நல்லகண்ணுவின் தியாகம் பாடப்புத்தகத்தில் இடம் பெற வேண்டும் - விஜய் சேதுபதி வலியுறுத்தல்..!
சென்னை கலைவாணர் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணுவின் நூற்றாண்டு விழா நடைபெற்றது. பழ.நெடுமாறன் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், முதல்வர் மு.க.ஸ்டாலின், நடிகர் விஜய் சேதுபதி, தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
அப்போது பேசிய அவர், ஐயா நல்லக்கண்ணு அவருடைய நூறாவது பிறந்தநாள் விழாவில் கலந்து கொள்வது பெருமையாக உள்ளதாக தெரிவித்தார். விடுதலை இரண்டாம் பாகத்தில் நடிக்கும்போது தான் பேசிய வசனங்கள், அவருடைய வாழ்க்கை வரலாறு ஓரளவுக்கு தனக்கு தெரிந்திருந்தது. அதனால் அதனை புரிந்துகொள்ள தன்னால் முடிந்ததாகவும் குறிப்பிட்டார்.
விடுதலை இரண்டாம் பாகத்தில் மஞ்சு வாரியார் ஒரு வசனம் சொல்வார். இன்று பல பேர் தோளில் துண்டு போடுவது, காலில் செருப்பு போடுவது, தீபாவளி பொங்கல் போனஸ் வாங்குவது, 8 மணிநேரம் வேலை நேரமாக இருப்பது, ஞாயிற்றுக்கிழமை விடுமுறையாக இருப்பது, உன்னை மாதிரியான பல தோழர்கள் போராடி ரத்தம் சிந்தி, தாக்கப்பட்டு, உயிரிழந்து வாங்கிக்கொடுத்தது என்று இங்கு எத்தனை பேருக்கு தெரியும் என்று. அந்த தெரியாத பல பேரில் தானும் ஒருவன் என்றும், அதில் பலனடைந்த பல பேர்களில் தானும் ஒருவன், இன்று இது மாதிரியான தோழர்கள் ரத்தம் சிந்தியதன் காரணமாக பலன்களை அனுபவிக்கும் பல கோடி நபர்களின் தானும் ஒருவன் என்றும் விஜய் சேதுபதி கூறினார்.
மேலும் நிகழ்ச்சிக்கு வருவதற்கு முன்பாக நல்லக்கண்ணு பற்றி வீடியோக்களை பார்க்கும்போது மிகவும் ஆச்சரியமாக இருந்ததாகவும், தோழர் நல்லகண்ணு அவருடைய வாழ்க்கை வரலாறு தமிழக பாடப் புத்தகத்தில் இடம் பெற வேண்டும் என தமிழ்நாடு அரசை கேட்டுக்கொள்வதாகவும் கூறினார். சிகப்பு சிந்தனையும், அதற்கு பின்னாடி இருக்கக்கூடிய தியாக வாழ்க்கையும், நம்முடைய வாழ்க்கை வரலாறு, ஐயா நல்லகண்ணு அவருடைய வாழ்க்கை மூலமாக அனைவரையும் சென்றடைய வேண்டும் என நம்புவதாகவும் நடிகர் விஜய் சேதுபதி தெரிவித்தார். நல்லக்கண்ணு அவரை இரண்டு மூன்று முறை நேரில் பார்த்து பேசியுள்ளதாக தெரிவித்த நடிகர் விஜய் சேதுபதி, யாதும் ஊரே யாவரும் கேளிர் என்ற தன்னுடைய படத்தை பார்க்க அவர் வந்தார். அவருடன் அமர்ந்து பேசியதாகவும், நல்லக்கண்ணு மிகவும் இனிமையான மனிதர் என்றும் விஜய் சேதுபதி தெரிவித்தார்
இதில் கலந்துகொண்ட முதல்வர் மு.க.ஸ்டாலின், “கலைஞர், நல்லகண்ணுவுக்கு அம்பேத்கர் விருது வழங்கினார். நான் தகைசால் தமிழர் விருது வழங்கினேன். அகத்தில் இருக்கும் கண் நல்லகண்ணு என கலைஞர் குறிப்பிட்டார்.
தகைசால் தமிழர் விருது தொகையுடன் மேலும், ரூ. 5 ஆயிரத்தைச் சேர்த்து அரசுக்கே நிதியாக வழங்கியவர் நல்லகண்ணு. உயர்நீதிமன்றம் பாராட்டும் அளவுக்கு உழைப்பால் உயர்ந்தவர் நல்லகண்ணு” எனப் பேசினார்.