TN Alert - புதிய வசதிகளுடன் வானிலை முன்னறிவிப்பு செயலி அறிமுகம்..!

சென்னை தலைமை செயலகத்தில், கடந்த மாதம் 30ம் தேதி, வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து, முதல்வர் ஸ்டாலின் ஆய்வு செய்தார்.அப்போது, 'தங்கள் பகுதி சார்ந்த வானிலை முன்னறிவிப்புகளை, பொது மக்கள் எளிதில் அறிவதற்கு வசதியாக, புதிய செயலி உருவாக்கப்படும்' என்று அறிவித்தார்.அதன்படி ஏற்கனவே இருந்த டி.என்.அலெர்ட் செயலி, நவீன வசதிகளுடன் மேம்படுத்தப்பட்டது.
இதிலுள்ள வசதி விபரங்களை, சென்னை எழிலகத்தில் நடந்த நிகழ்ச்சியில், அமைச்சர் சாத்துார் ராமச்சந்திரன் நேற்று வெளியிட்டார்.
'கூகுள் பிளே ஸ்டோர், ஐஓஎஸ் ஆப் ஸ்டோர்' ஆகிய தளங்களில், 'TN Alert' என, 'டைப்' செய்து, மொபைல் போன்களில் செயலியை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.இதன் வழியே, பொது மக்கள் தங்கள் இருப்பிடம் சார்ந்த வானிலை தகவல்கள், முன்னெச்சரிக்கை அறிவிப்புகளை அறியலாம்.அடுத்த நான்கு நாட்களுக்கான, வானிலை முன்னறிப்பு, தினசரி மழை அளவு, நீர்த்தேக்கங்களின் நீர் இருப்பு, வெள்ள அபாயம் குறித்த விபரங்களை அறியலாம்.
பேரிடர் மற்றும் கன மழை காலங்களில், பொது மக்கள் தங்கள் புகார்களை தெரிவிக்கவும், மாவட்ட நிர்வாகத்தை தொடர்பு கொள்ளவும், வழிவகை செய்யப்பட்டுள்ளது.