பிள்ளைகள் பண முதலீடு செய்வதற்கான வங்கிகள் அல்ல என்பதை எப்போது தான் உணர்வார்கள் இந்த பெற்றோர்கள் ??

பெற்றோரின் ஆசைக்காக, பணத்தை முதலீடு செய்ய அவர்கள் வங்கிகள் அல்ல என்பதை அவர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
 | 

பிள்ளைகள் பண முதலீடு செய்வதற்கான வங்கிகள் அல்ல என்பதை எப்போது தான் உணர்வார்கள் இந்த பெற்றோர்கள் ??

தமிழகத்தில் எம்.ஜி.ஆர் ஆட்சி காலத்திற்கு முன்பு வரை அரசு பள்ளிகள் தான் கதி. 50 வயதுக்கு மேல் உள்ள எப்பேர்பட்ட சிறந்தவராக இருந்தாலும் அரைக்கால் டவுசர் போட்டு படித்தது அரசு பள்ளியில் தான். ஆனால் இன்று அரசு பள்ளிகளை யாரும் கண்டு கொள்வதே இல்லை. தமிழக சமுதாயத்திற்கு தமிழ் தேசியம் நல்லது தான். ஆனால் படிப்பதற்கு ஆங்கில வழிக்கல்விதான் சிறந்தது. இன்றைக்கு நமது சமுதாயத்தில் தமிழ் வழி, ஆங்கில வழி, மெட்ரிக் பள்ளி, சிபிஎஸ்சி, இன்டர் நேஷனல் பள்ளி என்று விதவிதமான பள்ளிகள் தொடங்கப்பட்டு விட்டன.

பெற்றோர்களுக்கு பிள்ளைகள் தளிர் நடை பயிலும் போதே எந்த பள்ளியில் எந்த முறையில் சேர்ப்பது என்ற கவலை தொடங்கி விடுகிறது. இதனால் தான், 2 வயது கூட நிரம்பாத குழந்தையை சேர்ப்பதற்காக பள்ளியின் தரம் பற்றி விசாரிக்கும் பெற்றோர், தங்கள் பிள்ளைக்கு அந்த பாடங்களை படிக்கும் திறன் இருக்கிறதா என்பது குறித்து சிந்திப்பதே இல்லை. இதற்கு காரணம், மற்றவர்கள் முன்பு தனது மகன்/மகள் நல்ல பள்ளியில் படிக்க வேண்டும், அனைவரும் அவர்களை மதிக்க வேண்டும் என்பதாக கூட இருக்கலாம். 

ஆனால், இது அந்த குழந்தையை தான் பாதிக்கும். சமுதாயத்திற்கு முன்பு சிறந்து காண வேண்டும் என்பதற்காக குழந்தையின் மனநிலையை புரிந்து கொள்ள தவறுகின்றனர் பெற்றோர். இதன் விளைவே சம்பந்தப்பட்ட மாணவருக்கு ஏற்படும் மன பிறழ்ச்சி.

ஓர் பணக்கார வீட்டு சிறுவன், பள்ளியில் சக மாணவர்களுடன் சண்டை போடுகிறான், பேனா, பென்சில் திருடுகிறான். ஆசிரியை விசாரிக்கும் போது மாணவருக்கு அந்த பாடத்திட்டத்தை படிக்க முடியவில்லை, அவருக்கு அதில் விருப்பம் இல்லை என்பது தெரிய வருகிறது. ஆனால் பெற்றோருக்கு பயந்து அந்த மாணவரால் தனது எதிர்ப்பையும் காட்ட முடியவில்லை. இந்த மன உளைச்சலின் விளைவுதான் இது போன்ற செயல்கள் என்பது தெரிய வருகிறது.

பள்ளிகளின் இதே நிலைதான் கல்லுாரிகளிலும். பெரும்பாலும் அரசு கல்லுாரிகளில் படிக்கும் மாணவர்கள் பொருளாதார கஷ்டத்தினால் தான் அங்கு சேர்க்கப்படுகின்றனர். அங்கு படிப்பது எளிது என்றாலும், அதன் சூழல் அவ்வளவு திருப்திகரமாக இருப்பதில்லை. ஆனால் தனியார் கல்லுாரியின் சூழலும், பிரமிப்பான தோற்றமும், தனது மகனை அங்கு படிக்க வைக்க வேண்டும் என்று கனவு காண தொடங்கி விடும் பெற்றோர், கல்லுாரி கட்டணத்திற்கே கடன் வாங்கி மகனை அங்கு சேர்க்கிறார்கள். அங்கு அவன் இதர பணக்கார மாணவர்களுடன் இணைந்து படிக்கவே செலவுகள் எகிறும். இந்த சமயத்தில் தான் பேராசிரியை நிர்மலாதேவி போன்றவர்கள் மாணவிகளுக்கு கால் நடையாக வந்த கடவுளாக தெரிகிறார்கள்.

இது கல்லுாரி வாழ்க்கை. இன்னொரு புறம் கல்வி கற்பதும் சிரமமாகவே உள்ளது. அதிலும் மனதிற்கு பிடிக்காத பாடத்தை படிப்பது அதை விட கொடுமை. கலைக் கல்லுாரியில் படிப்பதை விட, தொழில்நுட்ப கல்லுாரி படிப்பு கடினம், மருத்துவம் அதை விடக் கடினம். ஐஐடி போன்றவற்றில் படிப்பது உச்சகட்ட கடினம். இதற்காக தான் கடுமையான தேர்வுகள் நடத்தப்படுகிறது. இந்த தேர்வையே எழுதி தேர்ச்சி பெற முடியாதவன் எப்படி 4,5 ஆண்டுகள் அங்கு படிக்கப் போகிறான் என்று பெற்றோர்கள் சிறிதளவும் சிந்தித்து பார்ப்பதில்லை.

இதன் விளைவு, லட்சக்கணக்கில் பணத்தை இரைத்துக்கூட மருத்துக் கல்லுாரியில் இடம் வாங்குகிறார்கள். பிறகு அவன் பாடு, வாத்தியார் பாடு என்று இருந்து விடுகிறார்கள். தன்னால் படிக்க முடியவில்லை என்று கூட சம்பந்தப்பட்ட மாணவ, மாணவிகள் பெற்றோர்களிடம் சொல்ல முடிவதில்லை. அப்படியே சொன்னாலும் கல்லுாரிக்கு கட்டிய கட்டணங்களை நினைத்து  பிள்ளைகள் சொல்வதை பெற்றோர்கள் ஏற்பது இல்லை.

இதனால் மாணவர்கள் மன உளைச்சலில் சிக்கி தவிக்கிறார்கள். அவர்களை புரிந்து கொள்ள வேண்டிய பெற்றோர்களே அவர்களின் விருப்புகளை புறக்கணிப்பதால் தற்கொலைக்கு துாண்டப்படுகிறார்கள்.

இத்தகைய மனநிலையில், போகிற போக்கில் ஏதாவது செய்வோம் என்று சில பேராசிரியர்களின் பெயர்களை குறிப்பிட்டு, தங்களது சாவிற்கு அவர்கள் தான் காரணம் என்று குற்றம்சாட்டிவிட்டு செல்கிறார்கள். இதில் இறந்தவர், சிக்கிய பேராசிரியர், கல்லுாரி நடத்துபவர் என்று எந்த தரப்பில் இருந்து லாபம் வரும் என்று கழுகு போல காத்திருக்கும் விஷ்வல் நக்சல்கள் தங்களுக்கு லாபம் தரும் விவகாரத்தை பெரிது படுத்துக்கின்றன. அவை பேராசிரியர்கள் மீது தொடர்ந்து குற்றம்சாட்டுவதால் அவர்கள் மீது மக்களுக்கு ஆத்திரம் வருகிறது.

தமிழில் தான் பேராசிரியர்கள் என்று கூறுகிறோம். ஆங்கிலத்தில் லெட்சரர் என்று தான் அழைக்கப்படுகிறார்கள். லெட்சரர் என்று குறிப்பிடப்படுபவர் பாடம் நடத்த மாட்டார். பாடம் பற்றி உபன்னியாசம் தான் செய்வார். அதைப் புரிந்து கொண்டு மாணவர்கள் தான் படிக்க வேண்டும்.

சென்னை ஐஐடியில் மாணவர்களின் சந்தேகங்களை தீர்ப்பதற்காகவே இரவு 8 மணி வரை கல்லுாரியில் பேராசிரியர்கள் காத்திருக்கிறார்கள். கல்வி என்பது ஒவ்வொரு மாணவர் மனதில் இருந்து வர வேண்டிய ஒன்று. அவ்வாறு வராவிட்டால், அந்த மாணவரின் மனதிற்கு அது ஒப்பாவிட்டால், அவர் கல்லுாரியை விட்டு வெளியே வர வேண்டும். அதை விடுத்து தற்கொலை செய்து கொள்வது தவறான ஒன்று.

அதே நேரத்தில் இது போன்ற சம்பவங்களை அரசியல் ஆக்குவது, நிதி கொடுப்பது, கொடுமையிலும் கொடுமையாக பாதிக்கப்பட்டவர் என்ற அடிப்படையில் அரசு வேலை கொடுப்பதெல்லாம் மிகவும் தவறான விஷயம். 

இது தமிழக அரசியலில் ஏற்படும் அவலம். இது போன்ற செயல்கள் தற்கொலையை தூண்டி விடுமே தவிர அதற்கு ஓர் முற்றுபுள்ளி வைக்காது. நம்மால் தான் படித்து வேலைக்கு சென்று பெற்றோரை காப்பாற்ற முடியவில்லை. ஆனால் நாம் இறந்தால் நம் குடும்பத்திற்கு ஸ்டாலின் ஐயா நிச்சம் 10 லட்சம் தருவார், அதற்கு போட்டியாக எடப்பாடியார் அரசு வேலை தருவார், அதனால் தற்கொலை செய்து கொள்வது தவறு இல்லை என்ற மனநிலைக்கு அந்த மாணவர் தள்ளப்படுகிறார்.

இந்த சூழ்நிலையை மாற்ற பெற்றோர்கள் தான் முன்வர வேண்டும். தகுதியான கல்வியை , தகுதியான இடத்தில், தகுதி வாய்ந்த வகையில் பெற்று தருவது என்ற முடிவுக்கு பெற்றோர் வர வேண்டும். அதற்கு பதிலாக குதிரை ரேஸ் போல மகன், மகள் மீது லட்சக்கணக்கில் கல்வியின் பெயரால் முதலீடு செய்கிறார்கள். பெற்றோரின் ஆசைக்காக, பணத்தை முதலீடு செய்ய அவர்கள் வங்கிகள் அல்ல என்பதை அவர்கள் புரிந்து கொள்ள வேண்டும். அப்போது தான் எதிர்கால சமுதாயம் உயிரோடு திரும்பும். 

Newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP