தமிழ்ப்படம் 2 சிறப்பு பார்வை: இன்னும் கிழிக்கப்பட வேண்டியது ஏன்?

ரெமோ, த்ரிஷா இல்லன்னா நயன்தாரா போன்ற படங்கள் சமூகத்திற்கு செய்யும் தீங்குகளை நாம் பொதுவில் வெளிப்படையாக பேசியே ஆகவேண்டும்.
 | 

தமிழ்ப்படம் 2 சிறப்பு பார்வை: இன்னும் கிழிக்கப்பட வேண்டியது ஏன்?

திரைப்படம் என்பதே ஒருவகையில் மக்களை ஏமாற்றுவதுதான். இல்லாத ஒன்றை சிருஷ்டித்து, அது உண்மை என்று நம்பவைத்து, உணர்ச்சிவசப்பட்டு அழவைத்து, மனம்விட்டு சிரிக்கவைத்து என நாம் தெரிந்தே ஏமாறும் பிம்பங்களே திரைப்படங்கள். 

தமிழின் முதல் மவுனப்படமான 'கீசக வதம்' ஒரு புராணக் கதையை அடிப்படையாக கொண்டது. முதல் பேசும்படமான காளிதாஸும் அப்படியே. பின்னர் சுதந்திரப் போராட்டம் தீவிரமடைய ஆரம்பித்த காலத்தில் சமூகக் கதைகள் கொண்ட படங்கள் பிரசித்தி பெற ஆரம்பித்தன. இந்தப் படங்களில் நடித்து புகழ்பெற்றவர்கள் சூப்பர் ஸ்டார்களாக உருமாற ஆரம்பிக்க, பின்னர் அவர்களுக்காக கதைகள் எழுதப்பட்டன. ஸ்டூடியோக்களின் ஆதிக்கத்தில் இருந்த சினிமா மெல்ல மெல்ல கதாநாயகர்களின் கைகளில் விழுந்தது. அதுவரை சற்று குறைவாக ஏமாற்றப்பட்டுக் கொண்டிருந்த ரசிகர்கள் பெரிய அளவில் ஏமாற ஆரம்பித்தது அப்போதுதான்.

ஆரம்பகாலத்தில் இருந்தே திரை நாயகன் என்பவன் சமூகத்தில் ஒருவனாக இருந்ததேயில்லை. முதல் சூப்பர் ஸ்டாரான தியாகராஜ பாகவதர் அற்புதமான பாடகர். நல்ல இசைஞானம் கொண்ட கலைஞர். இயல்பிலேயே சராசரி மனிதர்களில் இருந்து சற்று மேம்பட்டவர் என்கிற இடம் அவருக்கு கொடுக்கப்பட்டது. சினிமா புகழ் அதை ஊதி பெரிதாக்கியது.

தமிழ்ப்படம் 2 சிறப்பு பார்வை: இன்னும் கிழிக்கப்பட வேண்டியது ஏன்?

ஆங்கிலத்தில் சொல்வதானால், "Larger than Life" எனலாம். பின்னர் எம்ஜிஆர் அந்த இடத்தை அடைந்தார். தியாகராஜ பாகவதரின் பாடும் திறமை உண்மையானது. அவரை பெரிய பிம்பமாக ஏற்றியதில் ஒரு நியாயமும் இருந்தது. ஆனால் எம்ஜிஆர் ஒரு ஆக்‌ஷன் ஹீரோ. புரட்சி நடிகர் என்கிற பட்டப்பெயர் கொண்டவர். பின்னர் அது புரட்சித்தலைவர் என்று மாறும் அளவிற்கு திரைப்படங்கள் மூலம் மக்கள் மூளைச்சலவை செய்யப்பட்டனர். 

புலியோடு சண்டையிடுவது எம்ஜிஆர் அல்ல என்கிற உண்மை அறியாத ரசிகன் வாழ்ந்த அந்தக் காலகட்டம், முதல்வர் பதவியை எம்ஜிஆருக்கு தாரை வார்த்ததில் அதிசயமேதும் இல்லை. ஆனால், இன்று இணையம் உலகை ஆண்டுகொண்டிருக்கும் வேளையிலும் அதே எம்ஜிஆர்த்துவம் தொடர்கிறது என்பதில் உள்ளது சேதி. இந்த மனப்பான்மையே ஸ்பூஃப் படங்கள் வெளிவர முக்கிய காரணம் என்பதுதான் இந்தக் கட்டுரையின் அடிநாதம்.

