நடிகர் அல்லு அர்ஜுனிடம் கேட்கப்பட்ட கேள்விகள் என்னென்ன..?
தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுனிடம் ஹைதராபாத் போலீஸார் செவ்வாய்க்கிழமை சுமார் நான்கு மணிநேரம் விசாரணை நடத்தினர். முன்னதாக, இன்று விசாரணைக்கு ஆஜராகும் படி அவருக்கு போலீஸார் திங்கள்கிழமை சம்மன் அனுப்பியிருந்தனர்.
விசாரணைக்கு ஆஜராக நடிகர் அல்லு அர்ஜுன் முற்பகல் 11 மணியளவில் சிக்கடபள்ளி காவல் நிலையத்துக்கு வந்தார். அவருடன், அவரது தந்தையும், தயாரிப்பாளருமான அல்லு அரவிந்த் மற்றும் வழக்கறிஞர்கள் சென்றனர். நடிகர் அல்லு அர்ஜுனிடம், துணை காவல் ஆணையர் (மத்திய மண்டலம்) அக்ஷன் யாதவ் தலைமையிலான போலீஸார் மதியம் 2.45 மணி வரை விசாரணை நடத்தினர்.
நடிகர் அல்லு அர்ஜுனிடம் போலீஸார், "பிரிமீயருக்கு வர போலீஸ் அனுமதி மறுக்கப்பட்டிருந்தது உங்களுக்குத் தெரியுமா? காவல் துறை அனுமதி தராத நிலையில் சிறப்பு திரையிடலுக்கு யாருடைய அழைப்பின் பேரில் நீங்கள் அங்கு சென்றீர்கள்? வெளியே கூட்ட நெரிசல் ஏற்பட்டுள்ளது என்று எந்த காவல் துறை அதிகாரியாவது உங்களிடம் தெரிவித்தாரா? பெண் ஒருவர் உயிரிழந்தது உங்களுக்கு எப்போது தெரியும்?” என்பன உள்ளிட்ட கேள்விகளைக் கேட்டனர் என்று தகவல் அறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன. அனைத்து கேள்விகளுக்கும் அல்லு அர்ஜுன் பதில் அளித்ததாகவும், பெண் உயிரிழந்த விவகாரம் அடுத்த நாள்தான் தெரியும் என நடிகர் கூறியதாக வட்டாரங்கள் தெரிவித்தன.