சாத்தனூர் அணை எந்த முன்னறிவிப்பின்றி திறக்கப்பட்டதா..? முதல்வரின் பதில்..!
பெஞ்சல் புயல் காரணமாக விழுப்புரம், கடலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் மிக கனமழை பெய்தது. இதனால் விழுப்புரம் மாவட்டத்தில் ஒரே நாளில் 51 செமீ மழை பதிவானது. ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடியிருப்புகள் வெள்ளத்தில் மூழ்கின. விழுப்புரம், கடலூர், திருவண்ணாமலை உள்ளிட்ட மாவட்டங்களில் 3 நாட்களாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. சாத்தனூர் அணையில் இருந்து எந்தவித முன்னறிவுப்பும் இன்றி 2.60 லட்சம் லிட்டர் கன அடி நீர் திறந்து விடப்பட்டதால் தான் வெள்ளம் மற்றும் பாதிப்பு காரணம் என்று எதிர்க்கட்சிகள் விமர்சித்தன. எடப்பாடி பழனிசாமி, அன்புமணி ராமதாஸ் உள்ளிட்டோர் திமுக அரசு முன்னெச்சரிக்கையுடன் நடவடிக்கை எடுத்திருந்தால் இந்த பாதிப்பு ஏற்பட்டிருக்காது என்று விமர்சித்தனர்.
இதற்கு அப்போதே பதில் அளித்த நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், முன்னறிவிப்பு வெளியிட்டு தான் அணை திறக்கப்பட்டதாகவும், இதனால் தான் பெரிய அளவில் உயிர்ச்சேதம் தவிர்க்கப்பட்டதாகவும் விளக்கம் அளித்தார்.
இந்த நிலையில் இந்த விவகாரம் இன்று சட்டசபையில் ஒலித்தது. 2 நாள் கூட்டமாக நேற்றும் இன்றும் தமிழக சட்டசபை கூடியது. நேற்று சட்டசபையில் டங்ஸ்டன் சுரங்க உரிமைக்கு எதிரான மசோதா சட்டப்பேரவையில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. இன்று சட்டசபையில் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, சாத்தனூர் அணை திறப்பு குறித்து கேள்வி எழுப்பினார். அப்போது அவர் முன்னறிவிப்பு இன்றி சாத்தனூர் அணையில் இருந்து தண்ணீர் திறந்துவிடப்பட்டதால் தான் மக்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டதாக கூறினார். இதே கருத்தை பாமகவும் தெரிவித்து இருந்தது.
அப்போது சட்டப்பேரவையில் முதல்வர் ஸ்டாலின் பதில் அளித்தார். அவர் கூறியதாவது:-
5 முறை எச்சரித்த பின்னரே சாத்தனூர் அணை படிப்படியாக திறக்கப்பட்டது. முன்னறிவிப்பு வெளியிட்டு படிப்படியாக திறக்கப்பட்டதால் தான் உயிர்ச்சேதம் தவிர்க்கப்பட்டது. இது தான் உண்மை. அதிமுக ஆட்சியில் தான் முன்னறிவிப்பு இன்றி செம்பரம்பாக்கம் அணை திறக்கப்பட்டது. இதனால் தான் அப்போது வெள்ளம் ஏற்பட்டது. இவ்வாறு அவர் கூறினார்.