Logo

காணும் இடமெல்லாம் பிரம்மம் கண்ட சுகப்பிரம்ம மகரிஷி

ஞானிகள் , சித்தர்கள் ,அவதாரப் புருஷர்கள் நிறைந்த புண்ணிய பூமி இது. திருத்தலங்களில் தெய்வங்கள் தன்னை நாடி வருவோருக்கும் , இருந்த இடத்திலிருந்தும் பிரார்த்தனைகள் செய்வோருக்கும் அருள் பாலித்து வருகின்றன.
 | 

காணும் இடமெல்லாம்  பிரம்மம் கண்ட சுகப்பிரம்ம  மகரிஷி

சுகப்பிரம்ம காயத்ரி :

ஓம் வேதாத்மஹாய வித்மஹே

வியாச புத்ராய தீமஹி;

தந்நோ சுகர் ப்ரசோதயாத்!

ஞானிகள் , சித்தர்கள் ,அவதாரப் புருஷர்கள் நிறைந்த புண்ணிய பூமி இது. திருத்தலங்களில் தெய்வங்கள் தன்னை நாடி வருவோருக்கும் , இருந்த இடத்திலிருந்தும் பிரார்த்தனைகள் செய்வோருக்கும் அருள் பாலித்து வருகின்றன. சித்தர்கள் வாசம் செய்த இடங்களும் அவர்கள் ஜீவ சமாதிகள் அமைந்திருக்கும் இடங்களும் அற்புத சக்திகள் நிறைந்தது. இந்தப் பதிவில் நாம் சுகப்பிரம்ம ரிஷி என்கிற மகானை அறிந்து கொண்டு அவரது அருளாசிப் பெறுவோம். 

தனது கிளி முகப் பிள்ளைக்கு சுகர் என்று பெயர் சூட்டினார் வியாசர். காரணம் சுகம் என்றால் கிளி என்றுப் பொருள், சுகர் என திருநாமம் சூட்டிய குழந்தையை புனிதமான கங்கை நதியில் நீராட்டினார். உடனே குழந்தை சிறுவனாக மாறினான். வேதவியாசரின் பிள்ளை என்பதால் தேவர்கள் பூமாரி பொழிந்து குழந்தையை வாழ்த்தினர். மங்கல வாத்தியங்கள் முழங்கின. மீன் குஞ்சுக்கு நீந்தக் கற்றுத் தரவேண்டுமா? வியாசரின் பிள்ளைக்கும் அவரைப் போலவே எல்லா ஞானமும் ஆற்றலும் அறிவும் இயல்பாக இருந்தன. எதையும் குருமுகமாக அறிய வேண்டும் என்ற நியதிப்படி வேதவியாசருடைய தவப்புதல்வர், பிரகஸ்பதியின் சீடனானார்.ஞானக்குழந்தையாக அனைத்தையும் அறிந்த தெளிவுடன் தேஜஸுடன் வளர்ந்து வந்த சுகருக்கு உரிய வயது வந்ததும் பரமேஸ்வரர் உமையுடன் வந்து உபநயனம் செய்வித்தனர். பால பிரம்மச்சாரிக்கு வேண்டிய தண்டமும் மான் தோலும் வான் வெளியிலிருந்து அவரருகே வந்து விழுந்தன. சுகஹா என்னும் வடமொழி சொல்லுக்கு கிளி என்று பொருள். எவரும் கற்றுத்தரவில்லை என்றாலும் இயல்பாகவே வேத வேதாங்கங்களைச் சுகப்பிரம்மரிஷி அறிந்திருந்தார்.

சுகபிரம்மத்தின் பெருமையை நமக்கு தெரியச் செய்த பெருமை பரீட்சித்து மகாராஜாவையே சாரும். பஞ்சபாண்டவர்களில் ஒருவரான அர்ஜுனனின் பேரன் இவர். பரீட்சித்துவின் தந்தை அபிமன்யு. இந்த மன்னன் பிறவியிலேயே விஷ்ணுவின் அருள்பெற்றவன். பாண்டவர்களின் வம்சத்தை அழிக்கும் எண்ணத்தில் இருந்த கவுரவர்கள், அபிமன்யுவின் மனைவி உத்தரையின் கர்ப்பத்தில் இருந்த பரீட்சித்து மீது பிரம்மாஸ்திரத்தை ஏவியபோது, விஷ்ணு தன் சக்கரத்தால் அதை தடுத்து நிறுத்தினார்.

