1. Home
  2. தமிழ்நாடு

கல்லடி பட்டாலும் கண்ணடி படக்கூடாது ஏன் சொல்கிறார்கள்…

கல்லடி பட்டாலும் கண்ணடி படக்கூடாது ஏன் சொல்கிறார்கள்…

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருமே வாழ்க்கையில் ஒரு முறையாவது திருஷ்டி பாதிப்புக்கு உள்ளாவார்கள். இதனால் உண்டாகும் பாதிப்பும் அதிகம் என்பதால் தான் பெரியவர்கள் அனுபவபூர்வமாகவே கண் அடி படக்கூடாது என்று திருஷ்டி சுத்தி போடுவார்கள்.
மனிதர்களுக்கு மட்டுமல்ல செய்தொழில் இடங்கள் முதல் வசிக்கும் வீடு வரை அனைத்துமே கண் திருஷ்டிக்கு உள்ளாக கூடும். அதனால் தான் அமாவாசை தினங்களில் பூசணிக்காயில் திருஷ்டி வைத்து கழிப்பது வழக்கம்.தொழில் புரியும் இடங்களில் பூசணிக்காயின் முனையின் ஒரு பக்கத்தில் சதுரமாய் இலேசாக வெட்டி சில்லறை நாணயங்களை போட்டு மஞ்சள் குங்குமம் இட்டு மூடி விடுவார்கள்.

பிறகு கற்பூரம் காண்பித்து பெரியதாக சுற்றி உடைப்பார்கள். இதனால் தொழிலில் இருக்கும் போட்டிகளில் வெற்றி வாய்ப்பு கிட்டும். தொழிலின் மீது யாரேனும் பொறாமைபட்டாலும் கூட அவர்களது எண்ணம் தவிடுபொடியாகிவிடும். இப்படிதான் பெரியோர்கள் திருஷ்டி கழித்துவந்தார்கள். குழந்தை பிறந்த வீட்டில் குழந்தைக்கு வாரம் நான்கு நாள் திருஷ்டி சுற்றி போடுவார்கள். குழந்தைக்கு திருஷ்டி பட்டால் குழந்தை பால் குடிக்காது. தொடர்ந்து அழுதுகொண்டே இருக்கும். உடலை முறுக்கி அழும் அப்படி அழுதாலே குழந்தைக்கு கண் திருஷ்டிதான் காரணமாக இருக்கும் என்று சொல்வார்கள் வீட்டு பெரியவர்கள். கல் உப்பு, தேங்காய் சிரட்டை, துடைப்பத்தின் குச்சிகள் வரை திருஷ்டி கழிக்கும் பொருளாக பயன்படுத்துவார்கள்.

வளர்ந்தவர்களுக்கு திருஷ்டி கழிப்பதும் உண்டு. நன்றாக சாப்பிட்டிருந்த பிள்ளை சாப்பிடுவதே இல்லை, எப்போதும் ஓடி ஆடி திரிந்த பிள்ளை இப்போதெல்லாம் மந்தமாக இருக்கிறார்கள் என்றோ, அடிக்கடி சோர்வு காய்ச்சல் பிரச்சனைக்கு உள்ளாகிறார்கள் என்றோ இருந்தாலும் அதுவும் கண் திருஷ்டி தான். அவர்களையும் கிழக்கு பக்கம் உட்காரவைத்து சுற்றி போடுவார்கள். இன்னும் இதை முறையாக செய்ய வேண்டுமென்றால் குழந்தைகளுக்கு முட்டையில் மஞ்சள் தடவி குங்குமம் வைத்து மூன்று வழி இருக்கும் இடங்களில் ஓரத்தில் உடைத்துவருவார்கள்.

பெரியவர்களாக இருந்தால் கடலுக்கு அருகில் வசிப்பவர்கள் கடல் நீரை கொண்டு வந்து அதை திருஷ்டி கழிக்க சுற்றி போடுவார்கள். வீடுகளில் எலுமிச்சை, பச்சைமிளகாய், படிகார கற்களை கயிற்றில் கட்டி வாசலில் தொங்கவிடுவார்கள். இன்னும் சிலர் கற்றாழை மடல்களையும் சேர்த்து கட்டி வைப்பார்கள். உங்கள் வீட்டில் திருஷ்டி இருந்தாலோ அல்லது வரக்கூடாது என்று நினைத்தாலோ இப்படி நுழைவாயிலில் மாட்டி வைக்கலாம்.

திருஷ்டி வெளியிலிருந்து வரவில்லை வீட்டுக்கு வரும் விருந்தாளிகளிடமிருந்து வருகிறது என்று சொல்பவர்கள் நிறைய பேர் உண்டு அவர்கள் வீட்டின் நுழைவாயிலில் முகம் பார்க்கும் கண்ணாடியை மாட்டி வைக்க வேண்டும். அப்படி மாட்டி வைத்தால் அவர்கள் மனதில் பொறாமையோடு நினைக்கும் விஷயங்கள் எல்லாமே அவர்கள் பக்கம் திரும்பும்.இதனால் வீட்டுக்கும் அந்த நெகட்டிவ் எண்ண அலைகள் வாயிலோடு நின்றுவிடும். வீட்டின் ஒவ்வொரு அறையிலும் கண்ணாடி தம்ளரில் எலுமிச்சை மூழ்கும் அளவு தண்ணீர் விட்டு அவை அழகும் வரை வீட்டில் வைத்து எடுக்கவும். இதனால் வீட்டுக்குள் வரும் தீய சக்திகள், எதிர்மறையான எண்ணங்கள் பரவுவது தடுக்கும். கெட்டதை எதிர்க்கும் சக்தி எலுமிச்சைக்கு உண்டு.

வீட்டில் இப்படி எதிர்மறை எண்ணங்களை தடுக்கவும் நேர்மறை எண்ணங்கள் அதிகரிக்கவும் எலுமிச்சையின் ஆற்றல் போதும் என்பது தான் முன்னோர்களின் அனுபவமிக்க கருத்து. முயற்சி செய்து பாருங்கள். எண்ணத்தில் நம்பிக்கை கூடுவதை உணர்வீர்கள்.

newstm.in

Trending News

Latest News

You May Like