ரஜினியை சந்தித்தது ஏன்? சசிகலா தரப்பில் விளக்கம் !
ரஜினியை சந்தித்தது ஏன்? சசிகலா தரப்பில் விளக்கம் !

சொத்து குவிப்பு வழக்கில் சிறை தண்டனை அனுபவித்த சசிகலா இந்த ஆண்டு ஜனவரி மாதம் பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் இருந்து விடுதலை செய்யப்பட்டார். அதனையடுத்து, தமிழ்நாட்டில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் தீவிரமாக செயல்படுவார் எனவும் அதிமுகவை கைப்பற்றுவார் என்றும் தகவல் பரவியது. ஆனால், சசிகலா அரசியலிலிருந்து விலகுவதாக அறிவித்தார்.
அதனையடுத்து, நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் அதிமுக தோல்வியடைந்த நிலையில் மீண்டும் அதிமுகவைக் கைப்பற்றும் முயற்சியில் இறங்கியுள்ளார் சசிகலா. தேர்தல் முடிந்தபிறகு தொடர்ந்து அதிமுக தொண்டர்களிடம் பேச்சுவார்த்தை நடத்திவருகிறார். அதிமுகவில் ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி ஆகியோர் அதிகாரத்தை கைப்பற்றி வரும் நிலையில், சசிகலா எதிர்வினையாற்றி வருகிறார்.
இந்தநிலையில், சசிகலா போயஸ் தோட்டத்திலுள்ள ரஜினிகாந்த்தின் இல்லத்துக்கு சென்று அவரையும் அவரது மனைவி லதாவை சந்தித்து பேசியுள்ளார். இந்த சந்திப்பு அரசியல் வட்டாரங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில் சசிகலா தரப்பில் தற்போது விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
சசிகலா தரப்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், சசிகலா நேற்று மாலை ரஜினிகாந்தை அவரது இல்லத்தில் சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின் போது அவரது மனைவி லதா ரஜினிகாந்தும் உடன் இருந்தார்கள். ரஜினிகாந்த் அண்மையில் உடல்நலம் பாதிக்கப்பட்டு தற்பொழுது முற்றிலுமாக குணமடைந்து வந்துள்ளதை அறிந்து, நேரில் சென்று சந்தித்து அவர்களுடைய உடல் நலனை பற்றியும் கேட்டு அறிந்தார்.
மேலும் ரஜினிகாந்தின் அவர்கள் கலையுலகின் உயரிய விருதான தாதா சாகேப் பால்கே விருது பெற்றதற்கும் தனது நெஞ்சம் நிறைந்த வாழ்த்துகளையும் சசிகலா தெரிவித்து கொண்டார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
newstm.in