பிறக்கும் முன்பே விஷ்ணுவால் காப்பாற்றப்பட்ட பரீட்சித்து, ஒரு சமயம் காட்டில் வேட்டைக்குச் சென்ற இடத்தில் தாகம் உண்டானது. தண்ணீர் தேடிச் சென்ற போது, வழியில் சமீகர் என்ற முனிவரின் ஆஸ்ரமத்தைக் கண்டார். வாசலில் நின்று தண்ணீர் கேட்டார். ஆனால், காதில் வாங்கிக் கொள்ளாமல் நிஷ்டையில் இருந்தார் சமீகர்.கோபம் கொண்ட மன்னன் பரீட்சித்து, காட்டில் கிடந்த செத்த பாம்பினை குச்சியால் எடுத்து மாலைபோல் அவருடைய கழுத்தில் போட்டார். பரீட்சித்தின் பாதகச் செயலை, அங்கு சிறுவர்களுடன் விளையாடிக் கொண்டிருந்த சமீகரின் பிள்ளை சிருங்கி பார்த்து விட்டான். அவனுக்கு கோபம் தலைக்கேறியது. ஏ! மன்னனே! நிஷ்டையில் இருந்த என் தந்தையை அவமதித்த நீ இன்னும் ஏழுநாளில் பாம்பால் அழிவாய், என்று சபித்துவிட்டான்.

உடனடியாக பரீட்சித் மன்னன தன் மகன் ஜன்மேஜயனுக்குப் பட்டம் கட்டி நாட்டுக்கு மன்னனாக்கினான். கங்கைக்கரையில் தவம் செய்து தன் உயிரைவிடுவது என்ற முடிவுக்கு வந்தான். விருப்பப்படியே கங்கையின் மத்தியில் அழகிய மண்டபத்தை அமைத்து அதில் தங்கினான். தகவல் அறிந்த அத்ரி, வசிஷ்டர், பிருகு, ஆங்கிரசர், பராசரர், தேவலர், பரத்வாஜர், கவுதமர், அகத்தியர், வியாசர் என்ற தவசிரேஷ்டர்கள் எல்லாம் அங்கு வந்து சேர்ந்தனர். அவர்கள் அனைவரையும் பரீட்சித்து வணங்கினான். இந்த சமயத்தில் சுகபிரம்மர் பல தலங்களிலும் சிவபூஜை செய்தபடியே கங்கைக்கரைக்கு வந்து சேர்ந்தார். அப்போது அவருக்கு வயது 16. சுகபிரம்மத்தைக் கண்ட ரிஷிகள் கூட தம்மை மறந்து எழுந்து நின்றனர்.

உயிர்பிரிய ஒரு வாரமே இருக்கும் சந்தர்ப்பத்தில், சுகபிரம்மரின் வருகை பரீட்சித்திற்கு மகிழ்ச்சியைத் தந்தது. ஈடுஇணையற்ற ஒரு பாக்கியம் கிடைத்து விட்டதாக கருதினான். ஒருவன் வாழ்வில் இறைவனை சற்று கூட நினைக்காத நிலையில்,அவனுக்கு மரணம் சம்பவிக்கும் என்ற நிலை ஏற்பட்டால், அந்த குறிப்பிட்ட காலத்திற்குள்ளாவது, கிருஷ்ணனின் பால பருவ லீலைகளைக் கேட்டால் முக்தி கிடைக்கும் என்ற சுகபிரம்மர், அந்த பரந்தாமனின் திவ்ய லீலைகளை அவனுக்கு எடுத்துரைத்தார். அதுவே பாகவதம் ஆனது.

மகாபாரதத்தை உலகிற்கு அளித்த வியாசரின் புதல்வர் சுகமுனிவர். கிளி முகம் கொண்ட இவருக்கு நாரதர் உபதேசம் செய்தார். தவவாழ்வில் ஈடுபட்ட இவர், எல்லா உயிர்களிலும் கடவுள் வியாபித்து இருப்பதை உணர்ந்தார். ஒரு நதிக்கரை வழியே தந்தையுடன் சுகப்பிரம்மர் சென்றபோது, நீராடும் தெய்வப்பெண்களைக் கண்டார். அவர்கள், வயோதிகரான வியாசரைக் கண்டதும் நாணத்தால் எழுந்து ஆடையால் உடலை மறைத்தனர். ஆனால், வாலிபரான சுகரைக் கண்டு வெட்கப்படவில்லை. உங்களின் இந்த மாறுபாடான செயலுக்கு என்ன காரணம்? என வியாசர் கேட்க, எல்லாவற்றையும் சுகப்பிரம்மர் தெய்வீகமாக காண்பது தான், என விடையளித்தனர். இவர் இயற்றிய பாகவதம் சர்க்கரைப் பந்தலில் பெய்த தேன்மழை.

இறவா வரம் பெற்ற சிரஞ்சீவி மார்க்கண்டேயன் இவரது சீடன். இவரது மற்றொரு சீடர் கௌடபாதர். அவரது சீடர் கோவிந்த பகவத் பாதர். அவரது பிரதான சீடர் ஆதி சங்கரர். 

இந்து தர்மத்தை நிலைக்க செய்ததில் பெரும் பங்களித்த ஆதி சங்கரரின் குருவுக்கு குருவானவர் சுகப்பிரம்ம ரிஷி.

கடலூர் மாவட்டத்தில் உள்ள நெல்லிக்குப்பத்தில் பில்லாலி தொட்டியில் சுகப்பிரம்ம மகரிஷி அருட்பீடம் உள்ளது. இந்த அருட்பீடத்தில்  சுகப்பிரம்மருக்கு தனி சன்னதி அமைந்துள்ளது.

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP