1. Home
  2. தமிழ்நாடு

6 நாட்களாக நடந்த ஆசிரியர்கள் போராட்டம் வாபஸ்

6 நாட்களாக நடந்த ஆசிரியர்கள் போராட்டம் வாபஸ்

சென்னையில் டிபிஐ அலுவலக வளாகத்தில் கடந்த 6 நாளாக நடந்த இடைநிலை ஆசிரியர்கள் போராட்டம் நேற்று வாபஸ் ஆனது; கல்வித்துறை அதிகாரிகள் பேச்சுவார்த்தையை அடுத்து, அமைச்சர் தந்த உறுதிமொழியை ஏற்று போராட்டத்தை ஒத்திவைத்துள்ளனர்.

சமவேலைக்கு சமஊதியம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து இடைநிலை ஆசிரியர்கள் டிபிஐ வளாகத்தில் கடந்த 6 நாட்களாக உண்ணா விரதம் இருந்து வருகின்றனர். இரவு பகலாக குடும்பத்துடன், குழந்தைகளுடன் பெண் ஆசிரியர்களும் இந்த போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த சூழ்நிலையில் தினமும் குறைந்தபட்சம் 10 ஆசிரியர்களாவது மயக்கம் அடைந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு வருகின்றனர். இதற்கிடையே, துப்புரவுப் பணியாளர்களுக்கு வழங்கப்படும் ஊதியம் போல தங்களுக்கும் ஊதியம் வழங்கப்படுகிறது என்பதை உணர்த்துவதற்காக, போராட்டத்தில் ஈடுபட்டு வரும் ஆசிரியர்கள் டிபிஐ வ ளாகத்தில் நேற்று முன்தினம் துப்புரவு பணி செய்து தங்கள் எதிர்ப்பை தெரிவித்தனர். இதனால் நாளுக்கு நாள் போராட்டம் வலுப்பெற்று வந்தது.

இடைநிலை ஆசிரியர்கள் இந்த உண்ணா விரதம் தொடங்குவதற்கு முன்னதாக, தொடர் உண்ணா விரதம், துப்புரவுப் பணி, ரத்ததானம், அதற்கு பிறகு உறுப்பு தானம் செய்வது உள்ளிட்ட தீர்மானங்களை அறிவித்தனர். இதன்படி போராட்டம் தொடங்கிய 6வது நாளான நேற்று 6 ஆசிரியர்கள் ரத்ததானம் செய்தனர். இதைக் கண்ட மற்ற ஆசிரியர்களும் ரத்த தானம் செய்ய முன்வந்தனர். போலீசார் அவர்களை தடுத்தனர். இன்று உறுப்பு தானம் செய்ய உள்ளனர். இந்நிலையில் நேற்று மட்டும் 20க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் மயக்கம் அடைந்தனர். இதுவரை 250 ஆசிரியர்கள் இதுவரை மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

ஆசிரியர்களின் போராட்டம் நாளுக்கு நாள் தீவிரம் அடைந்து வருவதை அடுத்து, தொடக்கக் கல்வித்துறை அதிகாரிகள் நேற்று பேச்சுவார்த்தைக்கு அழைத்தனர். நேற்று மதியம் 2 மணிக்கு பிறகு தொடக்க கல்வித்துறையில் பேச்சுவார்த்தை நடந்தது. மாலை வரை நீடித்த பேச்சு வார்த்தையின் போது, போராட்டத்தை கைவிடவேண்டும் என்று கல்வி அதிகாரிகள் வலியுறுத்தினர்.போராட்டத்தை கைவிட வேண்டும் என்றால், கோரிக்கை மீது ஏதாவது உறுதி அளித்தால் மட்டுமே போராட்டத்தை தற்காலிகமாக ஒத்தி வைக்க முடியும் என்று ஆசிரியர்கள் தெரிவித்தனர். ஆனால், பள்ளிக் கல்வித்துறையின் முதன்மைச் செயலாளரின் கருத்தை அறிந்த பிறகே எதுவும் தெரிவிக்க முடியும் என்று கல்வி அதிகாரிகள் தெரிவித்தனர். ஆனால், நேற்று இரவு 7 மணி வரை அரசு தரப்பில் இருந்து எந்த பதிலும் வரவில்லை. இதையடுத்து, இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர்கள் இயக்கத்தின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் கூட்டம் அவசரமாக கூட்டப்பட்டது. போராட்டத்தை கைவிடுவதா அல்லது தொடர்வதா என்பது குறித்து பேசினர்.

இதையடுத்து தற்போதைக்கு இந்த போராட்டம் வாபஸ் பெறப்படுகிறது.

newstm.in

newstm.in

Trending News

Latest News

You May Like