Logo

ஆன்மீக கதை - யார் கடவுளின் அருள் பெற்றவர்கள்...

இயற்கை எழில் கொஞ்சும் அக்கிராமத்திற்கு ஞானிகளும், முனிவர்களும் அவ்வப்போது வந்து செல்வார்கள். அவர்களில் ஒரு ஞானி மட்டும் மக்களின் பெரும் அன்புக்குரியவராக இருந்தார். அவர் ஊருக்கு வந்தாலே மக்கள் கூட்டம் அவரை சுற்றியே இருக்கும். கடவுளின் மறு உருவாக அவரை போற்றினார்கள்.
 | 

ஆன்மீக கதை - யார் கடவுளின் அருள் பெற்றவர்கள்...

மதுராபுரி என்னும் அழகிய கிராமம் ஒன்று  இருந்தது.  இயற்கை எழில் கொஞ்சும் அக்கிராமத்திற்கு ஞானிகளும், முனிவர்களும் அவ்வப்போது வந்து செல்வார்கள். அவர்களில் ஒரு ஞானி மட்டும் மக்களின் பெரும் அன்புக்குரியவராக இருந்தார்.  அவர் ஊருக்கு வந்தாலே மக்கள் கூட்டம் அவரை சுற்றியே இருக்கும். கடவுளின் மறு உருவாக அவரை  போற்றினார்கள். அந்த ஊரில் ஓர் செல்வந்தன் இருந்தான். அவன் தன்னை நாடிவருபவர்களுக்கு உதவி செய்வான். நேர்மை தவறாமல் இருப்பான். ஆனால் நல்லது செய்யும் தன்னை  மக்கள் கடவுளாக பார்க்காமல் மனிதனாகவே பார்க்கிறார்களே என்று நினைப்பு அவன் மனதில் நீண்ட நாளாக இருந்துவந்தது.  சரி அடுத்தமுறை ஞானி வரும்போது இதைப் பற்றி பேச வேண்டும் என்று நினைத்தான்.

சில மாதம் கடந்தது. ஞானி மீண்டும் அந்த ஊருக்கு வந்தார். மக்கள் கூட்டம்  கூட்டமாக அவரை தரிசித்து வந்தனர். இதைக் கேள்விப்பட்ட செல்வந்தன் ஞானியிடம் சென்றான். சாமி... நான் இந்த ஊரிலேயே மிகவும் வசதி படைத்தவன். நான் இல்லாதவர்களுக்கு உதவி செய்கிறேன்.. நான் கல்விசாலை அமைத்து தந்திருக்கிறேன்... நான் பலகுடும்பங்களை வாழவைத்திருக்கிறேன். நான் செய்த நல்லது இவ்வளவு இருக்கும்போது என்னை யாரும்  உயர்வாக எல்லாம் நினைப்பதில்லை. நான் எப்போதும் உதவி செய்து கொண்டே இருக்கிறேன். ஆனால் நீங்கள் வெறும் வாய்வார்த்தையில் ஆறுதல் மட்டுமே சொல்கிறீர்கள். உங்களைக் கடவுளுக்கு நிகராக வணங்குகிறார்களே என்றான்.ஞானிக்கு புரிந்துவிட்டது. புன்னகைத்தப்படி சரி.. உனக்கு வார்த்தையாகச் சொன்னால் புரியாது. என்னுடன் ஒருவாரம் இரு. நான் போகும் இடமெல்லாம் நீ வா. உனக்குப் புரியும் என்றார். ஐயையோ.. ஒரு வாரம் நான் இல்லையென்றால்  நான் தொழில் செய்வது எப்படி.. நான் பிறருக்கு உதவுவது எப்படி.. நான் இல்லையென்றால் இந்த ஊர்மக்கள் யாரிடம் உதவி கேட்பார்கள். நான் என்ன செய்வேன்.. சரி ஒருவாரம் தானே..  நான் வருகிறேன் என்றபடி அவருடன்  சென்றான்.

வழியெங்கும் நான்  இதைச் செய்வேன். அதைச் செய்வேன் என்று ஒரே நான் புராணம்தான்.  வழியில் ஞானியைக் கண்ட மக்கள் அவருக்கு வரவேற்பு கொடுத்தார்கள். அவர்கள் உதவி  கேட்கும்  முன்னே நான் தான் செய்வேன்... என்று ஓடோடி உதவி செய்தான். அவனைப் பார்த்த ஞானியிடம்  என்ன பார்க்கிறீர்கள்? எல்லோரும் உங்களைவிட்டு என்னிடம்வருவார்களா என்றான் கர்வத்துடன்.. ஞானி எதுவும் பேசாமல் புன்னகையுடன் இருந்தார்.  ஞானி செல்லும் இடமெல்லாம்  மக்களுக்கு உதவி செய்தபடி இருந்தான் செல்வந்தன். ஞானியிடம் விடைபெறும்  தருணம் வந்தது. மக்களிடம் உரையாற்றிக்கொண்டிருந்த ஞானியிடம் சொல்லிவிட்டு கிளம்பலாம். நான் இல்லாமல் ஊர்மக்கள் திணறியிருப்பார்கள் என்றபடி காத்திருந்தான். 

மக்கள் கூட்டம் கலையத் தொடங்கியது. அவனுக்கு உள்ளுக்குள் உற்சாகம். வந்திருந்த மக்கள் பெரும்பாலானவர்க்கு இவன் உதவி செய்திருந்தான். அவர்களது பாராட்டை கேட்க தயாராக இருந்தான். மக்கள் அவன் இருக்கும் பக்கம் கூட திரும்பவில்லை. மிகுந்த ஏமாற்றமடைந்த அவன் ஞானியிடம் சென்று  நான் செய்த உதவிகளை மறந்துவிட்டார்கள் பார்த்தீர்களா?   உங்களுடன் இருந்த நாட்களில் நான் எவ்வளவு உதவிகளை செய்திருப்பேன்... என்றான்

நான்.. நான்.. என்கிறாயேப்பா... உன்னை செய்ய வைத்தவனும் செய்யப் பணித்தவனும் இறைவனல்லவா... நானின்றி ஓர் அணுவும் அசையாது என்கிறாயே.. எல்லாமே நான் தான் என்ற கர்வம் இருக்கும்வரை மக்களுக்கு நீ அந்நியனாய் தான் தெரிவாய். எல்லாம் இறைவன் அருள் என்று சொல்லிப்பார் அவர்களுக்கு  கடவுளின் அவதாரமாக தெரிவாய் என்றார். தலைகவிழ்ந்த செல்வந்தன் புரிந்தது சாமி... கடவுள் கொடுக்க நினைப்பதை என் மூலமாக செய்ய பணித்திருக்கிறார். அதைவிடப் பெரிய பேறு எதுவும் இல்லை.கடவுள் இட்ட பணிகள் இன்னும் இருக்கின்றன என்று ஆசி பெற்று திரும்பினான்.

உலகில் எதுவும் நிரந்தரமில்லை. நாமே நிரந்தரமாக தங்கமுடியாத இவ்வுலகிலும், மறு உலகிலும்  நமக்கு துணை நிற்பது இறைவன் தான்.  தாம் நினைப்பதை தம்முடைய பக்தனைக் கொண்டு செய்ய  வைக்கும் இறைவனின் அருள் பெற்றவர்கள் எல்லாமே  இறைவன் செயல் என்பதை உணர்ந்தே செயல்படுவார்கள்.

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP