்துகொள்வதாகும். சரியான மைக் கொண்டு ஒலிப்பதிவு செய்வது, ஒலியை எடிட் செய்ய அல்லது மிக்ஸ் செய்ய எந்த செயலிகளை பயன்படுத்த வேண்டும் என அறிந்திருக்க வேண்டும். நீங்களே சொந்த வானொலித் தொகுப்பு அல்லது பாட்காஸ்டிங்கை உருவாக்கலாம். மற்ற பல் ஊடக உள்ளடக்கத்திற்கான அடிப்படையாக இது அமையும்.

தொலைக்காட்சி இலக்கணம்:

சிறந்த காட்சிக் கதைகளை உருவாக்கும்போது தொலைக்காட்சி இலக்கணத்தை அறிந்திருப்பது அவசியம். காட்சி அளவுகள் ஏன் முக்கியம், கோணங்கள் ஏன் முக்கியம் போன்றவற்றை அறிந்திருக்க வேண்டும். இவை அனைத்தும் கதை சொல்லலின் உளவியல் தன்மையில் தாக்கம் செலுத்துகிறது. தொடர் வரிசையில் காட்சிகளை அமைப்பது காட்சிரீதியான கதை சொல்லலின் அடிப்படை என்பதோடு, எடிட்டிங்கிலும் முக்கிய அங்கம் வகிக்கிறது. படம் பிடிக்க கற்றுக்கொள்ள வேண்டும் எனில், எடிட் செய்யவும் கற்றுக்கொள்ள வேண்டும்.

அச்சு வெளியீடு:

நாளிதழ் அல்லது பத்திரிகையில் பணியாற்றுவதன் மூலம் கிடைக்ககூடிய இதழியல் மொழி மற்றும் ஒழுங்கு உள்ளடக்க உருவாக்கத்தில் மிகவும் உதவியாக இருக்கும். இந்த உள்ளடக்கம் இணையத்திற்கு அல்லது செல்பேசி சார்ந்த பல் ஊடக அனுபமாக இருக்கலாம். எப்படி பார்த்தாலும், அச்சு ஊடக அனுபவம் உங்களுக்கு உதவியாக இருக்கும்.

சமூக ஊடகம்:

இதழாளரின் பணி இனியும் நேர்க்கோட்டிலானது இல்லை. சமூக ஊடக பயன்பாட்டையும் நீங்கள் கற்றுத்தேர வேண்டும். ஒவ்வொரு வகை ஊடகத்திலும் எது செல்லுபடியாகும் என அறிந்து, உங்கள் பார்வையாளர்களை சென்றடைய ஏற்ற வகையில் எழுத கற்றுக்கொள்ள வேண்டும். இதன் மூலம் உங்கள் டிஜிட்டல் பிராண்டை உருவாக்கி கொள்ளலாம்.

உள்ளூரும் உலகமும்:

சில நேரங்களில் உங்களுக்கான பார்வையாளர்களை கண்டறிவதில் சிக்கலை உணரலாம். ஆனால் உங்கள் பார்வையாளர்கள், ஒரே நேரத்தில் உள்ளூர் மற்றும் உலக அளவில் இருப்பதை உணரவும். சர்வதேச அளவில் தாக்கத்தை ஏற்படுத்தகூடிய உள்ளூர் உள்ளடக்கத்தைத் தேடவும்

தொழில்நுட்பம் அஞ்சேல்:

தொழில்நுட்பத்தில் பாய்ச்சல் ஏற்பட்டு வரும் வேகத்தை பார்த்தால் மிரட்சியாகத்தான் இருக்கும். ஆனால் நவீன தொழில்நுட்ப போக்குகளை அறிந்திருப்பது அவசியம். வாய்ப்புகள் உருவாகும்போதே அவற்றை கண்டறிய வேண்டும். தொழில்நுட்ப விவாத குழுக்களில் இணைந்து நவீன போக்குகள் மீது ஒரு கண் வைத்திருக்கவும்.

கோடிங் அறிவு

இது எல்லோருக்குமானது இல்லை என்றாலும் கூட, கம்ப்யூட்டர் நிரல்களை எழுதுவதற்கான அடிப்படை கோடிங் திறனை கற்றுக்கொள்வது நல்லது. இதைக் கற்றுக்கொள்ளும் அனுபவம் ஹேக்கத்தான் போன்ற நிகழ்வுகளில் பங்கேற்க வைத்து செழுமையான அனுபவம் தரும்.

...மோஜோவில் இன்னும் மூழ்குவோம்...

- சைபர்சிம்மன், பத்திரிகையாளர் - எழுத்தாளர், தொடர்புக்கு enarasimhan@gmail.com

முந்தைய அத்தியாயம்: மோஜோ 12 | 'பிரேக்கிங்' செய்திகளை படம் பிடிப்பது எப்படி?

 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP