Logo

கோர்ட்டில் ஒரு பேச்சு, வெளியே ஒரு பேச்சு: சர்கார் விவகாரத்தில் எது உண்மை?

முருகதாஸ் வெளியிட்டுள்ள வீடியோவில், "சர்காரின் கதை என்னுடையது தான்" என்று திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். அவர்கள் நீதிமன்றத்தில் கூறியதும் வெளியே வந்தும் கூறுவதும் முற்றிலுமாக வேறாக இருக்கிறது.
 | 

கோர்ட்டில் ஒரு பேச்சு, வெளியே ஒரு பேச்சு: சர்கார் விவகாரத்தில் எது உண்மை?

சினிமாவில் இன்ஸ்பிரேஷன், திருட்டு, என்னுடைய கதை என்ற பிரச்னைகள் எல்லாம் தொடர்ந்து நடப்பது தான் என்றாலும் சமீப காலமாக இது போன்ற விஷயங்கள் அதிகரித்துள்ளன. வெள்ளித்திரை என்னும் படத்தில் வருவது போல ஒவ்வொரு படம் வரும் போது இது என்னுடைய கதை என்று ஒருவர் வருகிறார். பெரும்பாலும் அந்தபடம் பெரும் நிறுவனங்கள் தயாரிக்கும் படங்களாகவோ அல்லது பெரிய இயக்குநர்களின் படங்களாகவோ இருப்பது தற்செலயான ஒன்றா என்பது ஆராய்ந்து பார்க்க வேண்டிய ஒன்று. 

இந்நிலையில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் நடிகர்  விஜய் நடித்திருக்கும் படம் தீபாவளிக்கு வெளியாக இருக்கிறது. இதன் டீசர் வெளியானதும் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்தது. டீசரிலேயே நாயகனின் ஓட்டை வேறு ஒருவர் போட்டுவிட்டனர் என்பது தான் முக்கிய கரு என்பது தெரிந்து விட்டது. இதனையடுத்து இது என்னுடைய கதை என்று இணை இயக்குநர் வருண் ராஜேந்திரன் என்பவர்குற்றச்சாட்டு எழுப்பினார். இதுகுறித்து அவர் திரைப்பட எழுத்தாளர்கள் சங்கத்திலும் அவர் புகார் அளித்தார். இதனை விசாரித்த அந்த சங்கத்தின் தலைவர் பாக்கியராஜ், சர்கார் கதையும் வருண் ராஜேந்திரனின் செங்கோல் கதையும் ஒன்று தான்" என்று அறிக்கை வெளியிட்டார்.

பாக்கியராஜின் அறிக்கைக்கு பிறகு இந்த விவகாரம் பூதாகரமானது. சங்கத்தால் இந்த விவகாரத்தில் முடிவு எடுக்க முடியாது என்ற நிலையில் வருண் நீதிமன்றத்தை நாடினார். தனக்கு நியாயம் கிடைக்கும் வரை படத்தை வெளியிடக்கூடாது என்றும் அவர் கோரினார்.இதனிடையே பாக்கியராஜும், இயக்குநர் முருகதாஸும் பேட்டிகளை கொடுத்து இந்த பிரச்னையை மேலும் பெரிதாக்கினர். 

கோர்ட்டில் ஒரு பேச்சு, வெளியே ஒரு பேச்சு: சர்கார் விவகாரத்தில் எது உண்மை?

பாக்கியராஜ் தொடர்ந்து இரண்டும் ஒரே கதை தான் என்பதில் தெளிவாக இருந்தார். மேலும் இதனை பேசி தீர்த்துக்கொள்வோம் என்று முருகதாஸுடம் கூறியதாகவும், அவர் அதற்கு ஒப்புக்கொள்ளவில்லை என்றும் அவர் கூறினார். கரு மட்டும் தான் ஒன்றியிருக்கிறது, அவர்கள் யாரும் எனது பவுண்டட் ஸ்கிரிப்ட்டை படிக்கவில்லை என்று மறுப்பக்கம் முருகதாஸ் கூறிக்கொண்டு இருந்தார். 

இவர்களுக்கு நடுவே எழுத்தாளர் ஜெயமோகன், ஒருவரிக்கதையோடு முருகதாஸ் வந்தார்... மாதக்கணக்கில் உழைத்து திரைக்கதையை உருவாக்கினோம் என்றார். இதற்கு என்னதான் முடிவு... படம் வருமா வராதா என்ற நிலையில் இன்று இதுகுறித்து விசாரணை நீதிமன்றத்தில் நடந்தது. 

அப்போது கதை வருணுடையது தான் என்று சன் பிக்சர்ஸ் ஒப்புக்கொண்டதாகவும் இந்த விவகாரம் சமரசத்தில் முடிந்துவிட்டதாகவும் தகவல்கள் வெளியாகின. மேலும் படத்தின் டைட்டில் கார்டில் வருண் பெயர் வரும் என்றும் தெரிவிக்கப்பட்டது. 

கோர்ட்டில் ஒரு பேச்சு, வெளியே ஒரு பேச்சு: சர்கார் விவகாரத்தில் எது உண்மை?

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த பாக்கியராஜ், "இந்த விவகாரம் சுமூகமாக முடிந்துவிட்டது. இரண்டும் ஒரே கருதான் என்பதால் வருண் பெயர் படத்தில் வரும்" என்பதோடு முடித்துக்கொண்டார். பின்னர் பேசிய வருண், "நான் அங்கிகாரத்திற்கு தான் போராடினேன். படத்தை தடை செய்ய வேண்டும் என்பது எனது நோக்கமில்லை. படத்தில் கதை என, என்னுடைய பெயரை போடுவதில் சில சிக்கல்கள் இருக்கின்றன. அப்படி என் பெயரை இணைத்தால் மீண்டும் சென்சார் வாங்க வேண்டி இருக்கும். எனவே எனது பெயர் டைட்டில் கார்டில் மட்டும் வரும்" என்றார். 

இருவருமே படத்தின் கதை யாருடையது என்பது குறித்து பேசவில்லை. 

இந்நிலையில் முருகதாஸ் வெளியிட்டுள்ள வீடியோவில், "சர்காரின் கதை என்னுடையது தான்" என்று திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். ஆக... அவர்கள் நீதிமன்றத்தில் கூறியதும் வெளியே வந்தும் கூறுவதும் முற்றிலுமாக வேறாக இருக்கிறது. பாக்கியராஜ் உட்பட இதில் முரண்பாடான தகவல்களை வெளியிடுகின்றனர். 

சாம்பரில் பதிவு செய்யப்பட்ட கதைக்கே இந்த நிலை எனில்... சினிமாவே வாழ்க்கை என இருக்கும் இளைஞர்கள் எந்த நம்பிக்கையில் இந்த துறைக்குள் நுழைவது?

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP