1. Home
  2. தமிழ்நாடு

இப்படி செஞ்சா வருஷத்துக்கு ரூ.20 கோடி வட்டி கிடைக்கும்! அமைச்சர் புது ஐடியா!

இப்படி செஞ்சா வருஷத்துக்கு ரூ.20 கோடி வட்டி கிடைக்கும்! அமைச்சர் புது ஐடியா!

சேலம் மாநகரப் பகுதியில் பிரசித்தி பெற்ற சுகவனேஸ்வரர் கோயில் மற்றும் கோட்டை மாரியம்மன் கோயில் புனரமைப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்தப் பணிகளை மாநில இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு வெள்ளிக்கிழமை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த அவர், “இந்து சமய அறநிலையத்துறையை பொறுத்தவரை ரூ.10 லட்சம் வருமானம் உள்ள முதல் நிலை கோயில்களில் 539 கோயில்களை பட்டியலிட்டுள்ளோம். இந்த கோயில்களில் கும்பாபிஷேக பணிகள் எடுத்துக் கொள்ளப்பட்டுள்ள கோயில்கள், பணி காலதாமதாகியுள்ள கோயில்கள், ஆகம விதிப்படி 12 ஆண்டுக்கு ஒருமுறை கும்பாபிஷேகம் செய்ய வேண்டிய கோயில்கள் என வகைப்படுத்தியுள்ளோம்.

திருப்பணிகள் நடைபெற்று வரும் கோயில்கள் மற்றும் திருப்பணிகள் நடைபெற வேண்டிய கோயில்கள் என அனைத்து கோயில்களுக்கும் மாஸ்டர் பிளான் எனப்படும் திட்ட அறிக்கை தயார் செய்யப்பட்டு வருகிறது. அந்த அறிக்கையின் படி, ஏற்கெனவே உள்ள சன்னிதானங்கள் மாற்றம் செய்யப்படாமல் ஆகம விதிப்படி திருப்பணிகள் நடைபெறும்.

கோயில் பரப்பளவு, கடைகள், திருத்தேர் இடங்கள், தெப்பக்குள பராமரிப்பு என அனைத்து அம்சங்கள் குறித்தும் கலந்தாய்வு செய்து, முன் எப்போதும் இல்லாத அளவிற்கு கோயில்களை தூய்மை நிறைந்த பகுதியாக, நந்தவனங்கள் இருக்கும் பகுதியாக, தல விருட்சங்கள் இருக்கும் வகையில் மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும். திருப்பணிகள் முழு வீச்சில் நடைபெறும். வாய்ப்புள்ள இடங்களில் கோயில்கள் வளாகத்தில் திருமண மண்டபங்கள் கட்டப்படும்.

கடந்த 50 ஆண்டுகளாக இந்து சமய அறநிலையத் துறைக்கு சொந்தமான இடங்களின் வாடகை வருவதில் நிலுவை உள்ளது. இதை ஒழுங்குப்படுத்த நடவடிக்கை எடுத்து வருகிறோம். இதேபோன்று, ஆக்கிரமிப்புகளை கண்டறிந்து அதனை மீட்பதில் நடவடிக்கை எடுத்து வருகிறோம். மேலும், கோயிலுக்கு சொந்தமான இடங்களை முழுமையாக வேலி அமைத்து அறிவிப்பு பலகை அமைக்க நடவடிக்கை எடுத்து வருகிறோம்.

பொருளாதார மீட்பு நடவடிக்கையாக, சட்ட திட்டங்களுக்கு உட்பட்டு குத்தகைக்கு விடுவது, வாடகைக்கு விடுவது போன்ற நடவடிக்கைகள் எடுக்கப்படும். கூடிய விரைவில் இதற்கான அறிவிப்பு எந்தவித லாப நோக்கமும் இல்லாமல், வெளிப்படைத் தன்மையுடன் அறிவிக்கப்படும். அந்த வருவாய் கோயில்களுக்கு பயன்படுத்தப்படும்” என்றார்.

Trending News

Latest News

You May Like