1. Home
  2. தமிழ்நாடு

விசிக + பாமக + நாதக கூட்டணி அமையுமா ? சீமான் பதில்..!

1

விஜய் அரசியல் கட்சி தொடங்குவதற்கு முன்பாகவே அவரை அதிகம் ஆதரித்த பேசி வந்தவர் சீமான். கடந்த பிப்ரவரியில் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற புதிய கட்சியை அறிவித்தபோதும் ஆதரவு கொடுத்தார் சீமான். ஆனால், விக்கிரவாண்டியில் உள்ள வி.சாலையில் முதல் மாநாட்டை நடத்திய பிறகு முழுமையாக விஜய்யை எதிர்க்க ஆரம்பித்துவிட்டார் சீமான்.
 

இந்நிலையில் ரெட் பிக் சேனலுக்கு சீமான் அளித்துள்ள பேட்டியில் விஜய் மீது கோபம் வர என்ன காரணம் என்பதை விளக்கி இருக்கிறார். பல ஆண்டுகளாக தங்களின் கட்சி கொடிக்கு மஞ்சள் மற்று சிகப்பு நிறத்தை பயன்படுத்தி வருகிறோம். அதற்கு நாங்கள் விளக்கமும் அளித்துள்ளோம். அதே நிறத்தைக் கட்சிக் கொடியாக வைத்து விட்டு மஞ்சள் என்றால் மங்களமான நிறம், சிகப்பு என்றால் புரட்சி என்று விஜய் விளக்கம் அளித்தது கோபத்தை உண்டாக்கியதாக அவர் கூறியுள்ளார்.

தொடர்ந்து அவர் பேசுகையில், "நான் இன்றைய தலைமுறைக்கு ஏற்ற மாதிரியான அரசியலை உள்வாங்கி வருவார் என எதிர்பார்த்தேன். அவர் திராவிடமும் தமிழ்த்தேசியமும் ஒன்றுதான் என சொன்ன போது எனக்குக் கோபம் வந்தது. அது எப்படி ஒன்றாகும்? அப்படி என்றால் விஜய்க்கு ஒன்றும் தெரியவில்லை என்றே அர்த்தம்" என்று கூறியுள்ளார். பாமக, விசிக, விஜய் ஆகிய மூவரும் தமிழ்த் தேசியத்திற்கு எதிரானவர்கள் அல்ல. அப்படி எனில் இவர்களை ஒருங்கிணைத்துத் தேர்தலைச் சந்திக்கலாமே? என்ற கேள்விக்குச் சீமான் பதிலளித்துள்ளார்.

அவர், "அது 8% இருக்கும் போது நடக்காது. நாதக 20% வாக்குவங்கியைப் பெறும்போது அந்தத் திட்டம் நிறைவேறும். நானே போய் கூட்டணிக்கு அழைத்தால், சின்ன பிள்ளை எடுத்த முடிவாகிவிடும். அதற்கு இன்னும் கொஞ்சக் காலம் தேவைப்படும். தேர்தலில் போட்டியிடப் பணம் தேவை. பெரிய கட்சிகளிடம் போனால் பணம் கிடைக்கும். தேர்தலில் வெற்றியும் பெறலாம். என்னால் கூட்டணிக்குப் பணம் செலவழிக்க முடியாது. நான் பல தேர்தல்களில் தனித்து நின்று தோல்விகளை சந்தித்து உள்ளேன். திருமா, ராமதாஸ் முன்பே முயன்று முடியாது எனக் கூட்டணிக்குப் போய்விட்டார்கள்.

நான் இதுவரை 2 சட்டமன்றம் 2 மக்களவை என 4 தேர்தலில் தோல்வி அடைந்துள்ளேன். உள்ளாட்சியில் நின்று தோற்று இருக்கிறேன். மீண்டும் 2026இல் தனித்துத்தான் போட்டியிட உள்ளேன்" என்று பேசி இருக்கிறார். விஜய்யை தொடர்ந்து அமீரும் திராவிடமும் தமிழ்த் தேசியமும் ஒன்று எனப் பேசி வருவதைச் சீமான் கண்டித்துள்ளார். அவர், "அமீர் கூட ஒரு பேட்டியில் திராவிடமும் தமிழ்த் தேசியமும் ஒன்று என்பதை ஏற்றுக் கொள்வதாகச் சொல்லி இருக்கிறார். அவர் இஸ்லாம் மதத்தை முழுமையாகப் பின்பற்றுபவர். அருகிலிருந்து பார்த்தவன் நான். உலகில் இஸ்லாம், இந்து மதம் தனித்தனியாக இருக்கிறது. இவை இரண்டும் ஒன்று என அமீர் சொல்வாரா?" என்று கேள்வி எழுப்பி இருக்கிறார்.

Trending News

Latest News

You May Like