தமிழகமே அதிர்ச்சி..! கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட சிறுவர்கள்... 1.25 கிலோ கஞ்சா பறிமுதல்!

அனைத்து மாவட்டங்களிலுமே கஞ்சா புழக்கம் அதிகரித்துள்ள நிலையில், தமிழக அரசு இது குறித்து தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பல மாதங்களாக பொதுமக்கள் தொடர்ந்து தங்களது அதங்கத்தைத் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், கஞ்சா விற்பனையில் சிறுவர்களும் ஈடுபட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் கஞ்சா விற்றுக் கொண்டிருந்த சிறுவர்களை போலீசார் கைது செய்து, அவர்களிடம் இருந்து 1.25 கிலோ கஞ்சாவைப் பறிமுதல் செய்தனர்.
தூத்துக்குடியில் வடபாகம் காவல் உதவி ஆய்வாளர் சிவராஜா தலைமையிலான போலீசார் 1ம் ரயில்வே கேட் பகுதியில் ரோந்து சென்றனர். அவர்களைப் பார்த்ததும் அங்குள்ள மண்டபம் அருகே நின்றிருந்த 4 பேரில் இருவர் தப்பி ஓடியுள்ளனர்.
மற்ற இருவரை போலீசார் பிடித்து விசாரித்தபோது, அவர்கள் சிறுவர்கள் என்பதும், 1.25 கிலோ கஞ்சா பொட்டலங்கள் வைத்திருந்ததும் விசாரணையில் தெரிய வந்தது. போலீசார் வழக்குப் பதிந்து, இருவரையும் கைது செய்து அவர்களிடம் இருந்து கஞ்சாவைப் பறிமுதல் செய்தனர். தப்பியோடிய இரண்டு பேரையும் தேடி வருகின்றனர்.