1. Home
  2. தமிழ்நாடு

இனி இந்த பள்ளிகள் திறக்க கூடாது... தொடக்கக் கல்வி இயக்குநர் உத்தரவு

இனி இந்த பள்ளிகள் திறக்க கூடாது... தொடக்கக் கல்வி இயக்குநர் உத்தரவு


தமிழ்நாட்டில் அங்கீகாரம் இல்லாத பள்ளிகளை மூட வேண்டும் என்றும் அங்கு பயின்று வரும் மாணவர்களை மாற்று பள்ளியில் சேர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தொடக்க கல்வித்துறை இயக்குநர் உத்தரவிட்டுள்ளார்.

இதுகுறித்து தொடக்கக்கல்வி இயக்குநர் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவர்களுக்கு அனுப்பியுள்ள அறிக்கையில், “தொடக்கக் கல்வி இயக்ககத்தின் கீழ் செயல்படும் அரசு நிதியுதவிபெறும் தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகள், சுயநிதியில் செயல்படும் தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகள் மழலையர் மற்றும் தொடக்கப் பள்ளிகள் மற்றும் இளம் மழலையர் பள்ளிகள் ஆகியவை சார்பாக தொடக்க அனுமதி, அங்கீகாரம் மற்றும் தொடர் அங்கீகாரம் பெறாமல் செயல்படும் பள்ளிகள் சார்பாக விவரங்களை அனுப்புமாறு தங்களுக்கு தெரிவிக்கப்படுகிறது.

மேலும், அங்கீகாரம் பெறுவதற்குரிய முழுமையான வடிவில் கருத்துரு அளிக்க இயலாத பள்ளிகளை உடனடியாக இக்கல்வி ஆண்டுடன் மூடுதல் சார்ந்து உரிய விதிமுறைகளின்படி. அப்பள்ளியில் பயிலும் மாணவ/மாணவிகளை வேறு பள்ளியில் சேர்க்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், துவக்க அனுமதி மற்றும் தொடர் அங்கீகாரமின்றி செயல்படும் பள்ளிகளின் நிர்வாகிகளுக்கு பள்ளியை மூடுவதற்கு உரிய தாக்கீது அனுப்பி நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

துவக்க அங்கீகாரம் மற்றும் தொடர் அங்கீகாரம் இல்லாமல் செயல்படும் அனைத்து இளம் மழலையர் பள்ளிகள், நர்சரி மற்றும் பிரைமரி பள்ளிகள், சுயநிதி தொடக்க நடுநிலைப் பள்ளிகள், உதவிபெறும் தொடக்க/நடுநிலைப் பள்ளிகளை மூடுதல் சார்ந்து விதிமுறைகளின்படி, நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனவும், துவக்க அங்கீகாரம், தொடர் அங்கீகாரம் இல்லாமல் பள்ளிகள் செயல்படுமானால் சார்ந்த வட்டாரக் கல்வி அலுவலர், மாவட்டக் கல்வி அலுவலர் மற்றும் முதன்மைக் கல்வி அலுவலரே பொறுப்பேற்க நேரிடும் எனவும் தங்களுக்கு தெரிவிக்கப்படுகிறது.

எனவே, அங்கீகாரமின்றி செயல்படும் பள்ளிகள் மீது பள்ளி வாரியாக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை விவரத்தினை இவ்வியக்ககத்திற்கு அனுப்புமாறு அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது” என்று அதில் கூறப்பட்டுள்ளது.

Trending News

Latest News

You May Like