திருப்போரூர் துப்பாக்கிச்சூடு... திமுக எம்.எல்.ஏவுக்கு 15 நாள் நீதிமன்றக் காவல்!
திருப்போரூர் துப்பாக்கிச்சூடு... திமுக எம்.எல்.ஏவுக்கு 15 நாள் நீதிமன்றக் காவல்!

திருப்போரூர் துப்பாக்கிச்சூடு வழக்கில் திமுக எம்எல்ஏ இதயவர்மனை 15 நாட்கள் புழல் சிறையில் அடைக்க செங்கல்பட்டு நீதித்துறை நடுவர் உத்தரவிட்டுள்ளார்.
செங்கல்பட்டு மாவட்டம், திருப்போரூர் சட்டமன்ற தொகுதி திமுக எம்.எல்.ஏ இதயவர்மன். இதேப்பகுதியை சேர்ந்தவர் குமார். இவர் தன்னுடைய நிலத்திற்கு பாதை அமைப்பதற்காக அடியாட்கள் மற்றும் ஜேசிபி உடன் நேற்று சென்றுள்ளார். அப்போது, கோயில் நிலத்தை ஆக்கிரமிப்பு செய்வதாக கூறி கிராம மக்களும் எம்.எல்.ஏ இதயவர்மனின் தந்தையுமான லட்சுமிபதியும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். அப்போது, இருதரப்பிற்கும் இடையே மோதல் வெடித்தது. லட்சுமிபதி உள்ளிட்டோருக்கு அரிவாள் வெட்டு விழுந்துள்ளது. பின்னர், எதிர் தரப்பினர் மீது இதயவர்மன் மற்றும் லட்சுமிபதி துப்பாக்கிச் சூடு நடத்தியதாக கூறப்படுகிறது. இதில் சீனிவாசன் என்பவர் காயமடைந்தார்.
இதுதொடர்பாக குமார் மற்றும் சீனிவாசன் உள்ளிட்டோர் அளித்த புகாரின் அடிப்படையில், இதயவர்மன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து இதயவர்மன், அவரது சகோதரர் நிர்மல், மைத்துனர் வசந்த், ஓட்டுநர் கந்தன், செங்காடு பகுதியை சேர்ந்த வாசுதேவன் மற்றும் ரமேஷ் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்ட 7 பேரும் செங்கல்பட்டு மேஜிஸ்ட்ரேட் காயத்ரி தேவி முன் ஆஜர்படுத்தப்பட்டனர். அவர்களுக்கு 15 நாள் நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். இதனையடுத்து அவர்கள் புழல் சிறையில் அடைக்கப்பட்டனர்.
newstm.in