1. Home
  2. தமிழ்நாடு

வரும் 8ம் தேதி தமிழக அமைச்சரவைக் கூட்டம்..!

1

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தமிழக அமைச்சரவைக் கூட்டம்  வருகிற 8-ந்தேதி நடைபெற உள்ளது.

துணை முதலமைச்சர் நியமனம் மற்றும் அமைச்சரவை மாற்றத்திற்கு பிறகு நடைபெறும் இந்த அமைச்சரவைக் கூட்டத்தில் பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட உள்ளதாகத் தகவல்கள் வெளியாகி வருகின்றன.

தமிழகத்தில் மதுக்கடை மற்றும் போதைப் பொருட்களை ஒழிக்கப் பல்வேறு அரசியல் கட்சிகள் வலியுறுத்தி வரும் நிலையில் டாஸ்மாக் மதுக்கடைகளின் எண்ணிக்கையை மேலும் குறைக்க அரசு முடிவெடுக்கும் எனத் தெரிகிறது.

இது சம்பந்தமாக அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவெடுக்க வாய்ப்புள்ளதாகத் தகவல்கள் வெளிவந்தவண்ணம் உள்ளது.

தமிழ்நாட்டில் இப்போது 4 ஆயிரத்து 829 மதுக்கடைகள் உள்ளன. எப்.எல்.2, எப்.எல்.3 மதுக்கடைகள் 1,685 உள்ளது. மேலும் 400 மதுக்கடைகளுக்கு அனுமதி கேட்டு வந்த விண்ணப்பங்கள் அரசிடம் நிலுவையில் உள்ளது.

இந்த நிலையில் 500 மதுக்கடைகளை மூடுவதற்கு அமைச்சரவை கூட்டத்தில் முடிவெடுக்கப்படலாமென எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழ்நாட்டில் பூரண மதுவிலக்கு வேண்டும் என்று பல்வேறு அரசியல் கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் உளுந்தூர்பேட்டையில் நடத்திய மதுஒழிப்பு மகளிர் மாநாட்டிலும் மதுக்கடைகளை மூடுமாறு கோரிக்கை வைத்துள்ளார். பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் மதுவை ஒழிக்க வேண்டும் என்று கட்சி தொடங்கிய காலத்தில் இருந்தே வலியுறுத்தி வருகிறார்.

தமிழக அரசும் போதைப்பொருளுக்கு எதிராக ஒவ்வொரு மாவட்டத்திலும் விழிப்புணர்வு பேரணியை நடத்தி வருகிறது. இந்த நிலையில் மதுக்கடைகளுக்கு எதிராகப் பலரும் குரல் கொடுத்து வருவதால் முதற்கட்டமாக 500 மதுக்கடைகளை மூடுவதற்கு அரசு முடிவெடுக்கும் எனத் தெரிகிறது.

இது தவிர, அமைச்சரவைக் கூட்டத்தில் தமிழக அரசு செயல்படுத்தி வரும் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டம், புதுமைப் பெண் திட்டம், தமிழ் புதல்வன் திட்டங்கள் தொடர்பாகவும் முக்கிய முடிவுகள் எடுக்கப்பட வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது.

மேலும் புதிய தொழில் நிறுவனங்களுக்கு அனுமதி அளிப்பது தொடர்பாக அமைச்சரவைக் கூட்டத்தில் கொள்கை ரீதியான முடிவுகள் எடுக்கப்படும் எனத் தெரிகிறது.

Trending News

Latest News

You May Like