ஜனவரி 1 முதல் என்னென்ன மாற்றங்கள் ஏற்படும்?
கார் விலை ஜனவரி 2025 இல் உயர வாய்ப்புள்ளது, மாருதி சுசூகி, டாடா மோட்டார்ஸ், ஹூண்டாய், மகேந்திரா, ஹோண்டா, கியா போன்ற பல முக்கிய வாகன உற்பத்தியாளர்கள் மற்றும் மெசிடஸ் பென்ஸ், ஆடி மற்றும் பிஎம்டபிள்யூ போன்ற சொகுசு பிராண்டுகள் ஜனவரி 1, 2025 முதல் வாகனங்களின் விலைகளை 2 முதல் 4 சதவீதம் வரை உயர்த்தும் என்று தெரிகிறது. கார் தயாரிப்பாளர்கள் தாங்கள் எதிர்கொள்ளும், அதிக உற்பத்தி செலவுகள், அதிகரித்த சரக்கு கட்டணம், ஊதிய உயர்வு மற்றும் அந்நிய செலாவணி ஏற்ற இறக்கம் தான் இந்த உயர்வுக்கு காரணம் என மேற்கோள் காட்டியுள்ளனர்.
ஜனவரி 1, 2025 முதல் வரி செலுத்துவோர் கடுமையான ஜிஎஸ்டி இணக்க விதிமுறைகளை எதிர்கொள்வார்கள், இதில் முக்கியமான மாற்றங்களில் ஒன்று கட்டாய மல்டி-ஃபேக்டர் ஆத்தன்டிகேஷன் (எம்எஃப்ஏ) ஆகும், இது ஜிஎஸ்டி போர்ட்டல்களை அணுகும் அனைத்து வரி செலுத்துவோர் பாதுகாப்பை மேம்படுத்தும் வகையில் படிப்படியாக செயல்படுத்தப்படும். இந்தத் தேவை முன்பு ரூ. 200 மில்லியனுக்கும் அதிகமான வருடாந்திர மொத்த விற்பனை (AATO) கொண்ட வணிக நிறுவனங்களுக்கு மட்டுமே பயன்படுத்தப்பட்டது.
ஒவ்வொரு மாதமும் முதல் தேதியில் எல்பிஜி விலையை ஆயில் மார்க்கெட்டிங் நிறுவனங்கள் மாற்றியமைக்கும். கடந்த சில நாட்களாக 19 கிலோ எடையுள்ள கமர்ஷியல் எல்பிஜி சிலிண்டரின் விலை அதிகரித்து வருகிறது. ஆனால் 14 கிலோ எடையுள்ள வீட்டு சிலிண்டரின் விலை நீண்ட காலமாக நிலையாக இருந்த வருகிறது. இத்தகைய சூழ்நிலையில் இந்த முறையும் எல்பிஜி சிலிண்டர் விலையில் மாற்றம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
PF கணக்கு: 2025-ஆம் ஆண்டின் தொடக்கத்தில் இருந்து ஏடிஎம் இயந்திரங்களில் பிஎப் பணத்தை எடுக்கும் வசதியை EPFO அமைப்பு செயல்படுத்தவுள்ளது. இதற்கான பணிகளை தற்போது EPFO அமைப்பு மேற்கொண்டு வருகிறது. அதற்காக EPFO உறுப்பினர்களுக்கு ஒரு பிரத்தியேக ஏடிஎம் கார்டை வழங்கவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
சமீபத்தில், ரிசர்வ் வங்கி ஃபீச்சர் போன் பயனர்களுக்கு ஒரு புதிய அம்சத்தை வெளியிட்டது. இனிமேல் UPI 123Pay-ஐப் பயன்படுத்தி ரூ.10,000 வரை பணம் செலுத்தலாம். இந்த வசதி ஜனவரி 1, 2025 முதல் தொடங்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கு முன்னர் இந்த வரம்பு ரூ.5,000-ஆக இருந்தது.
அமேசான் பிரைம் மெம்பர்ஷிப் பயன்படுத்துபவர்களுக்கு புதிய விதிகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. இந்த மாற்றங்களும் ஜனவரி 1-ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வரவுள்ளது. அமேசான் நிறுவனத்தின் புதிய விதிகளின்படி பிரைம் வீடியோவை பெற்றுள்ள ஒரு சப்ஸ்கிரைபர் 5 டிவைஸ்களில் மட்டுமே கணக்கை பயன்படுத்த முடியும். இதில் 2 டிவிகள் உட்பட மீதமுள்ள 3 சாதனங்களில் பயன்படுத்திக் கொள்ளலாம் அதற்கு மேல் பயன்படுத்த முடியாது.
வங்கி அல்லாத நிதி நிறுவனங்கள் (NBFC-கள்) மற்றும் வீட்டு நிதி நிறுவனங்கள் (HFCs) ஆகியவற்றுக்கான நிலையான வைப்பு நிதி தொடர்பான விதிகளும் ஜனவரி 1, 2025 முதல் மாறும் என்பதை வங்கி வாடிக்கையாளர்கள் கவனிக்க வேண்டும். இந்திய ரிசர்வ் வங்கி, கடந்த ஆண்டு பொது வைப்புத்தொகையின் பாதுகாப்பை மேம்படுத்த புதுப்பிப்புகளை அறிமுகப்படுத்தியதால் இந்த வளர்ச்சி ஏற்பட்டுள்ளது.