கழிவறை செல்ல மாவட்ட ஆட்சியரிடம் கடன் கேட்ட இளைஞர்..!

 | 

விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் மோகன், நேற்று காலை வழக்கம் போல நகராட்சி பகுதியில் ஆய்வு செய்ய புறப்பட்டுக் கொண்டிருந்தார்.

அப்போது, விழுப்புரம் அருகேயுள்ள குமாரக்குப்பம் கிராமத்தைச் சேர்ந்த பிரகாஷ் என்பவர் கோரிக்கை மனு ஒன்றை கலெக்டரிடம் வழங்கினார்.

அந்த மனுவில், “விழுப்புரம் புதிய பேருந்து நிலையத்தில் உள்ள கட்டண கழிவறையில் சிறுநீர் கழிக்க 50 பைசாவும், மலம் கழிக்க ஒரு ரூபாயும் வசூலிக்க வேண்டும் என்ற கட்டண விதியை மீறி, சிறுநீர் கழிக்க 5 ரூபாய், மலம் கழிக்க 10 ரூபாய் என அடாவடி வசூலில் ஈடுபடுகின்றனர்.

பொதுமக்களில் ஒருவரான என்னிடம் ஒரு ரூபாய் மட்டுமே உள்ளது. என் அவசர நிலையை புரிந்துகொண்டு, காலைக்கடன் கழிக்க எனக்கு 9 ரூபாய் கடன் உதவி வழங்க வேண்டுகிறேன்; இந்தக் கடன் தொகையை, வரும் 1-ம் தேதி திரும்பச் செலுத்திவிடுகிறேன்.

மேலும், பொதுமக்களை மிரட்டும் கட்டண கழிவறை ஒப்பந்ததாரர் மீது உரிய சட்ட நடவடிக்கை எடுப்பதுடன், கட்டண கழிவறை ஒப்பந்தத்தை ரத்து செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன்” என அவர் குறிப்பிட்டிருந்தார்.

இதையடுத்து மாவட்ட ஆட்சியர் மோகன், மனு அளித்த பிரகாஷை அழைத்துக் கொண்டு, அவர் குறிப்பிட்ட கட்டண கழிவறைக்கு சென்று அங்கு இருந்தவர்களிடம் கட்டண விவரங்களை கேட்டார். அப்போது,  “விதிப்படித்தான் கட்டணம் வசூலிக்கிறோம்” என்று அவர்கள் தெரிவித்தனர்.

அந்த நேரம், கழிவறையிலிருந்து வெளியே வந்த ஒருவரிடம் கேட்டபோது, புகார் அளித்த இளைஞர் பிரகாஷ் தெரிவித்தபடி கூடுதல் கட்டணம் வசூலிப்பது உண்மை என்பது தெரியவந்தது.

இதையடுத்து, உடன் வந்திருந்த நகராட்சி ஆணையர் தட்சணாமூர்த்தியிடம், “இங்கு எழுதப்பட்ட டோல் ஃபிரீ எண்ணுக்கு பதில் உங்கள் செல்போன் எண்ணை எழுதுங்கள்; யார் போன் செய்தாலும் எடுத்து பேசுங்கள். இந்த ஒப்பந்ததாரர் மீது நடவடிக்கை எடுங்கள்” என மாவட்ட ஆட்சியர் மோகன் உத்தரவிட்டார்.

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP