1. Home
  2. தமிழ்நாடு

விஜயதசமி மற்றும் ஆயுதபூஜை என்ற பெயர் பெற்ற பின்னணி இதுதான் ..!!

விஜயதசமி மற்றும் ஆயுதபூஜை என்ற பெயர் பெற்ற பின்னணி இதுதான் ..!!

சாதாரணமாக, கோவில்களில் வில்வம், வேம்பு, அரசமரங்களைப் பார்க்கலாம். இதில் அரசமரத்தை மட்டுமே வலம் வருவது மரபு. ஆனால், விஜயதசமியன்று, வன்னிமரத்தை வலம் வர வேண்டும் என்பது ஐதீகம்.

பஞ்சபாண்டவர்கள், வன்னிமரத்தில் தங்களுடைய ஆயுதத்தை மறைத்து வைத்துவிட்டு, விராட நகரத்தில் அஞ்ஞாத வாசம் செய்தார்கள். இதை அறிந்த துரியோதனன், எப்படியாவது பாண்டவர்களை வெளியே கொண்டு வர வேண்டும் என்ற எண்ணத்தில், விராட நகரத்தில் இருந்த பசுமாட்டை எல்லாம் சிறைபிடித்தான்.

அவனின் நோக்கம், வீண் சண்டை இழுத்து பாண்டவர்களை வெளிகொண்டு வர வேண்டும் என்பதுதான்.
இதனால் கோபம் கொண்ட விஜயனான அர்ஜுனன், விராடன் மகன் உத்தரனை முன்னிறுத்தி கொண்டு, வன்னிமர பொந்தில் மறைத்து வைத்திருந்த ஆயுதங்களை எடுத்து, கவுரவப்படையை விரட்டியடித்தான்.

தசமி அன்று வென்றதால் ஊர்மக்கள், “நம் விஜயன், தசமி அன்று கவுரவப்படையை வீழ்த்தினார். இனி பாண்டவர்களுக்கு வெற்றிதான்” என்று பேச ஆரம்பித்தார்கள். அன்றிலிருந்துவிஜயதசமி என்ற பெயர் ஏற்பட்டது. மகாநவமி அன்று ஆயுதங்களுக்கு பூஜை செய்ததால் “ஆயுதபூஜை” என்ற பெயரும் ஏற்பட்டது.

நாடெங்கும் விஜயதசமி மிக மகிழ்ச்சியாக கொண்டாடப் படுகிறது. மகிஷாசுரனை அம்பிகை வெற்றிகொண்ட நாள் அது. ஆனால் மேற்கு வங்கத்தில், நவராத்திரி காலங்களில் களிமண்ணால் செய்யப்பட்ட துர்க்கை, காளி சிலைகளை வைத்து வழிபடுவார்கள்.

விஜயதசமி அன்று மண்ணால் செய்யப்பட்ட காளியின் சிலைகளைக் கடலில் கரைப்பார்கள். மீண்டும் தேவி அடுத்த ஆண்டு நவராத்திரிக்கே தங்கள் வீட்டுக்கு வருவாள் என்பது ஐதீகம். தங்களை விட்டுக் கிளம்பும் காளியின் பிரிவைத் தாங்க முடியாத பக்தர்கள் கண்ணீர் விட்டு அழுவதுண்டு.

Trending News

Latest News

You May Like