கண்களை விற்ற பிறகு சித்திரம் வாங்கி என்ன பலன் ??

சிவசேனா தன் தலையில் தானே மண்ணை வாரிப் போட்டுக் கொள்கிறது.
 | 

கண்களை விற்ற பிறகு சித்திரம் வாங்கி என்ன பலன் ??

கொள்கை கூட்டணி தான் அரசியலில் இயல்பான கூட்டணி. தமிழகத்தில் திராவிடத்தை அடிப்படையாக கொண்ட கட்சிகள் திமுகவுடனும், இந்துத்துவத்தை அடிப்படையாக கொண்ட கட்சிகள் பாஜகவுடனும், தேசியத்தை அடிப்படையாக கொண்ட கட்சிகள் காங்கிரஸ் கட்சியுடன் இணைவதும் கொள்கை கூட்டணி என்று கூறலாம். மற்ற கட்சிகள் ஒன்றாக இணைவது வெறும் ஓட்டு அரசியல் கணக்கு தான்.

இடதுசாரிகள் தங்கள் கொள்கைக்கு ஒவ்வாத கட்சிகளுடன் கூட்டணி அமைக்கும் போதே இந்த இந்த கொள்கைகளுக்கு எதிராக நடவடிக்கைகள் எடுக்க மாட்டோம் என்று கூறியதால் தான் கூட்டணி வைக்கிறோம் என்று கூறிவிட்டு, தேர்தல் முடிந்த பின்னர் அதற்கு நேர் எதிரான கருத்துக்களை கூறி கூட்டணியை விட்டு வெளியேறும். இப்படி வெளியேறுவதை கொள்கையாக கொண்டது இடதுசாரி கட்சிகள். கூட்டணிக்கு தலைமை வகிக்கும் கட்சி ஆட்சியை பிடிக்காவிட்டால், இந்த நிலைப்பாடு ஒரு சில மாதங்களில் வெளிப்படும். ஆனால், சிவசேனாவிடம் இது போன்ற நிலைப்பாடு எடுக்க வழியில்லாமல் புத்திர பாசம் கண்ணை மறைத்துவிட்டது.

கருணாநிதி ஆட்சிக்கு வரும் முன்னர் எந்த மாதிரியான நிலைப்பாட்டை எடுத்தாரோ அவற்றை மஹாராஷ்டிரா மாநிலத்தில் செயல்படுத்திய கட்சி சிவசேனா. அது தான் அந்த கட்சியின் பலமே. அதில் தீவிர இந்துத்துவத்தை அஸ்திவாரமாக கொண்டு சிவசேனையை எழுப்பியவர் பால்தாக்கரே. அந்த கட்சியின் இந்த கொள்கைதான் பாஜகவுடன் கூட்டணி அமைக்க வழிவகுத்தது.

இந்த கூட்டணி கால்நுாற்றாண்டு காலம் தொடரவும் இரு கட்சிகளின் ஒத்த கொள்கை தான் காரணமாக இருந்தது. சிவசேனைக்கு பின்னால் மாநிலத்தில் காலடி வைத்த பாஜக அதையும் தாண்டிய அபரிதமான வளர்ச்சி பெற்றதும், இன்று அந்த கட்சியின் தயவால் ஆட்சி என்ற நிலை உருவானதும் சிவசேனாவிற்கு தர்மசங்கடமான சூழல் தான் என்பதில் எந்த மாற்று கருத்தும் இல்லை. அதற்காக அந்த கூட்டணியை விட்டு வெளியேறி தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி சேர்ந்து தற்கொலை முடிவை எடுத்துள்ளது சிவசேனா.

மஹாராஷ்டிரா மக்கள், காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சி ஆட்சியில் இடம் பெற வேண்டும் என்று எண்ணியிருந்தால் அந்த கூட்டணிக்கே அவர்கள் ஓட்டுப் போட்டு இருப்பார்கள். அதை விடுத்து இவர்கள் கூட்டணிக்கு ஓட்டுப் போட வேண்டிய அவசியம் மக்களுக்கு இல்லை.

