தொடரும் சோகம்..! ஆன்லைன் கடன் செயலியால் இளைஞர் தூக்கிட்டு தற்கொலை..!
செங்கல்பட்டு மாவட்டம் சிங்கப்பெருமாள் கோவில் அருகே வசித்து வந்தவர் தங்கராஜ் (வயது 32). இவர் மகேந்திரா சிட்டி பகுதியில் அமைந்துள்ள தனியார் நிறுவனத்தில் ஒப்பந்த ஊழியராக பணிபுரிந்து வந்தார். இந்த நிலையில் தங்கராஜ் அடிக்கடி ஆன்லைன் செயலி மூலம் கடன்பெற்று, அதனை முறையாக கட்டி வந்ததாக கூறப்படுகிறது. ஒரு கட்டத்தில் ஆன்லைன் செயலியில் அதிக கடன் பெற்றுள்ளார். இதனால் கடன் தொகைக்கான தவணையை குறித்த தேதியில் கட்ட முடியாமல் தவித்து வந்துள்ளார். மேலும் அவர் கடந்த சில நாட்களாக கடும் மனஉளைச்சலில் இருந்து வந்துள்ளார்.
இந்த நிலையில், தங்கராஜ் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தனது அறையில் உள்ள மின்விசிறியில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். அவரது அறை நீண்ட நேரம் திறக்காததால் சந்தேகம் அடைந்த பெற்றோர் கதவை உடைத்துச்சென்று பார்த்தபோது தங்கராஜ் தூக்கில் சடலமாக தொங்கியபடி இருந்துள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர், உறவினர்கள் அலறி துடித்தனர். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மறைமலைநகர் போலீசார் பிரேதத்தை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் தங்கராஜ் தற்கொலைக்கான காரணம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.