பிச்சை எடுத்த சினிமா இயக்குனர்.. உதவி செய்த நடிகை.!
பிச்சை எடுத்த சினிமா இயக்குனர்.. உதவி செய்த நடிகை.!

சினிமா ஆசையில் இளம் வயதினர் பலரும் சென்னை, மும்பை என சென்று முயற்சி செய்தும், சிலர் அதில் வெற்றி பெற்றவரும் உள்ளனர். சிலர் அதில் தோல்வியை தழுவி ஆள் அடையாளம் இல்லாமல் போன சோக கதையும் உள்ளது. அப்படி ஒரு நிகழ்வு தான் தற்போது நடந்துள்ளது.
1982ம் ஆண்டு புனே பிலிம் இன்ஸ்டிட்யூட்டில் படித்த முன்னா ஹுஸைன் சிலிகுரியை சேர்ந்தவர். இவர், சினிமா மீது கொண்ட ஆசையால் மும்பையில் பல பாலிவுட் பட புரொடக்ஷன் பணிகளுக்கு அசிஸ்டென்டாக பணியாற்றியுள்ளார்.
வாடகை வீட்டில் குடியிருந்து வந்த இவர், தனது மொத்த சேமிப்பு தொகையான ரூ.30 லட்சத்தை கொண்டு 1998ம் ஆண்டு ஒரு படத்தை தயாரித்து இயக்கினார். அது தோல்வியில் முடிந்தது, மேலும் அவரது குடும்பத்தையும் அவர் இழந்தார். இதனால், வறுமையால், கடந்த 15 வருடமாக, பாந்த்ராவில் உள்ள மெகபூப் ஸ்டூடியோ அருகில் பிச்சை எடுத்து நடைபாதையில் வசித்து வந்திருக்கிறார்.
இந்நிலையில், கொரோனா மற்றும் ஊரடங்கு காரணமாக சில சமூக தொண்டு நிறுவனங்கள், சாலையோரம் வசிப்பவர்களுக்கு உதவி வருகிறது. அப்போது முன்னா ஹூசைன் பற்றி அறிந்த தொண்டு நிறுவனத்தைச் சேர்ந்த கவுதம், தனக்குத் தெரிந்த நடிகை ராஜஶ்ரீ தேஷ்பாண்டேவிடம் இது குறித்து தெரிவித்திருக்கிறார்.
முன்னா ஹூசைனை சந்தித்து பேசியபோது, அவருக்கு கேட்கும் திறன் இல்லை, மேலும், பக்கவாதமும் தாக்கி இருக்கிறது என்பது தெரியவந்தது. இதுபற்றி நடிகை ராஜஶ்ரீ தேஷ்பாண்டே கூறும்போது, ‘இவருக்கு சிலர் உதவினர் என்பதில் மகிழ்ச்சி. சினிமாவில் ஏற்பட்ட நஷ்டத்தை சரிசெய்ய, சிறிய வேலைகள் செய்ய முயற்சி செய்திருக்கிறார். ஆனால், பொருளாதார ரீதியாகவும் மனரீதியாகவும், உடல்ரீதியாகவும் மொத்தமாக அவர் அனைத்தையும் இழந்துவிட்டார்’ என்றார். இந்நிலையில் அவரை ஹோம் ஒன்றில் சேர்த்திருக்கிறார் நடிகை ராஜஶ்ரீ தேஷ்பாண்டே..
newstm.in