1. Home
  2. தமிழ்நாடு

தமிழக பாஜக தலைவர் யார்..? தமிழக பாஜகவில் முற்றும் கோஷ்டி மோதல்..!

1

கர்நாடகாவில் ஐபிஎஸ் அதிகாரியாக பணியாற்றி வந்த அண்ணாமலை 2020-ம் ஆண்டு தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு பாஜகவில் இணைந்தார். இதையடுத்து, 2021-ம் ஆண்டு ஜூலை மாதம் பாஜக மாநில தலைவர் பொறுப்பு அண்ணாமலைக்கு வழங்கப்பட்டது. அதன்பிறகு பல்வேறு அரசியல் போக்குகள் குறித்த அவரது அறிக்கைகள், பேச்சுகள் அரசியல் வட்டாரத்தில் விவாதங்களை கிளப்பின.

இந்நிலையில், தற்போது பாஜக உட்கட்சி தேர்தல் நடைபெற்று வருகிறது. பாஜகவில் 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை நிர்வாகிகள் புதிதாக தேர்வு செய்யப்படுவார்கள். 6 ஆண்டுகளுக்கு ஒருமுறை உறுப்பினர் சேர்க்கை புதுப்பிக்கப்படும். இதுதவிர புதிய உறுப்பினர் சேர்க்கையும் நடைபெறும். அந்தவகையில், செப்டம்பர் மாதம் உறுப்பினர் சேர்க்கை தொடங்கப்பட்டது. அதைத்தொடர்ந்து, உட்கட்சி தேர்தலும் தொடங்கப்பட்டன. அதில் கிளைத் தலைவர்கள், மண்டல் தலைவர்கள், மாவட்ட தலைவர்கள் என பல்வேறு பதவிகளுக்கு வாக்குப்பதிவு அடிப்படையில் நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டு வருகின்றனர்

இந்நிலையில், தமிழக பாஜகவின் அடுத்த தலைவராக யார் வருவார்கள் என்ற எதிர்பார்ப்பு கிளம்பி உள்ளது. இந்த பதவிக்கு நயினார் நாகேந்திரன், வானதி சீனிவாசன், தமிழிசை உள்ளிட்டோர் பெயர்களும் அடிப்பட்டன. இந்த நிலையில், பாஜக மாநில தலைவராக மீண்டும் அண்ணாமலையே தேர்வாகிறார் என பாஜக வட்டாரத்தில் கூறப்படுகிறது.

ஆனால், கட்சிக்குள் இருக்கும் மூத்த தலைகள் அண்ணாமலையை பைபாஸ் செய்து டெல்லியில் தங்களுக்கு இருக்கும் சோர்ஸ்கள் மூலம் இங்கு நடப்பதை போட்டுக் கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள். ஏற்கனவே சட்டப்பேரவை நாடாளுமன்ற தேர்தல் என அடுத்தடுத்த தேர்தல் தோல்விகளால் அண்ணாமலை மீது அதிருப்தியில் இருக்கும் டெல்லி தலைமை அண்மைக்காலமாக அண்ணாமலை மீது வரும் புகார்களை காது கொடுத்து கேட்க தொடங்கியிருக்கிறது. அண்ணாமலை நடவடிக்கைகளையும் உன்னிப்பாக கவனித்துக் கொண்டிருக்கிறது. இதை தெரிந்து கொண்ட அவர், டெல்லியை சமாதானப்படுத்தி தன்னுடைய மாநில தலைவர் பதவியை எப்படியாவது தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என காய்களை நகர்த்திக் கொண்டிருக்கிறார். 

இந்த நேரத்தில் தான் நயினார் நாகேந்திரன் கூட்டணி குறித்து பேசியதற்கு அண்ணாமலை கொடுத்திருக்கும் ரியாக்ஷன் தமிழ்நாடு பாஜகவுக்குள் நடக்கும் உட்கட்சி பூசலை வெட்ட வெளிச்சமாக்கியுள்ளது. அடுத்து வரும் சட்டப்பேரவை தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி வைப்பீர்களா?, கூட்டணிக்கு அதிமுகவுக்கு வர வேண்டும் என்பதற்காக தான் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு நெருக்கமானவர்கள் வீடுகளில் வருமானவரி சோதனை நடத்தப்படுகிறதா? என நயினார் நாகேந்திரனிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதில் அளித்த அவர், எடப்பாடி பழனிசாமியுடன் உட்கார்ந்து பேசினாலே கூட்டணி அமைந்துவிடும், இதற்காக ரெய்டு விட வேண்டிய அவசியம் எல்லாம் இல்லை என பதிலளித்தார்.

இந்த கேள்வி தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலையிடமும் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அப்போது பதில் அளித்த அண்ணாமலை, "அண்ணன் நயினார் நாகேந்திரனுக்கு எல்லாம் ரெய்டு விடும் அதிகாரம் இல்லை" என கொஞ்சம் காட்டமாக பதில் கொடுத்தார். இந்த பதில் தான் அண்ணாமலைக்கும், நயினார் நாகேந்திரனுக்கும் இடையே பனிப்போர் நடைபெறுவதை உறுதியாக்கியுள்ளது. கடந்த நாடாளுமன்ற தேர்தலின்போதே நயினார் நாகேந்திரனுக்கு சொந்தமானவர்கள் ரயிலில் பணம் எடுத்துச் சென்று மாட்டிக் கொண்ட விவகாரத்தில் அண்ணாமலை மீது அவர் அதிருப்தியில் இருப்பதாக கூறப்படுகிறது. ஏனென்றால் அண்ணாமலைக்கு நெருக்கமானவர்கள் தான் இந்த விஷயத்தை போட்டுக் கொடுத்திருக்க முடியும் என நயினார் தரப்பு உறுதியாக நம்புகிறது.

அப்போது முதல் இருவருக்கும் இடையிலான உறவு சுமூகமாக இல்லை. அதேநேரத்தில் நயினார் நாகேந்திரன் கடந்த சில ஆண்டுகளாகவே தமிழ்நாடு பாஜக தலைவர் பதவி மீது கண் வைத்திருக்கிறார். இதுவும் அண்ணாமலைக்கு பிடிக்காததால், அவரை எப்படியாவது ஓரம் கட்ட வேண்டும் என ஸ்கெட்ச் போட்டுக் கொண்டிருக்கிறார். இவர்களுக்கு மத்தியில் நடக்கும் கோஷ்டி பூசலை தெரிந்து கொண்ட மற்ற மூத்த தமிழ்நாட்டு பாஜக தலைகள் இருவரையும் தவிர்த்து நாம் எப்படியாவது மாநில தலைமை பதவியை பிடித்து விட வேண்டும் என தூண்டில் போட்டுக் கொண்டிருக்கிறார்கள். யாருக்கு டெல்லி மேலிடத்தின் அதிர்ஷ்டம் அடிக்கப்போகிறது என்பது இன்னும் ஒரு சில வாரங்களில் தெரிந்துவிடும். அண்ணாமலை நீடிப்பாரா? நீக்கப்படுவாரா? என்பது மிகப்பெரிய கேள்வியாக இருக்கிறது.

Trending News

Latest News

You May Like