ஸ்பூஃப் என்றால் ஏமாற்றுதல் என்பது பொருள். திரைப்படமே ஏமாற்றுவதுதான் என்று முதலிலேயே ஒரு கருத்தை இங்கே பார்த்தோம். அப்படியெனில் ஸ்பூஃப் படங்கள் ஏமாற்றுதலின் ஏமாற்றம் என்று ஆகிறது அல்லவா? (ரொம்ப குழப்புறனோ? சும்மா சிறுபத்திரிக்கைகள்ல வர்ற சினிமா விமர்சனத்தை  ஸ்பூஃ ப் பண்ணி பார்த்தேன்... ஹிஹிஹி..). நாயக பிம்பத்தை உடைப்பது என்பது எப்போது நன்மை பயக்கும் செயல்தான். 

தமிழ்ப்படம் 2 சிறப்பு பார்வை: இன்னும் கிழிக்கப்பட வேண்டியது ஏன்?

சொல்லப்போனால் அது காலத்தின் கட்டாயமாகவும் ஆகிறது. ஏனென்றால் நாம் இன்னதை ரசிக்கிறோம் என்கிற சுரணையே இல்லாமல் ஒரு தவறான விஷயத்தை கொண்டாட தொடங்கிவிடுகிறோம். அதை நமக்கு நாமே உணர்த்த ஸ்பூஃப் படங்கள் நிச்சயமாக தேவைப்படுகிறது. நம்மை நாமே சுய பரிசோதனை செய்வதற்கான ஒரு மிகச் சிறந்த வழி இந்த படங்கள். இதில் வேடிக்கையான விஷயம் என்னவென்றால் இந்த உண்மை தெரியாமலேயே அந்த ஸ்பூஃப் படத்தையும் இன்னொரு வெற்றிப்படமாக நாம் கடந்துவிடுவதுதான்.

'தமிழ்ப்படம்' முதல் பாகம் வருவதற்கு முன்பே 'இம்சை அரசன் 23-ஆம் புலிகேசி' வந்திருந்தது. உத்தமபுத்திரன் படத்தை தழுவி எடுக்கப்பட்ட இந்தப் படம் ஸ்பூஃப் வகையை சற்று தொட்டுச்செல்லும். முழுமையான ஸ்பூஃப் படமென்றால் அது 'தமிழ்ப்படம்'தான். இந்தப் படம் வெளிவந்தபோது அது தொலைக்காட்சியில் வந்த 'லொள்ளு சபா' போன்ற நிகழ்ச்சிகளின் நீட்சியாக மட்டுமே பார்க்கப்பட்டாலும் கூட, அதுவரை வந்த திரைப்படங்களை கிண்டலடித்து எடுக்கப்பட்ட இன்னொரு திரைப்படம் என்கிற விஷயம் ரசிகர்களுக்கு புதிதாக இருந்தது. அதுவே படத்தின் வெற்றிக்கு காரணமாகவும் அமைந்தது. 

தமிழ்ப்படம் 2 சிறப்பு பார்வை: இன்னும் கிழிக்கப்பட வேண்டியது ஏன்?

முதல் பாகத்தின் மிகப்பெரிய குறை என்னவென்றால் அதில் கதையே கிடையாது என்பதுதான். ஆங்கிலங்களில் வரும் ஸ்பூஃப் படங்கள் ஏதேனும் ஒரு விஷயத்தை மட்டும் அடிப்படையாக கொண்டு எடுக்கப்படுபவை. பேய்ப்படங்களுக்கென்று ஒன்று, சூப்பர் ஹீரோ படங்களுக்கு என்று ஒன்று என ஒவ்வொரு திரைப்பட வகைக்கும் குறிப்பிட்டு சொல்ல படங்கள் உண்டு. ஆனால் தமிழில் அப்படி இல்லாமல், மொத்தமாக எல்லா ஜானரையும் ஒரே படத்தில் சொல்ல ஆசைப்பட்டதால் திரைக்கதை இஷ்டத்திற்கு அலைபாயும். இதனாலேயே தமிழ்ப்படம் 1-ன் இரண்டாவது பகுதியில் பெரும் தொய்வு இருந்தது. 