தாவுத் இப்ராஹிம் இக்பால் மிர்சி, தேசியவாத காங்கிரஸ் கட்சியின் பிரபுல் பட்டேல் இடையே உள்ள தொடர்பை அமலாக்க பிரிவு விசாரித்து வருகிறது. பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டியின் கணவர் ராஜ்குண்ட்ராவை பயங்கரவாதிகளுக்கு நிதி அளித்த விவகாரத்தில் விசாரிக்கப்பட்டு வருகிறார். இந்த விசாரணைகள் தொடர்ந்து அது வழக்காக மாற வேண்டிய கட்டாயம் தற்போது உள்ளது. நீரவ் மோடி–மெஹூல் சேக்சிக் , பாலிவுட், தேசிய வாத காங்கிஸ், காங்கிரஸ் பிணைப்புகளை கண்டுபிடிக்க வேண்டும் போன்ற பல காரணங்களால் தான் காங்கிரஸ், தேசிய வாத காங்கிரஸ் கூட்டணியை மக்கள் புறக்கணித்த காரணம்.

ஆனால் தன் மகனை முதல்வராக மாற்ற வேண்டும் என்ற எண்ணத்தில் உத்தவ் தாக்கரே பாஜக கூட்டணியை விட்டு முறித்துக் கொண்டு வெளியேறினார். அத்தோடு இல்லாமல் மக்கள் விரும்பும் வகையில் பாஜக ஆட்சியை மைனாரடி அரசாக தொடர அனுமதித்து இருக்க வேண்டும். அதை விடுத்து தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் கட்சியுடன் இணைந்து கூட்டணி பேச்சுவார்த்தை நடத்துவது சந்தர்ப்பவாதம்.

இந்த கூட்டணி அமைந்தால் நிலுவையில் உள்ள வழக்குகள், குற்றச்சாட்டுகள் காற்றில் பறக்கும். இதுவரையில் சிவசேனா கடைபிடித்த இந்துத்துவ கொள்கையும் காற்றில் பறக்கவிடப்படும். இந்த சூழ்நிலையில் சிவசேனாவிற்கு 5 ஆண்டுகாலம் ஆட்சி வேண்டுமானால் கிடைக்கலாம். ஆனால், அதன் பின்னர் சிவசேனா அரசியலில் தலையெடுக்கவே முடியாது.

ஆனால் தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் கட்சி பழம் தின்று கொட்டை போட்ட அரசியல் கட்சிகள். காங்கிரஸ் கட்சியில் இருந்து வெளியேறிய பிறகும் கூட தேசியவாத காங்கிரஸ், அந்த கட்சியுடன் கூட்டணி அமைக்கிறதே தவிர, இணைய முன்வர வில்லை. அப்படிப்பட்ட கட்சி இன்று சிவசேனாவின் ஆதித்தியா தாக்கரேவை ஏற்றுக் கொள்ளும் என்று எதிர்பார்ப்பது சிவசேனாவினஅ முட்டாள் தனம். அதனால் தான் போகாத ஊருக்கு வழி சொல்லும் விதமாக உத்தவ் தாக்கரேவை முதல்வராக வேண்டும் என்று நிபந்தனை விதிக்கிறது. இதை அவர்கள் ஏற்றால், இன்றைக்கு சிவசேனாவின் சட்டசபைத் தலைவராக தேர்வு பெற்ற ஏக்நாத் ஷிண்டேவுக்கு கோபம் வரும். அவர் அல்லது அவரது ஆதரவாளர்கள், அவர்களது கொள்கையை சொல்லி தனி கட்சி தொடங்குவார்கள். சுமார் 20 எம்எல்ஏக்கள் வெளியேறினால் கட்சித் தாவல் தடை சட்டம் ஒன்றும் செய்ய முடியாது. அவர்களும், பாஜகவும் இணைந்து ஆட்சி அமைக்கும் நிலையும் ஏற்படலாம்.

ஒட்டு மொத்ததில் சிவசேனா தன் தலையில் தானே மண்ணை வாரிப் போட்டுக் கொள்கிறது. இதன் பலன் பாஜக, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சியில் யாருக்கு கிடைக்கும் என்பது நாளை மாலை தெரிந்துவிடும்.

Newstm.in

 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP