1. Home
  2. தமிழ்நாடு

அரசு கட்டுப்பாட்டில் இருந்து கோவில்களை விடுவிக்க தமிழக மக்கள் ஆதரவு!

அரசு கட்டுப்பாட்டில் இருந்து கோவில்களை விடுவிக்க தமிழக மக்கள் ஆதரவு!

தமிழக அரசின் கட்டுப்பாட்டில் இருந்து கோவில்களை விடுவிப்பதற்கு தமிழகம் முழுவதும் இருந்து ஆயிரக்கணக்கான பொதுமக்கள் இன்று (மார்ச் 26) தங்களின் பேராதரவை வெளிப்படுத்தினர்.

அழிந்து வரும் தமிழக கோவில்களை பாதுகாக்கும் விதமாக கோவில் அடிமை நிறுத்து என்ற இயக்கத்தை ஈஷா அறக்கட்டளை நிறுவனர் சத்குரு தொடங்கியுள்ளார். அவர் கோவில்களின் அவல நிலையை ஆதாரத்துடன் எடுத்து கூறும் விதமாக நம் தமிழகத்தின் பல்வேறு இடங்களில் சிதைவுற்று கேட்பாரற்று கிடக்கும் கோவில்களின் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை தனது ட்விட்டர் பக்கத்தில் தினமும் பதிவேற்றி வருகிறார். மார்ச் 24-ம் தேதி மட்டும் ஒரே நாளில் பொதுமக்கள் எடுத்த 100 வீடியோக்களை ட்வீட் செய்தார். இதற்கு சமூக வலைத்தளங்களில் பெரிய வரவேற்பு கிடைத்தது.

இதன் அடுத்த கட்டமாக, இவ்வியக்கத்திற்கு மாவட்டந்தோறும் ஆதரவு திரட்டும் வகையில், தஞ்சாவூர் பெரிய கோவில், மதுரை மீனாட்சி அம்மன் கோவில், திருச்சி ஸ்ரீரங்கம் கோவில், கோவை மருதமலை முருகன் கோவில், காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவில், புதுச்சேரி வேதபுரீஸ்வரர் கோவில், சேலம் பாண்டுரங்கன் கோவில், பவானி சங்கமேஷ்வரர் கோவில், சுசீந்திரம் ஸ்ரீ தானுமலையான் கோவில், சென்னை காரணீஸ்வரர் கோவில், திருநெல்வேலி நெல்லையப்பர் கோவில் ஆகிய 11 பிரசித்தி பெற்ற கோவில்களில் மாலை 4.30 மணி முதல் 5.30 மணி வரை ஈஷா சம்ஸ்கிரிதி குழந்தைகள் மற்றும் பொதுமக்கள் பக்தி பாடல்கள் பாடி விழிப்புணர்வு பிரச்சாரம் செய்தனர். அவர்கள் தேவாரம், கந்த சஷ்டி கவசம், அம்மன் பாடல்கள் உள்ளிட்ட பக்தி பாடல்களை பாடினர்.

இதை தொடர்ந்து ஒவ்வொரு கோவில்களின் முன்புறமும் நூற்றுக்கணக்கான பொதுமக்கள் திரண்டு #கோவில்அடிமைநிறுத்து என்ற பதாகையை ஏந்தி தங்கள் ஆதரவை வெளிப்படுத்தினர். மேலும், கோவை ஆதியோகி முன்பும் ஏராளமான பொதுமக்கள் திரண்டு தங்கள் ஆதரவை தெரிவித்தனர்.


முன்னதாக, இவ்வியக்கத்திற்கு நடிகர் சந்தானம், நடிகைகள் ஸ்ரீதிவ்யா, கஸ்தூரி, கங்கனா ரெனாவத், திரெளபதி பட இயக்குநர் மோகன் உள்ளிட்ட பல்வேறு சினிமா பிரபலங்கள், அரசியல், வர்த்தகம் போன்ற துறைகளைச் சேர்ந்த முக்கிய நபர்கள் ஆதரவு அளித்தனர். மேலும், அதிமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள பாஜக மற்றும் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி கோவில்களை அரசின் கட்டுப்பாட்டில் இருந்து விடுவிப்போம் என தங்கள் தேர்தல் அறிக்கைகளில் குறிப்பிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Trending News

Latest News

You May Like