இன்று ரூ.37 கோடியில் அமைக்கப்பட்ட கண்ணாடி கூண்டு பாலம் : முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார்..!
கன்னியாகுமரியின் கடல் நடுவே அமைந்துள்ள விவேகானந்தர் பாறையின் அருகே மற்றொரு பாறையில் 133 அடி உயர திருவள்ளுவர் சிலை அமைந்துள்ளது. திருவள்ளுவர் பாறை பகுதியில் கடும் கடல் சீற்றம், கடல் நீர்மட்டம் தாழ்வு போன்றவை அடிக்கடி நிகழ்வதால் விவேகானந்தர் பாறைக்கு மட்டும் சென்று வரும் சுற்றுலா பயணிகள், பெரும்பாலான நாட்களில் திருவள்ளுவர் பாறைக்கு செல்ல முடியாமல் ஏமாற்றம் அடைந்து வருகின்றனர்.
இதனால் சுற்றுலா பயணிகள் திருவள்ளுவர் சிலைக்கு தினமும் சென்று வரும் வகையில் விவேகானந்தர் பாறையில் இருந்து திருவள்ளுவர் பாறைக்கு இணைப்புப் பாலம் அமைக்க வேண்டும் என சுற்றுலா ஆர்வலர்கள் நெடுநாளாக கோரிக்கை வைத்தனர். இந்த பாலம் அமைவதால் விவேகானந்தர் பாறைக்கு படகு சாவாரி மூலம் செல்லும் சுற்றுலா பயணிகள் அங்கிருந்து நேரடியாக நடந்தே திருவள்ளுவர் பாறைக்கு செல்ல முடியும்.
இதைத்தொடர்ந்து தமிழக அரசின் சார்பில் ரூ.37 கோடி செலவில் 77 மீட்டர் நீளத்திற்கு திருவள்ளுவர் சிலை - விவேகானந்தர் பாறை இடையே கண்ணாடி கூண்டு நடைபாலம் அமைக்கப்பட்டு வந்தது.
கன்னியாகுமரி கடலில் அமைந்துள்ள 133 அடி உயர திருவள்ளுவர் சிலை வெள்ளி விழாவில் முதல்வர் மு.க. ஸ்டாலின் பங்கேற்கிறார். இதற்காக அவர் இன்று கன்னியாகுமரிக்கு வருகிறார். தூத்துக்குடியில் இருந்து கார் மூலம் கன்னியாகுமரிக்கு வருகிறார். மு.க.ஸ்டாலினுக்கு குமரி மாவட்ட திமுக சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்படுகிறது.
கன்னியாகுமரிக்கு வந்ததும் மாலை 6 மணிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடலின் நடுவே அமைந்துள்ள அய்யன் திருவள்ளுவர் சிலையை பார்வையிடுகிறார். பின்னர் திருவள்ளுவர் சிலைக்கும், கடலின் நடுவே மற்றொரு பாறையில் அமைந்துள்ள விவேகானந்தர் மண்டபத்துக்கும் இடையே ரூ.37 கோடியில் அமைக்கப்பட்டுள்ள கண்ணாடி நடைபாலத்தையும் திறந்து வைக்கிறார். பிறகு திருவள்ளுவர் சிலையில் அமைக்கப்பட்டுள்ள லேசர் ஒளி காட்சியை அவர் கண்டுகளிக்கிறார்.
இந்த நிலையில், முதல்வர் மு.க.ஸ்டாலினை வரவேற்கும் விதமாக கன்னியாகுமரி கடலில் திமுக கொடிகள் பறக்க விடப்பட்டு உள்ளன. இந்த கொடிகள் கன்னியாகுமரி காந்தி மண்டபம் முதல் காட்சி கோபுரம் வரை உள்ள கடல் பகுதியில் மிதவைகள் மூலம் பறக்க விடப்பட்டு உள்ளன. இதற்கான ஏற்பாடுகளை திமுகவினர் செய்துள்ளனர்.