ஆனால், தமிழ்ப்படம் இரண்டாம் பாகம் அப்படி இல்லாமல் ஒரு முக்கியக் கதையை மையமாக கொண்டு நகருவதால் படம் முதல்பாகத்தை விட சுவாரஸ்யமாக இருக்கிறது. இனி அடுத்துவரும் பத்திகள் தமிழ் சினிமா இரண்டு பாகமும் தொட்டுச்சென்ற சில முக்கியமான விஷயங்களை பற்றி மட்டும் பேசும்.

நாயகனின் ஆரம்ப அறிமுகக்காட்சி இரண்டு படங்களிலும் ஒரே மாதிரியாகவே அமைக்கப்பட்டிருப்பதை கவனிக்கலாம். இதில் மாற்றுவதற்கு எதுவும் இல்லை என்பதே உண்மை. ஏனெனில் சைக்கிளில் சென்று தேநீர் விற்கும் தொழில் செய்யும் ஹீரோவை காட்டும்போதே கேமரா முதலில் நாயகனின் கால்களை காட்டி, பின்னர் மெதுமெதுவாக மேல்நோக்கி நகர்வதாக காட்சியமைக்கும் ஊர் இது. மாஸ் ஹீரோக்களை மொத்தமாக கேலி செய்ய இது ஒரு நல்ல உத்தி. 

தமிழ்ப்படம் 2 சிறப்பு பார்வை: இன்னும் கிழிக்கப்பட வேண்டியது ஏன்?

பின்னர் காதல் காட்சிகள். தமிழ் சினிமாவின் மிகப்பெரிய சாபம் இந்தக் காதல் காட்சிகள். தமிழில் வெளிவந்த நல்ல காதல் படங்களை விரல்விட்டு எண்ணிவிடலாம். அப்படி புகழ்பெற்ற பல திரைப்படங்களில் நடக்கும் காதல் காட்சிகளும் கூட இயல்புக்கு சற்றும் அருகில் இருக்காது. சுப்ரமணியபுரம் தமிழில் மிகச்சிறந்த காதல் காட்சிகளை கொண்ட படமாக இருந்தாலும் அந்தப் படம் காதல் வகையறாவில் சேராது. விண்ணைத்தாண்டி வருவாயா படம்தான் காதல் படம். ஆனால் விண்ணைத்தாண்டி வருவாயா காதல் இங்கே எத்தனை பேருக்கு இங்கே சாத்தியம்? வாரணம் ஆயிரம் காதல் நூறு வருடத்திற்கு ஒருமுறை யாருக்கேனும் நிகழலாம். எனவே அந்த காதலையே தமிழ்ப்படம் தனது களமாக எடுத்து கேலி செய்கிறது. நம்மை ஏமாற்றுவதை கேலிசெய்து நம்மை சிரிக்கவைக்கும் முயற்சி இது. 

முதல்பாகத்தில் வெறும் நகைச்சுவையாக மட்டுமே அணுகப்பட்ட காதல் காட்சிகள், இரண்டாம் பாகத்தில் இன்னும் ஆழ்ந்து நோக்கப்பட்டிருக்கிறது. ரெமோ, த்ரிஷா இல்லன்னா நயன்தாரா போன்ற படங்கள் சமூகத்திற்கு செய்யும் தீங்குகளை நாம் பொதுவில் வெளிப்படையாக பேசியே ஆகவேண்டும். அதற்கான தேவை இங்கே நிறைய இருக்கிறது. அதை இந்த இரண்டாம் பாகம் திறம்பட செய்திருக்கிறது.

முதல்பாகத்தில் இல்லாத விஷயமாக அரசியல் பகடி இரண்டாம் பாகத்தில் பரவலாக இடம்பெற்றிருப்பது உண்மையில் பெருத்த மகிழ்ச்சியை அளித்தது. ஒரு பெண் பத்திரிகையாளரின் கன்னங்களை தடவிவிட்டு, "நான் உன் தாத்தா மாதிரி.." என்று சதீஷ் சொல்லும் காட்சி அதில் உச்சம். எத்தனை பேர் அதை கவனித்தார்கள் என்பது கூட தெரியவில்லை. தணிக்கைத் துறை அதை எப்படி அனுமதித்தது என்றும் புரியவில்லை. 

