1. Home
  2. தமிழ்நாடு

இது ஆவினின் நூதன மோசடி திட்டம்... டிடிவி தினகரன் கண்டனம்..!

1

ஆவின் நிறுவனம் புதிதாக கிரீன் மேஜிக் பிளஸ் என்ற பால் ரகத்தை அறிமுகம் செய்ய உள்ளது. 450 மிலியாக அளவை குறைத்துவிட்டு அதன் விலையை 25 ஆக நிர்ணயம் செய்துள்ளது. இதற்கு டிடிவி தினகரன் உள்ளிட்ட தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனா்.

அளவை குறைத்து தரம் உயர்த்தப்பட்டதாக கூறி நூதன மோசடியில் ஈடுபடுவதா என டிடிவி தினகரன் கேள்வி எழுப்பி உள்ளார். இதுதொடர்பாக டிடிவி தினகரன் வெளியிட்ட பதிவில்," புதிய பால் அறிமுகம் என்ற பெயரில் அளவை குறைத்து விலையை உயர்த்தி நூதன மோசடியில் ஈடுபடுவதா ? - சில்லறை தட்டுப்பாட்டை காரணம் காட்டி பொதுமக்களின் மீது கூடுதல் சுமையை ஏற்றும் முடிவை ஆவின் நிர்வாகம் கைவிட வேண்டும்.

ஆவின் நிர்வாகத்தின் மூலம் விற்பனை செய்யப்படும் பச்சை நிற பால் பாக்கெட்டுகளின் பெயரில் "பிளஸ்" எனும் பெயரை சேர்த்து லிட்டருக்கு 11 ரூபாய் வரை உயர்த்தப்பட்டிருப்பதாக நாளிதழ்களில் வெளியாகியிருக்கும் செய்திகள் அதிர்ச்சியளிக்கின்றன.

500 மி.லிட்டர் அளவு கொண்ட பச்சை நிற பால் பாக்கெட்டுகளின் அளவை 450 மி.லிட்டராக குறைத்திருப்பதோடு, சில்லறை தட்டுப்பாட்டை காரணம் காட்டி அதன் விலையையும் லிட்டருக்கு 44 ரூபாயிலிருந்து 55 ரூபாயாக உயர்த்தியிருக்கும் ஆவின் நிர்வாகத்தின் செயல்பாடு கடும் கண்டனத்திற்குரியது.

பால் கொள்முதல் விலையை உயர்த்தித் தர வேண்டும் என்ற உற்பத்தியாளர்களின் நீண்டகால கோரிக்கையை பரிசீலனை கூட செய்ய முன்வராத திமுக அரசு, ஆண்டுக்கு இருமுறை பால் மற்றும் பால் பொருட்களின் விலையை உயர்த்துவது உற்பத்தியாளர்களுக்கு இழைக்கும் துரோகம் ஆகும்.

திமுக ஆட்சி பொறுப்பேற்ற மூன்றரை ஆண்டுகளில் வரிகளையும், கட்டணங்களையும் உயர்த்தி வரும் நிலையில், அன்றாட அத்தியாவசியப் பொருட்களில் ஒன்றான பாலின் விலையை கூட பலமுறை உயர்த்தி அதன் மூலம் வருவாய் ஈட்டுவது தான் திராவிட மாடல் அரசின் சாதனையா ? என பொதுமக்களே கேள்வி எழுப்புகின்றனர்.

எனவே, ஏழை, எளிய பொதுமக்கள் அதிகளவில் பயன்படுத்தும் பச்சை நிற பால் பாக்கெட்டுகளின் விலையை உயர்த்தும் முடிவை உடனடியாக கைவிடுவதோடு, ஆவின் நிர்வாகத்தின் வருவாயைப் பெருக்க ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்துகிறேன்" என டிடிவி தினகரன் கூறி உள்ளார்.

Trending News

Latest News

You May Like