தாம்பரம் பகுதியில் மழை பாதிப்பா?.. உடனே இந்த எண்களுக்கு போன் அடிங்க!
சென்னையில் பல்வேறு இடங்களில் கனமழை பெய்து வருகிறது.சென்னையில் மழை பெய்வது பிரச்சனை இல்லை. ஆனால் மழை பெய்யும் போது சென்னை மற்றும் சென்னை புறநகர் பகுதிகள் வெள்ளத்தில் மிதப்பது தான் சென்னை வாசிகளுக்கு பெரும் பிரச்சினை.
அதிலும் குறிப்பாக சென்னையின் புறநகர் பகுதிகளான தாம்பரம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளான பெருங்களத்தூர், சிட்லபாக்கம், சமத்துவ பெரியார் நகர் போன்ற பகுதிகள் மழை வெள்ளத்தில் தத்தளிப்பது வழக்கம்.
இதனை அடுத்து தற்போது தொடங்கியுள்ள வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு தாம்பரம் மாநகராட்சியில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை பணிகள் தீவிரமடைந்துள்ளது. மேலும் மழை வெள்ள பாதிப்பு மற்றும் தண்ணீர் தேக்கம் குறித்து பொதுமக்கள் புகார் தெரிவிக்கும் வகையில் தனியாக தொலைபேசி எண்கள் வாட்ஸ்அப் எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.
தாம்பரம் மாநகராட்சி பகுதிகளில் மழை வெள்ள காலங்களில் பொதுமக்களுக்கு பாதிப்பின்றியும், போக்குவரத்திற்கு இடையூறின்றியும் செல்லும் வகையிலும், மழை நீரானது சாலைகள் மற்றும் தெருக்களில் தேங்காமல் செல்லும் வகையில் மாநகராட்சிக்குட்பட்ட ஐந்து மண்டலங்களிலும் ரூபாய் 37.50 கோடி மதிப்பீட்டில் 12.461 கிலோமீட்டர் நீளத்திற்கு மழை நீர் வடிகால் அமைக்கப்பட்டுள்ளது.
மேலும் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள சுரங்கப் பாதைகள் மற்றும் மழைநீர் தேங்கும் இடங்களில் மோட்டார் பம்புகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.சுரங்க பாதைகளில் நீர் தேங்கினால் நீரை உடனடியாக வெளியேற்றும் வகையில் ஆறு மோட்டர் பம்புகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.
மாநகராட்சியில் மழை தொடர்பான புகார் அளிக்க 24 மணி நேரமும் இயங்கும் கட்டுப்பாட்டு அறை அமைத்து கண்காணிப்பு பணிகள் மேற்கொள்ளவும் மீட்பு பணிகளை மேற்கொள்ளவும் பணியாளர்கள் மற்றும் அலுவலர்கள் அடங்கிய குழுக்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.
மேலும் பொதுமக்கள் தங்களது பகுதியில் ஏற்படும் பாதிப்புகளை புகார் தெரிவிக்க கட்டுப்பாட்டு அரையை தொடர்பு கொள்ள கட்டணமில்லா தொலைபேசி எண் 1800425435, 1800251600, வாட்ஸ்அப் எண் 8438353355 எண்களில் தொடர்பு கொள்ளலாம்.