சசிகலா, ஓ.பன்னீர்செல்வத்தை எல்லாம் மிக எளிதாக நகைச்சுவை கதாபாத்திரமாக மாற்றியிருப்பதைக் கண்டு சம்பந்தப்பட்டவர்கள் யாரும் கோபம் கொள்ளமாட்டார்கள். காரணம் அவர்கள் இருவரும் மிகப்பெரிய ஒரு டிராமா நடத்திவிட்டு, நாயகனாக பதவி உயர்வு பெறுவார்கள் என்கிற பிம்பத்தை உண்டாக்கிவிட்டு, பின்னர் காமெடி பீஸ்களாக மாறியவர்கள். அவர்கள் முதலில் செய்யும்போது சீரியசாக இருந்த ஒரு விஷயம் இப்போது காமெடியாக மாறி நிற்பதை இந்தப் படம் அப்பட்டமாக பிரதிபலிப்பதுதான் படத்தை இன்னும் சிறப்பாக்குகிறது.

தமிழ்ப்படம் 2 சிறப்பு பார்வை: இன்னும் கிழிக்கப்பட வேண்டியது ஏன்?

சமூகத்திற்கு நன்மை பயக்கும் வசனங்களை பேசுகிறேன் என்று வாட்ஸப் ஃபார்வேர்ட் மெசேஜ்களை திரைப்படங்களில் வசனமாக வைக்கும் இயக்குனர்களை கேலி செய்திருப்பது, ஒரே மாதிரியான கேமரா கோணங்களை, கதாபாத்திரங்களை தொடர்ந்து படங்களில் உபயோகப்படுத்தும் இயக்குனர்களை போகிறபோக்கில் காமெடி ஆக்கி இருப்பது என சேம்சைட் கோலும் படத்தில் இருக்கிறது. அந்த வகையில் இந்தப் படம் பல இடங்களில் தன்னைத் தானே கேலி செய்துகொள்கிறது. 

ஒவ்வொரு இயக்குனருக்கும் ஒரு சென்டிமெண்ட் காட்சி இருக்கும். அப்படி இயக்குனர் சி.எஸ்.அமுதனுக்கு ஹீரோ போட்டிருக்கும் பேன்ட் பின்புறம் கிழிவது சென்டிமெண்ட் காட்சி போல!! முதல்பாகத்தில் சந்திரமுகி சண்டைக்காட்சியை கேலி செயது பேன்ட் கிழிந்த சிவா, இந்தப் படத்தில் விண்ணைத்தாண்டி வருவாயா சிம்புவை கேலி செய்து பேன்டை கிழிக்கிறார். ஆகமொத்தம் குழுவாக சேர்ந்து கிழித்திருக்கிறார்கள்.

தமிழ்ப்படம் 2 சிறப்பு பார்வை: இன்னும் கிழிக்கப்பட வேண்டியது ஏன்?

இந்த மாதிரியான ஸ்பூஃப் படங்கள் மேலும் மேலும் எடுத்துக்கொண்டே இருக்கவேண்டும் என்பதே என் ஆசை. நம்மை போதையில் வைத்திருக்கும் சில விஷயங்களை மூன்றாவது மனிதனாக இருந்து நாமே காறி உமிழ இப்படியான படங்கள் மிகவும் அவசியம். போதை தெளிகிறதோ இல்லையோ, குறைந்தபட்சம் நாம் இந்த போதையில் இருக்கிறோம் என்பதாலா புத்திக்கு தெரிந்தால் கூட போதும். 

வழக்கம்போல இரண்டாம் பாகத்தில் க்ளிஷே காட்சிகளையும் கேலி செய்திருந்தாலும் கூட, அதைவிட முக்கியமாக நாயக வழிபாட்டை சாடியிருப்பதே இந்தப் படத்தின் முக்கியத்துவத்திற்கு காரணமாக நான் நினைக்கிறேன். படத்தின் வசனங்கள் நகைச்சுவை மேடை நாடகங்கள் அளவே இருந்தாலும், எதிர்பாரா நேரத்தில் வெளிப்பட்டும் நுணுக்கமான கேலிகள் படத்தை சுவாரஸ்யமாகவே நகர்த்துகிறது.

இந்த மாதிரியான படங்கள் ஓர் ஆரோக்கியமான விவாதத்தை ஏற்படுத்த வழிசெய்யும் வண்ணம் வரும்காலத்தில் இயங்குதல் வேண்டும் என்கிற வேண்டுகோளோடு, நன்றி.

- பால கணேசன், கட்டுரையாளர், தொடர்புக்கு vinolishan@gmail.com 

*

 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP