1. Home
  2. தமிழ்நாடு

இன்று கேரளாவில் பெரியார் நினைவகம் திறந்து வைக்கிறார் முதல்வர் மு.க. ஸ்டாலின்..!

1

முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று சென்னையில் இருந்து விமானம் மூலம் கேரளா புறப்பட்டு சென்றார். கேரள மாநிலம் கோட்டயத்தில் ரூ.8.5 கோடியில் புனரமைக்கப்பட்ட தந்தை பெரியார் நினைவகம் மற்றும் நூலகம் திறப்பு விழா இன்று காலை நடைபெறுகிறது. திறப்பு விழாவுக்கு அம்மாநில முதல்வர் பினராய் விஜயன் தலைமை தாங்குகிறார். இந்த விழாவில் முதல்வர்  மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு நினைவகத்தை திறந்து வைக்கிறார். 

கேரள மாநிலம் கோட்டயத்தில் உள்ள வைக்கத்தில் கோவில் நுழைவுப் போராட்டம் தொடங்கப்பட்டு 100 ஆண்டுகள் கடந்துள்ளது. தந்தை பெரியார் சமூகநீதி காக்க போராடிப் பெற்ற வெற்றியை நினைவுகூரும் வகையில், தந்தை பெரியாருக்கு வைக்கத்தில் நினைவுச்சின்னம் அமைக்க உத்தரவிடப்பட்டு 1994-ம் ஆண்டு நினைவிடம் திறந்து வைக்கப்பட்டது. 

இந்த நினைவிடத்தை புனரமைக்கும் பணிகளை மேற்கொள்ள முதல்வர்  மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டிருந்தார். இதை தொடர்ந்து அமைச்சர் எ.வ.வேலு வைக்கம் பகுதியில் உள்ள பெரியார் நினைவகத்தில் ஆய்வு மேற்கொண்டார்.

கேரள மாநிலம் கோட்டயம் மாவட்டம் வைக்கம் பகுதியில் பெரியார் அறப் போராட்டத்தில் ஈடுபட்டு வெற்றி கண்டதன் நினைவாக தமிழக அரசு சார்பில் 70 சென்ட் பரப்பில் நினைவகம் அமைக்கப்பட்டுள்ளது.

இதில், பெரியாரின் வாழ்க்கை வரலாற்றை விவரிக்கும் புகைப்படங்கள் அடங்கிய நிரந்தர புகைப்பட கண்காட்சிக் கூடம், நூலகம், பார்வையாளர் மாடம், சிறுவர் பூங்கா உள்ளிட்டவை அமைந்து உள்ளது. 

மேலும் அமர்ந்த நிலையில் பெரியார் சிலை நிறுவப்பட்டுள்ளது. இந்த கட்டிடங்களில் ஏற்பட்ட கரையான் அரிப்பு போன்றவற்றால் நினைவிடம் பழமையானதால் தமிழக அரசு சார்பில் ரூ.8.5 கோடியில் புனரமைக்கப்பட்டுள்ளது.

இதை திறந்து வைக்க நேற்று முதல்வர்  மு.க.ஸ்டாலின் கேரளா சென்று உள்ளார். விழா முடிந்ததும் இன்று மாலை அவர் சென்னை திரும்புகிறார். 

Trending News

Latest News

You May Like